அரசுப் பள்ளி மாணவர்களை ‘விசாரணை என்ற பெயரில்’ மிரட்டி தாக்கிய போலீஸார் !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அரசுப் பள்ளி மாணவர்களை ‘விசாரணை என்ற பெயரில்’ மிரட்டி தாக்கிய போலீஸார்!

தஞ்சை அருகேயுள்ள வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் கல்வீச்சில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து, பெண் எஸ்ஐ ஒருவர் தலைமையில் பள்ளிக்குள் நுழைந்த போலீஸார் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு, 14 மாணவர்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டி, தாக்கியுள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

போலீஸார் இவ்வளவு துரிதமாகச் செயல்பட்டு மாணவர்களை மிரட்டி தாக்கியதற்கு காரணம் கல்வீச்சில் காயமடைந்த ஆசிரியையின் கணவர் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை (Vigilance and Anti Corruption)  இன்ஸ்பெக்டர் என்பதே எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் சக ஆசிரியர்கள்.

வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 476 மாணவர்கள் படித்து வருகின்றனர். 33 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இப் பள்ளியில் தற்போது முதல் இடைப்பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) காலை கணிதத் தேர்வு நடைபெற்றக் கொண்டிருந்தது. இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் ஒன்றின் தரைத் தளத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் பிளஸ் ஒன், ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் மும்முரமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

சுமார் 11 மணியளவில் ரெஸ்ட் ரூமுக்குச் சென்றுவிட்டு அவ்வழியே நடந்து வந்துகொண்டிருந்த சரண்யா என்ற ஆங்கில ஆசிரியை மீது எங்கிருந்தோ இருந்து வந்த ஒரு கல் விழுந்ததில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அக் கல்லை யார் எறிந்தது என்பது அவர் உள்பட அங்கிருந்த எவருக்கும் தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை சரண்யா பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்குச் சென்று அவரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியை சரண்யாவை அதே பள்ளியில் பணிபுரியுரியும் பத்மநாபன் என்ற வரலாற்று ஆசிரியரின் காரில் சக ஆசிரியர்கள் இருவர் வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

7

அங்கே அவருக்கு புற நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அரை மணி நேரத்தில் அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளார். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட கண்காணிப்பு ஊழல் தடுப்புத்துறையில் பணியில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தனது கணவருக்கு  தகவல் தெரிவித்துள்ளார் ஆசிரியை சரண்யா.

அதைத் தொடர்ந்து, வல்லம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் திடுதிப்பென பள்ளிக்குள் நுழைந்த போலீஸார்,  பிளஸ் ஒன் படிக்கும் வீரமணி, ஒய்.சிவா, எம்.சிவா, ஜனுவர்ஷன், சந்தோஷ், அருண், ராகவன், அபினேஷ், முத்து உள்ளிட்ட 14 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கணினி ஆய்வகத்திற்கு (Computer Lab) அழைத்துச் சென்று ‘கல்லை எறிந்தது யார்?’ எனக் கேட்டு மிரட்டி, தாக்கியுள்ளனர்.

அப்போது பெண் எஸ்ஐயும் மற்றொரு காவலரும் மட்டும் சீருடையில் இருந்துள்ளனர். ஏனைய காவலர்கள் சாதாரண உடையில் இருந்துள்ளனர். போலீஸாரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 8) காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கே பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

தலைமை ஆசிரியரின் உரிய அனுமதியின்றி போலீஸார் பள்ளிக்குள் நுழைந்து அவர்கள் இஷ்டத்துக்கு மாணவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டி தாக்கிய சம்பவத்திற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடைபெற்ற சம்பவத்திற்காக பள்ளித் தலைமை ஆசிரியர் கருணாநிதி மாணவர்களின் பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.  இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

5

இதற்கிடையே, தங்களுக்கெதிராக பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த வல்லம் காவல் நிலைய போலீஸார் ஆசிரியை சரண்யாவிடமிருந்து ஒரு புகார் மனுவைப் பெற்று அவருக்கு மனு ரசீது அளித்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற விசாரணையின்போது பள்ளித் தலைமை ஆசிரியரையோ வேறு எந்தவொரு ஆசிரியரையோ அந்த அறைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை என்கின்றனர் விசாரணைக்குள்ளான மாணவர்கள்.

