‘அரசின் வெப்சைட்’-ல் காணாமல் போன 2 கரோனா நோயாளிகளின் சடலங்கள் !!!
‘அரசின் வெப்சைட்’-ல் காணாமல் போன
2 கரோனா நோயாளிகளின் சடலங்கள் !!!
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து தமிழக அரசு சார்பாக மீடியாக்களுக்கு தினமும் வழங்கப்படும் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் தஞ்சை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக இதுவரை இறந்த நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக தவறான புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீடியாக்களுக்கு வழங்கியுள்ள கரோனா புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கையின்;படி (மீடியா புல்லட்டின்), தஞ்சை மாவட்டத்தில் மே 23-ம் தேதியன்று (ஒரு நாளில்) கரோனா நோய்த் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 20. கடந்த ஆண்டிலிருந்து மே 23-ம் தேதிவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 457.
அதற்கு அடுத்த நாள் (மே 24-ம் தேதி) இறந்தவர்களின் எண்ணிக்கை 4. எனவே, மே 24-ம் தேதிவரை இறந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 461 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று (மே 25) ஒரு நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20. (11 பெண்கள் உள்பட 20 பேர் இறந்துள்ளனர்).
எனவே தஞ்சை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 481 என இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள மீடியாக்களுக்கான அறிக்கையில் 479 என தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் பிழை எங்கே, எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
‘இது அந்த அளவுக்கு ஒன்னும் அவ்வளவு பெரிய குற்றம் இல்லை. எண்களை கூட்டும்போது கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை’ எனக்கூறி இதை அவ்வளவு சாதாரணமாக புறந்தள்ளிவிட முடியாது. புறந்தள்ளிவிடவும் கூடாது.
அதற்கு காரணம், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் அதிகாரப்பூர்வமானவை. இப் புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை அதைப் பதிவேற்றிய டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அவரைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர், உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர் என பல நிலைகளைக் கடந்து, இறுதியில் ஐஏஎஸ் அதிகாரிகள் ‘சரிபார்த்து’ ஒப்புதல் அளித்த பின்னரே தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையாக மீடியாக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் இதுபோன்ற குளறுபடிகள் இருந்தால், அவை அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத சந்தேகம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதை வெளியிடும் மீடியாக்கள் மீது பொதுமக்களின் நம்பகத்தன்மை குறையும்.
இனிமேலாவது கரோனா புள்ளிவிபரங்கள் குறித்து மிகக் கவனமாக செயல்படுவார்களா அரசு அதிகாரிகள்?