தமிழகத்தில் அடித்து ஆடும் பாஜக….. குறிக்கும் 60  தொகுதிகளின் பட்டியல் !

0

தமிழகத்தில் அடித்து ஆடும் பாஜக….. குறிக்கும் 60  தொகுதிகளின் பட்டியல் !

 

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் கடந்த 2 மாதங்களாகத்தான் அரசியல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பாஜகவின் தேசியத் தலைவர் அரசியல் சாணக்கியர், தேர்தல் தில்லுமுல்லு, ஆட்களை இழுத்து ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் என்னும் மாபெரும் கடலைத் தன் இரு கைகளால் அள்ளிக் குடித்த அகத்திய முனிவர் அமித்ஷா 2019 மே மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி விட்ட செய்தி யாரும் அறிந்திடச் செய்தியாக இருக்கலாம். அது உண்மைதான்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் திமுகக் கூட்டணி அமோக வெற்றி. ஒரு இடத்தில் தேனீயில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் வேட்பாளர் இரவீந்திரநாத் (ஓ.பன்னீர்செல்வம் மகன்) மட்டுமே வெற்றி பெற்றார். 2019 தேர்தல் வெற்றியைத் தில்லியில் பாஜக கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, அமித்ஷா தமிழ்நாடு பாஜகவிற்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பினார்.

“இன்னும் 6 மாதத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் பூத் வாரியாகப் பதிவான கட்சிகள் வாக்குகள், ஒரு கட்சி அந்தப் பூத்தில் அதிக வாக்குகள் பெற்றிருந்தால் அதற்கான காரணமும், அதிமுக, பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தால் அதற்கான காரணங்களையும் புள்ளி விவரங்களோடு அனுப்பி வைக்கவேண்டும்” என்பதுதான் அந்த அவசரச் செய்தி. தமிழ்நாடு பாஜக அமித்ஷா கேட்ட அனைத்துத் தகவல்களையும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அனுப்பி வைத்தது. தில்லியில் உள்ள பாஜகவின் தேர்தல் பணிக்குழு விவரங்களைத் துல்லியமாக ஆராய்ந்தது. பின்னர்த் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் யுக்திகள் முடிவு செய்யப்பட்டன.

- Advertisement -

அவை: தமிழ்நாடு பாஜகவிற்குத் தாழ்த்தப்பட்ட சமுதாயம் சார்ந்தவரைத் தலைவராக நியமனம் செய்வது தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணி (அ) தனித்துப் போட்டியிடுவது கூட்டணி என்றால் அதிமுகவிடம் 90 தொகுதிகளைப் பெறுவது 60 இடங்களில் வெற்றி பெறுவது கூட்டணி இல்லை என்றால் வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள பாமக, தென்மாவட்டங்களில் புதிய தமிழகம் சார்ந்த பள்ளர்கள், இந்து முன்னணியில் உள்ள நாடார், முக்குலத்தோர் வாக்குகள் மேற்கு மாவட்டங்களில் அருந்ததியினர் வாக்குகள், கடவுள் நம்பிக்கையுள்ள பிள்ளைமார் வாக்குகள், தமிழ்நாடு முழுவதுமுள்ள தேமுதிக வாக்குகள் இவற்றைப் பெற்றுத் தனித்து நிற்பது. அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளில் இடம் கிடைக்காதவர்களைப் பாஜகவில் சேர்த்துக் கொண்டு போட்டியிட வைப்பது (அ) சுயேட்சையாகப் போட்டியிட வைப்பது

சட்டமன்றத் தொகுதிக்கு 500சி செலவு செய்வது. வாக்காளர்களுக்குத் தலைக்கு .5டி கொடுத்துச் சராசரியாக ஒரு இலட்சம் ஓட்டை உறுதி செய்வது.

முஸ்லீம் கட்சிகளின் சார்பிலும் அல்லது எந்தக் கட்சியின் சார்பிலும் இஸ்லாமியர்கள் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டால் அவர்களைத் தோற்கடிக்க அந்தச் சட்டமன்றத் தொகுதிக்கு 1000சி செலவு செய்வது.

திமுக இந்து விரோதக் கட்சி என்பதையும் பெரியாரின் திராவிடர் கழகம் அரசியல் முகமூடி என்பதையும் தொடர்ந்து மக்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரச்சாரம் செய்து திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வது திமுக தலித் சமூகத்திற்கு அரசியல் வாய்ப்பை அளிக்க மறுக்கும் கட்சி என்பதைத் தலித் மக்களிடம் பரப்புவது. வட மாவட்டங்களில் வாக்குகளைப் பெற விடுதலைச் சிறுத்தைக் கட்சியை உடைத்து ஒரு பிரிவைப் பாஜக ஆதரவு சக்தியாக மாற்றிப் பறையர் வாக்குகளை உறுதி செய்வது

பாஜக வெற்றி பெற்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலித் சமுதாயம் சார்ந்தவர் என்று அறிவித்து அரசியல் களத்தில் பாஜக முன்னணியில் இருப்பது. இந்தப் பத்துக் கட்டளைகளை மீண்டும் படித்துப் பார்த்தால் இப்போது நடைபெறும் பாஜகவின் அரசியல் ஆட்டங்களுக்கான காரணம் புரிந்துவிடும்.

பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அருந்ததியர் இனத்தைச் சார்ந்த, வக்கீல் படிப்பில் முனைவர் என்னும் டாக்டர் பட்டம் பெற்ற எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாஜக அரசியல் அதிரடிகளைத் தொடங்கி வைத்தது. திமுகவின் துணைப் பொதுச்செயலர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி பாஜகவில் இணைந்தார். அடுத்த மாதத்தில் திமுகவின் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தலைமைக்குத் தகவல் தெரிவிக்காமல் தில்லியில் பாஜக தலைவரைச் சந்தித்தார். திமுக குடும்பக் கட்சி என்று தில்லியில் பேட்டி கொடுத்தார்.

சென்னை திரும்பிய கு.க.செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக ஆதரவு சுயேட்சை உறுப்பினராகச் செயல்படுகிறார். சிட்டிங் எம்.எல்.ஏ. என்னும் விக்கெட்டை வீழ்த்தி, திமுகவைப் பாஜக ஆட்டம் காண வைத்தது. தொடர்ந்து பாஜக தலைவர் முருகன், பல திமுக எம்.எல்.ஏ.கள் எங்கள் தொடர்பில் உள்ளனர் என்று கொளுத்திப்போட்டார். திமுக டிசம்பர் மாதக் குளிர்வராமலே நடுங்கிப் போய்விட்டது என்றே சொல்லலாம்.

பாஜக அதிமுகவோடு கூட்டணியைத் தொடரும் என்று சொல்லிக் கொண்டே, பாஜக முன்னணித் தலைவர்கள், பாஜக தனித்தே போட்டியிடும். இது தொண்டர் விருப்பம். பாஜக அதிமுக கூட்டணியில் 90 இடங்களில் போட்டியிடும். 60 இடங்களில் வெற்றிபெறும். பாஜக இப்போது வேகமாகத் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகின்றது. இளைஞர்கள் மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருப்பது எங்கள் கூட்டணியைப் பாதிக்காது. இதுபோன்ற வகையில் பரப்புரைகளைப் பாஜக தொடங்கிவிட்டது. அதில் பல செய்திகள் நகைச்சுவையாக இருக்கலாம். நம்பமுடியாதவைகளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு இலக்கைப் பாஜக நிர்ணயம் செய்து 2021 தேர்தல் வெற்றிக்கான அல்லது கூட்டணி வெற்றிக்கான பயணத்தைத் தொடங்கிவிட்டது என்பதே உண்மையாகும்.

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டில் ’தாமரை ……..யிரில் கூட மலராது’ என்று பதிவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தாமரை மலர்வது பாஜகவின் நோக்கமல்ல. அதை அதன் தலைவர் தெளிவுபடுத்தி விட்டனர். சூரியன் உதிக்கக்கூடாது என்பது தான் அவர்களின் முதன்மை நோக்கம். அதற்கான பாஜக என்ன விலையைக் கொடுக்கவும் தயாராக உள்ளது.

அமித்ஷா கொலை வழக்குகளில் நீதிமன்றத்தால் குஜராத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் உத்திரபிரதேசம் சென்று தங்கினார். அரசியல் பணிகளை அமைதியாகச் செய்துவந்தார். 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வந்தது. உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 1000சி செலவு செய்யப்பட்டது. மொத்தம் என்பதாயிரம் சி செலவு செய்யப்பட்டது. 2014 தேர்தல் முடிவில் பாஜக 72 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளில், சமாஜ்வாடி 4 தொகுதிகளில் பகுஜன் சமாஜன் 2 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றன. இந்த வரலாற்று சாதனைகளைச் செய்து முடித்தவர் அரசியல் சாணக்கியர் அமித்ஷா என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்கமுடியாது.

திரிபுரா சட்டமன்றத்தில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கு மிக அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக ஆட்சி அமைக்கப் போதுமான எண்ணிக்கை இல்லாத போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அதிக விலை கொடுத்து வாங்கி, ஆட்சியை அமைத்த அதிசயங்களைச் செய்துகாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர் அமித்ஷா…. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாகப் பாஜக வட்டாரங்கள் பெருமையோடு ‘காலரை’ தூக்கிவிட்டுக் கொண்டு கெத்தாக இருக்கிறார்கள்.

அதிமுகவோடு கூட்டணி இல்லை என்றால் அதிமுகவை இரண்டாக உடைப்பது. ஓபிஎஸ், இபிஎஸ் என்று அணிகளை உருவாக்குவது. ஓபிஎஸ் அணி பாஜகவோடு இருக்கும். சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தவுடன், அவரின் ஆசியோடு தினகரன் தொடங்கி வைத்துள்ள அமமுக கட்சி ஓபிஎஸ் அணியோடு இணைந்து அதிமுகவிற்குச் சொந்தம் கொண்டாடும். இபிஎஸ் அணியும் அதிமுகவுக்குச் சொந்தம் கொண்டாடும். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் சசிகலா தலைமையில் இயங்கும் ( ஓபிஎஸ்+தினகரன் இணைந்து ) அண்ணா திமுகவிற்குக் கிடைக்கும். இதற்கான பூர்வாங்க வேலைகளைப் பாஜக தொடங்கிவிட்டது. இதற்குச் சசிகலாவும் இசைவு தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரச் செய்திகள் கிடைத்துள்ளன.

சசிகலா, தினகரனைப் பொறுத்தவரை ஓபிஎஸ் எதிரி. இபிஎஸ் துரோகி என்று முடிவு செய்துள்ளனர். பாஜக தலைமையிலான கூட்டணியில் சசிகலா அதிமுக+ பாமக + தேமுதிக + புதிய தமிழகம் + ஜான்பாண்டியன் வேந்தர் கட்சி + இந்து முன்னணி கட்சிகள் இருக்கும்.

சென்னை தவிர்த்த வட மாவட்டங்களில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உடைப்பது என்ற வேலைகள் தில்லியில் தொடங்கப்பட்டுள்ளன. ‘அந்த’ நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கேட்ட மத்திய அரசின் நவோதயா பள்ளி அடுத்த கல்வியாண்டில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் உள்ளன. ‘அந்த’ மக்களவை உறுப்பினர் கொரோனா காலத்தில் கட்சிப் பணியை விடவும் காணொளிகள் மூலம் இலக்கியத் திறனாய்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார் என்பதன் மூலம் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவருக்கும் ‘அந்த’ மக்களவை உறுப்பினருக்கும் இடையே இடைவெளிகள் ஆரம்பித்துவிட்டன என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைக் கட்சி உடைந்தால் வட மாவட்டத்தில் பாஜகவால் பெரிய வெற்றியைப் பெறமுடியாது. காரணம் அங்கே வன்னியர், பறையர் மோதல் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. எனினும் விடுதலைச் சிறுத்தைகளைத் தேர்தல் களத்தில் சோர்வடையச் செய்யமுடியும் என்று பாஜக நம்புகிறது. பாஜக தலைவர் எல்.முருகன் 2021இல் பாஜக கொடி கோட்டையில் பறக்கும் என்றவுடன் இபிஎஸ் ஆதரவு அமைச்சர் உதயகுமார் மற்றும் முதல்வர் பழனிசாமியும் ‘யார் ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்” என்று கிண்டலடித்ததைப் பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தினகரன் திடீர் டெல்லி பயணமும், அதையடுத்த பெங்களூர் பயணமும் தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றே அரசியல் நோக்கர்கள் அவதானிக்கிறார்கள்.

வெற்றி பெறும் என்று பாஜக நம்பும் தொகுதிகள்

தமிழ்நாட்டின் எல்லையோர ஆந்திரம், கர்நாடகம், கேரளம் சார்ந்த மாநில மக்கள் வாழும் சட்டமன்றத் தொகுதிகள் பாஜகவால் குறி வைக்கப்பட்டுள்ளன. எல்லையோரங்களில் திராவிடக் கட்சிகளுக்கு அதிகச் செல்வாக்கு கிடையாது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். என்றாலும் கர்நாடக எல்லையில் தளி தொகுதியிலும், கேரளா எல்லையில் உள்ள விளவங்கோட்டிலும் அதிமுக டெபாசிட் இழந்தது என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தென்மாவட்டங்களில் பள்ளர், நாடார், தேவரை வணங்கும் முக்குலத்தோர் ஒன்றிணைத்துத் தனித்தொகுதிகளிலும் பொதுத்தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டுவது என்பது எளிதாக இருக்கும் என்று 90 தொகுதிகளில் போட்டியிட்டு 60 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது.

மாவட்ட வாரியாகப் பாஜக வெற்றிபெற நினைக்கும் தொகுதிகளின் விவரங்கள்:

 

திருவள்ளூர் – 1. திருத்தணி, 2. ஆவடி

சென்னை – 3.இராதாகிருஷ்ணன் நகர் 4. துறைமுகம், 5. ஆயிரம் விளக்கு 6. மயிலாப்பூர் 7. வேளச்சேரி

காஞ்சிபுரம் – 8.ஸ்ரீபெரும்புதூர், 9. காஞ்சிபுரம்

செங்கல்பட்டு – 10. தாம்பரம் 11. மதுராந்தகம்

வேலூர் – 12. காட்பாடி 13. வேலூர்

இராணிப்பேட்டை – 14.அரக்கோணம், 15.சோளிங்கநல்லூர்

திருப்பத்தூர் – 16.வாணியம்பாடி, 17.ஆம்பூர்

கிருஷ்ணகிரி – 18.ஓசூர், 19. தளி 20.வேப்பனஹள்ளி

தர்மபுரி – 21. பாலக்கோடு 22.பென்னகரம்

திருவண்ணாமலை – 23. ஆரணி 24. செய்யாறு

4 bismi svs

விழுப்புரம் – 25. வானூர், 26. விழுப்புரம் 27. திண்டிவனம்

கள்ளக்குறிச்சி – 28. ரிஷிவந்தியம் 29. உளுந்தூர்பேட்டை

சேலம் – 30.கங்கவள்ளி 31. ஏற்காடு 32. எடப்பாடி 33. வீரபாண்டி

நாமக்கல் – 34.இராசிபுரம் 35.திருச்செங்கோடு

ஈரோடு – 36.அந்தியூர் 37.பெருந்துறை

திருப்பூர் – 38.தாராபுரம் 39.உடுமலைப்பேட்டை

நீலகிரி – 40. கூடலூர்

கோவை – 41.வால்பாறை 42. தொண்டாமுத்தூர் 43. சூலூர்

திண்டுக்கல் – 43. நத்தம் 44.நிலக்கோட்டை

கரூர் – 45.அரவாக்குறிச்சி 46.கிருஷ்ணராயபுரம்

திருச்சி – 47.திருச்சி – 1 48.திருவெறும்பூர் 49.ஸ்ரீரங்கம்

அரியலூர் – 50.ஜெயங்கொண்டம்

கடலூர் – 51.பண்ருட்டி 52.சிதம்பரம்

மயிலாடுதுறை – 53. மயிலாடுதுறை 54. சீர்காழி

நாகப்பட்டினம் – 55.கீவளூர் 56.வேதாரண்யம்

திருவாரூர் – 57.திருத்துறைப்பூண்டி 58.நன்னிலம்

தஞ்சாவூர் – 59.கும்பகோணம் 60.பட்டுக்கோட்டை 61.பாபநாசம்

புதுக்கோட்டை – 62.கந்தர்வகோட்டை 63.ஆலங்குடி

சிவகங்கை – 64. காரைக்குடி

மதுரை – 65.மேலூர் 66.சோழவந்தான் 67.திருப்பரங்குன்றம் 68.உசிலம்பட்டி

தேனி – 69.பெரியகுளம், 70.கம்பம்

விருதுநகர் – 71.அருப்புக்கோட்டை 72.திருச்சுழி 73.ஸ்ரீவில்லிபுத்தூர்

இராமநாதபுரம் – 74.இராமநாதபுரம் 75.பரமக்குடி 76.முதுகுளத்தூர்

தூத்துக்குடி – 77.திருச்செந்தூர் 78.ஒட்டப்பிடாரம்

தென்காசி – 79.தென்காசி 80.கடையநல்லூர் 81.வாசுதேவநல்லூர் 82.சங்கரன்கோவில்

திருநெல்வேலி – 83.திருநெல்வேலி 84.நாங்குநேரி 85.பாளையங்கோட்டை 86.இராதாபுரம்

கன்னியாகுமரி – 87.நாகர்கோவில் 88.விளவங்கோடு 89.கிள்ளியூர் 90.பத்மனாபபுரம்

மேலும், திமுகவின் வாக்குகளைப் பிரிக்க நாம் தமிழர் கட்சி கைக்கொடுக்க உள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

இஸ்லாமியர்களைத் தோற்கடிப்பது முதல் கடமை என்றால் வலது, இடது கம்யூனிஸ்ட்டு கட்சிகளைத் தோற்கடிப்பது 2ஆம் கடமையாகப் பாஜக கொண்டுள்ளது. திமுகவின் முக்கியப் புள்ளிகள், அமைச்சராகும் வாய்ப்புள்ளவர்களைத் தோற்கடிக்கத் திமுகவில் உள்ளடி வேலை பார்க்கும் மாவட்ட, நகர, ஒன்றியச் செயலர்களுக்குப் பாஜகவின் கொடையாக ஒரு பெருந்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

இதையெல்லாம் தாண்டித் திமுக மட்டும் 150 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றால் மட்டுமே திமுகவால் ஆட்சி அமைக்க முடியும்.. திமுக 120 இடங்களைப் பெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றாலும் திமுகவிலிருந்து 20 பேரையும், கூட்டணிக் கட்சிகளில் உறுப்பினர்களை விலைக்கு வாங்கிப் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் வாய்ப்புகள் உள்ளன என்பதையே கடந்த கால அமித்ஷாவின் நடவடிக்கைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

பாஜக 60 சசிகலா (அதிமுக) மற்றும் கூட்டணிகள் 60 மொத்தம் 120 என்ற நம்பமுடியாத தேர்தல் கணக்கோடு தேர்தல் களத்தில் பாஜக இறங்கி அடித்து ஆடுகின்றது. ஒருவேளை பாஜகவின் இந்தக் கனவு பலிக்குமா? சூரியன் மேற்கில் மறையுமா? என்பதை 2021 தேர்தல் களம் நமக்குத் தெளிவுபடுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் வேலை செய்வது 2024 எம்.பி. தேர்தலில் பிஜேபிக்கு பயன்படும் என்பதை கணக்கு வைத்தே இந்த 60 தொகுதியில் வேலை செய்கிறார்கள் பிஜேபியினர் என்கிறார்கள் அரசியல் வல்லுநகர்கள்..

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.