போலீஸாரால் தாக்கப்பட்ட மாணவர் வீரமணி கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியை சரண்யா செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பில் சென்றுவிட்டு இன்று (புதன்கிழமை) பணிக்கு வந்துள்ளார்.

இதற்கிடையே, தன் மீது கல் எறிந்தது யார் என உறுதியாக தெரியாத நிலையில், பள்ளி வளாகத்துக்குள் நடைபெற்றுள்ள இப்பிரச்சினையை ஆசிரியை சரண்யா தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் முறையிட்டு சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு பதிலாக தனது இன்ஸ்பெக்டர் கணவரிடம் தெரிவித்து பிரச்சினையை பெரிதாக்கியது சக ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“ஸார்,  ஆசிரியை சரண்யா பட்டதாரி ஆசிரியை. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துபவர். இவருக்கும் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்நிலையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் இவர் மீது எதற்காக கல் எறிய வேண்டும்?

ஒருவேளை தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களில் எவரேனும் ஒருவர் மற்றொரு மாணவர் மீது ‘விளையாட்டாக’ கல்லை எறிந்து இருக்கலாம். அது குறி தவறி அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை மீது எதேர்ச்சையாக விழுந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு உள்ளது,” என்கின்றனர் சக ஆசிரியர்கள்.

“தன் மீது கல் எறிந்தது யார் என உறுதியாக தெரியாத நிலையில் ஆசிரியை சரண்யா இதை இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க வேண்டியதில்லை.

தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் முறையிட்டு விசாரணை நடத்த சொல்லி இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து இருக்கலாம். தற்போது பொதுமக்கள் மத்தியில் பள்ளிக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது,” எனக் கூறி ஆதங்கப்டுகிறார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.பார்த்தசாரதி.

ஆனால் இப்பிரச்சினையை தனது இன்ஸ்பெக்டர் கணவரிடம் கூறி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீஸாரைக் கொண்டு துன்புறுத்தியது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்கின்றனர் சக ஆசிரியர்கள். இந்நிலையில், மாணவர்களுக்கு எதிரான வல்லம் காவல் நிலைய போலீஸாரின் அத்துமீறிய செயலுக்கு இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வே.அர்ஜுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிகளின்படி, குற்றச் செயல்களில் ஈடுபடும் பதினெட்டுவயதுக்குட்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தும் போலீஸார் சாதாரண உடையே அணிந்திருக்க வேண்டும். சீருடை அணிந்திருக்கக் கூடாது. குற்றச் செயல் புரிந்ததாகக் கருதப்டும் சிறார்களை மிரட்டக் கூடாது. குற்றத்தை ஒத்துக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கக் கூடாது.

ஆனால், வல்லம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் இவ்விதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

சீருடையில் பள்ளிக்குள் நுழைந்ததோடு, விசாரணை என்ற பெயரில் மாணவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியரையோ அல்லது வேறு எந்தவொரு ஆசிரியரையுமோ அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை போலீஸார்.

குற்றத்தை ஒத்துக்கச் சொல்லி நிர்ப்பந்தம் செய்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர் போலீஸார். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியரின் (RDO) விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வே.அர்ஜுன்.

ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றனர் போலீஸார்.  “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் அப் பள்ளிக்குச் சென்று மாணவர்களை அழைத்து விசாரித்தோம். இதில் எந்தவொரு விதிமீறலும் தவறும் இல்லை” என்கின்றனர் போலீஸார்.

6
Leave A Reply

Your email address will not be published.