உடல் நலனில் அறியாமையும் அலட்சியமுமே பாதி நோய்க்கு காரணம்!
உடல் நலனில் அறியாமையும் அலட்சியமுமே பாதி நோய்க்கு காரணம்!
சமீபத்தில் என்னை சந்தித்த 50 வயது மதிக்கத்தக்க சகோதரர் ஒருவர் கடந்த சில வருடங்களாக நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்புக்காக என்னிடம் மருத்துவம் பார்த்து வருகிறார். மருத்துவம் என்னிடம் பார்த்து வருகிறாரே அன்றி என்னை பிரதிமாதமோ அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறையோ நான் கோரும் நாளில் சந்திக்க மாட்டார் அவருக்கு ரத்த அழுத்தம் 190/110 mm Hg என்ற அளவில் அதிகமாகவும் ரத்த சர்க்கரை அளவுகள் 200க்கு மேல் என்ற நிலையிலும் இருக்கும்.
நானும் அதற்குரிய உணவுமுறை மற்றும் மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து முப்பது நாட்களில் வாருங்கள் என்று கூறினால் ஆறு மாதங்கள் கழித்து என்னை சந்திக்க வருவார். வரும் போது எந்த பரிசோதனையும் செய்து வர மாட்டார். இவ்வாறாக ஆறு மாதங்களுக்குப் பிறகு என்னை சந்திக்க வந்தார். வந்தவர் தானாகவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை குறைத்து உண்பதாகக் கூறினார். வீட்டில் சுகர் பார்த்ததில் கம்மியா இருந்தது . பிரஷர் பார்த்து நார்மலாக இருந்தது அதனால் நானே சில மாத்திரைகளை நிறுத்தி விட்டேன். இப்போது நன்றாக இருக்கிறது என்றார்.
தற்போது என்னை சந்திக்க வந்ததர்க்கான காரணம் இரண்டு கால்களிலும் நீர் சுரந்து நல்ல வீக்கம் இருந்தது அதனால் அவரது சிறுநீரகங்களை சோதித்து பார்த்ததில் யூரியா மற்றும் க்ரியாடினின் அளவுகள் மிக அதிகமாக இருந்தன. அவரது ரத்த அழுத்தம் 170/110 என்றும் ரத்த க்ளூகோஸ் 280 mg/dl என்ற அளவில் இருந்தது. இத்தனைக்கும் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பினால் தனது ஒரு பக்க கண்பார்வையை முழுமையாக இழந்தவர் அவர். மற்றொரு பக்கம் கண் பார்வை மங்கலாகி வருகிறது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது இந்நிலையில் தற்போது சிறுநீரக நோயும் சேர்ந்துள்ளது. இதை நான் என்னவென்று சொல்வது?
நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்புக்கு முறையான மருத்துவர் கண்காணிப்புடன் சிகிச்சை எடுப்பதும் தொடர் கண்காணிப்பில் மாதம் ஒரு முறையோ இரண்டு மாதங் களுக்கு ஒரு முறையோ மருத் துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதே சரியான வழிமுறை. இங்கு பலரும் மருத்துவரை வருடம் ஒருமுறை ஏதாவது பிரச்சனை வந்தால் பார்க்கலாம் என்ற கோணத்தில் அணுகுவது தவறான போக்காகும் மருத்துவரின் அறிவுரையின்றி சுயமாக மருந்துகளை குறைப்பதும் நிறுத்துவதும் கூட்டுவதும் தவறு.
ஆபத்தானது இவரது விசயத்தில் ரத்தக் கொதிப்புக்கும் நீரிழிவிற்கும் கொடுக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் கண்காணிப்பின்றி அறிவுரையின்றி குறைத்ததால் சரியாக கட்டுப்படாமல் அதனால் சிறுநீரகம் செயலிழந்துள்ளது.
இனியேனும் அவர் நல்வழி பெற்று மேலும் பல இன்னல்களுக்கு ஆகாமல் இருக்க அவருக்கு வேண்டுகோள் விடுத்து சிறுநீரக நோய் சிறப்பு நிபுணரிடம் பரிந்துரைத்துள்ளேன் ஏற்கனவே கண்பார்வையை இழந்து தற் போது சிறுநீரகத்தையும் இழந்து தான் இந்த பாடத்தை கற்க வேண்டுமா என்று உள்ளபடி மனம் நொந்தேன் நன்றி!“
– Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை