வாசிப்பே_என்_சுவாசிப்பு ! பிரபல நகைச்சுவை படைப்பாளி அனுபவம் !

எல்லா தொடர்களுக்கும் நான் அடிமை.. சுஜாதாவின் விஸ்வரூபத்தை கண்டதும் இங்கே தான்... ரகமியின் தொடர்களும்

0

வாசிப்பே_என்_சுவாசிப்பு

2ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக கிடைத்த அனுபவம்!

2 dhanalakshmi joseph

கடைவீதிக்கு போய் வந்திருந்த அம்மா என்னை அழைத்து இந்தாடா எனக் கையில் கொடுத்தார்! அம்புலிமாமா என்று வண்ண அட்டையில் எழுதியிருந்த ஒரு புத்தகம்! விக்ரமனின் தோளில் தொற்றிக் கொண்ட வேதாளன் போல அன்று முதல் என்னை ஆக்ரமித்தது!

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்
- Advertisement -

- Advertisement -

பிறகு பாலமித்ரா, ரத்னபாலான்னு அடுத்த க்ரேடு சிறார் புத்தகங்களை நானே தேடி வாங்கி படித்துக்கொண்டேன்!

மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது மீண்டும் அம்மா ஒரு புத்தகம் வாங்கித் தந்தார்! ஒரு போஸ்ட் கார்டு அளவில் புத்தகம்! வழுவழுப்பான அட்டையில் புத்தகத்தை பிரிக்க முடியாதபடி..

மொத்த புத்தகத்தையும் ஒரு பெரிய ஸ்டேப்ளர் பின் அடித்து வைத்திருந்தனர்! மேலே ஒரு ஓரத்தில் முத்து காமிக்ஸ் என்ற பெயரும் வேதாளனின் முத்திரை மோதிரம் என்னும் தலைப்பும் என்னைக் கவர்ந்தன! அம்மாவே அந்த பின்னை பிரித்தும் கொடுத்தார்! முதல் கதையே அந்த “வேதாளன்” எனும் முகமூடி வீரனின் கதை!

என் முதல் ஹீரோவாக என் மனதிற்குள் புயலாக நுழைந்தார் வேதாளன். காட்டில் வேதாளனின் சாகசங்கள், அவரது காட்டு வாழ்க்கை, அவரது ஆதிவாசி நண்பர்கள், கபால வடிவ குகை, அவரது குதிரை, அவரது அல்சேஷன் நாயான டெவில், அவரது காதலி டயானா அனைவரும் எனக்குள்ளே வாழ்ந்தனர்!

அதிலும் காட்டை விட்டு அவர் நகரத்துக்கு சென்றால் நம்ம விஜயகாந்தின் புலன் விசாரணை கோட் & தொப்பி கெட்டப்பில் தான் பயணமாவார்! அதிலும் மண்டை ஓடு படமுள்ள வேதாளனின் மோதிரம் ஒரு உயிரற்ற ஹீரோ! அவர் விடும் கும் கும் குத்துக்கள் எதிரி முகத்தில் அந்த கபால முத்திரையை பதித்திருக்கும்.!

மெல்ல மெல்ல வேதாளனுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கும் அளவு அந்தக் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். அப்போது முத்து காமிக்ஸ் 30 பைசா தான்! அதன் பிறகு வந்த ஏராளமான ஹீரோக்களில் இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், மந்திரவாதி மாண்ட்ரெக் & லோதர், லாரன்ஸ் & டேவிட், டேஞ்சர் டயபாலிக் போன்ற..

ஹீரோக்கள் என் ஆதர்சமகினர்! லாரன்ஸ் டேவிட்டில் வரும் அ.கொ.தீ.கழகம் (அழிவு, கொள்ளை, தீமை) எல்லாம் இன்றும் என் நினைவில் உள்ளது.! திடீரென முத்து காமிக்ஸ் வருவது நின்று போனது! இந்திரஜால் காமிக்ஸ் வண்ணத்தில் வந்தது! ஆனால் அந்த கருப்பு வெள்ளையில் இருந்த அனுபவம் கலரில் இல்லை!

வாசிப்பே என் சுவாசிப்பு
சுவாசிப்பே என் வாசிப்பு
4 bismi svs

10 வயதிற்கு பின்பு வாரப்பத்திரிக்கைகள் படிக்கத்துவங்கி 12 வயதில் தொடர்கதைகளை பைண்டிங் செய்திருப்பார்கள்! அவற்றை படிக்கத்துவங்கினேன். சாண்டில்யன் அறிமுகமானார்! கல்கி, தேவன் அறிமுகமாயினர். சேலத்திலிருந்து சங்கம் வளர்த்த மதுரைக்கு குடியேறினோம். என் வாசிப்பு அங்குதான் மெருகேறியது!

என் அப்பா பக்கா தி.மு.க காரர் அதிகாலையில் முரசொலியும் தினகரனும் படிக்காவிட்டால் அவருக்கு பொழுது போகாது. இந்த நாளிதழ்களை நானும் வாசிப்பேன். அதில் வரும் அரசியல் செய்திகளும், பிற செய்திகளும் என்னைப் பெரிதும் கவரவில்லை! நேரெதிர் வீடு கணபதி சித்தப்பா வீடு அவர் காங்கிரஸ் காரர்.!

திமுக போல் அவர் கட்சிக்கு தனி பத்திரிக்கை இல்லை என்பதாலும் நல்ல வாசிப்பிற்காகவும், நடுநிலையான தொலைநோக்கு பார்வைக்காகவும் அவர் தினமணி வாங்குவார். ஒருநாள் சித்தப்பா வீடு வெள்ளையடிக்கப்பட்ட போது சித்தப்பா பெண் தங்கை உலகம்மாள் என் உடன்பிறந்த தங்கை உமா..(முகநூலில் உமா மகி)

நாங்கள் மூவரும் தான் சுத்தப்படுத்தினோம். அப்போது அவர் வீட்டில் இருந்து அறிவுப் பொக்கிஷமாக எனக்குக் கிடைத்தது தான் தினமணி கதிர் வார புத்தகங்கள்! மொத்தமாக ஒரு 40 புத்தகங்கள் இருக்கும்! அதை எடைக்கு போடாது சித்தப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி பெற்றுக் கொண்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

எனக்காக உதவிய தங்கைகள் உலகம்மாளுக்கும் உமாவிற்கும் நன்றிகள் பல. முரசொலி தினகரன் போன்ற கட்சி சார்பு பத்திரிக்கைகள் படித்த எனக்கு தினமணிக் கதிரை வாசித்த அனுபவம் புதுமையாக இருந்தது ! அந்த 40 புத்தகங்களைப் படித்த பின் நான் தீவிர தினமணிக் கதிர் வாசகனாகிப் போனேன்.

அதன் பின் வாராவாரம் என் ஞாயிறு சித்தப்பா படித்து விட்டு விட்டெறியும் தினமணிக்கதிருக்காக காத்திருப்பேன்.. ஞாயிறு எனக்கு அது படித்தால் தான் விடியும்..சில நேரங்களில் விரைவாகவும் பல நேரங்களில் தாமதமாகவும் அந்த பத்திரிக்கை கைவசப்படும். ரகமி எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய..

தொடர்கள்.. ராண்டார் கை எழுதிய புகழ் மிக்க மனிதர்கள் பற்றிய தொடர்கள், சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி தொடர், என் ஆசான் சுஜாதா கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதிய நிலா நிழல் தொடர், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்துத் தமிழுடன் பிரெஞ்சு கலாச்சாரத்தை சொல்லும் தொடரான பிரபஞ்சன்..

அவர்கள் எழுதிய வானம் வசப்படும் தொடர் என நான் மூழ்கி குளித்த முத்துக்கள் ஏராளம்.என்னை வேறு விதமான வாசிப்பு தளத்திற்கு அழைத்துப் போனது அந்த தினமணிக்கதிர் தான்! அதன் மூலமாகவே என் ஆசான் சுஜாதாவையும் பிரபஞ்சனையும் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தியது தினமணி. இதற்கு நடுவே ஜாம்பவான்கள்..

அசோகமித்திரன், லா.ச.ரா, புதுமிப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா, ஜி.நாகராஜன் கதைகளும் வந்தன. என்னைப் போன்ற சராசரி வாசிப்பனுக்கு தினமணி விருந்து படைத்தது 2 மணி நேரம் அந்தப் பத்திரிக்கை கை வர காத்திருந்தாலும் அத்துணை விஷயங்களும் மாபெரும் அறிவுக் கடல்! அதிலும் ராண்டார்கை எழுதிய..

எல்லா தொடர்களுக்கும் நான் அடிமை.. சுஜாதாவின் விஸ்வரூபத்தை கண்டதும் இங்கே தான்… ரகமியின் தொடர்களும் விறுவிறுப்பானது. இதன்பிறகே என் வாசிப்பனுபவம் பண்பட்டது. நான் தேடித் தேடி பல விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள தினமணிக் கதிர் தான் காரணம் என்பதை தயங்காது நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன்.!

இதில் எந்த சுயநலமோ துதியோ இல்லை! பிரபஞ்சனின் ஆனந்தரங்கப்பிள்ளையும், சுஜாதாவின் முகுந்தனும், ரகமியின் தியாகராஜ பாகவதர் & கலைவாணரும் ராண்டார்கையின் செண்பகராமன் பிள்ளையும், ஹிட்லரும், எம்டன் கப்பலும், சுசி கணேசனின் கிராம பூமியும் என்றென்றும் என்னைத் தாலாட்டும் 🩷🩷

– வெங்கடேஷன் ஆறுமுகம்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.