ஆன்லைன் வதந்திகளுக்கு ஆப்பு Fact Checking Unit!
ஆன்லைன் வதந்திகளுக்கு ஆப்பு Fact Checking Unit!
மாற்றங்களுக்காக யுகங்கள் காத்துக்கொண்டிருந்த காலம் மறைந்து, இன்று ஒரு நொடிப்பொழுதில் தலைகீழ் மாற்றத்தை உண்டுபன்னும் வித்தையை கைக் கொண்டிருக்கிறது, தொழிற்நுட்ப யுகம். ”சமூக வலைத்தளங்கள்” என்பது நவீன தொழிற்நுட்ப யுகம் தந்த கொடை.
ஒருவனை அரியணையில் ஏற்றவும், ஏற்றத்தில் நிற்பவனை சடுதியில் குப்புறத்தள்ளவுமாக சாதகம், பாதகம் இரண்டும் ஒருசேர கொண்ட பயன்படுத்து பவனின் எண்ணங்களை சார்ந்தியங்கும் போர்வாளுக்கு இணையானது இந்த சமூக வலைத்தளங்கள். சமூக வலைத்தளங்களை கையாளும் தொழிற்நுட்ப அணி என்ற ஒரு அரசியல் பிரிவு இல்லாத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு இதன் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும் காலம்.
அதேசமயம், கணினியில் தட்டச்சு செய்யத் தெரிந்தவ னெல்லாம் ’கருத்து கந்தசாமி’ களாக வலம் வருவதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதோடு மட்டுமன்றி; வன்மத்தோடும் தீயநோக்கத்தோடும் வன்ம மான கருத்துக்களை வெளியிடும் விஷமிகளும் புலங்கும் தளமாக இவையிருப்பதால் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உண்மைப் போலவே உலவும் உள்நோக்கம் கொண்ட பொய்ச்செய்திகள்; வன்முறைகளுக்கு வித்திடும் சமூக வலைத்தளங்களின் விஷமப்பிரச்சாரங்களை எதிர்கொள்வதென்பது அரசுக்கு சவாலான ஒன்றுதான்.

இந்த சவாலை சமாளிக்கும் வகையில்தான், தெலுங்கானா, கர்நாடாகவைத் தொடர்ந்து தமிழகத்திலும் Fact Checking Unit உருவாக்க முடிவு செய்து, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், உள்ளிட்ட அரசு தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும், அது சரியான முறையில் மக்களை சென்றடைகிறதா, திரிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய இந்த Fact Checking Unit உருவாக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தலைமை இயக்குநர் – 1, திட்ட இயக்குநர், இணை இயக்குநர் அரசு பதவிகள், இது போக 73 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருவல்லிக் கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தின் இரண்டாவது மாடியில் இவ்வலுவலகம் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, தமிழகத்தில் வாட்சப் வதந்திகள் எனப்படும் பொய்ச்செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய் ந்து வெளியிடுவதற்கென்றே, உருவாக்கப்பட்ட வலைத் தளம் என்றால் அது யுடர்ன் (You Turn) முகநூல் பக்கம். Fact Checking துறையில் அங்கீகாரம் பெற்ற ஒரு சமூக வலைத்தளமாக பெயரெடுத்திருக்கிறது.
அத்தளத்தை உருவாக்கி நடத்தியவர்களுள் ஒருவரான ஐயன் கார்த்திக்கேயன்தான் அரசு உருவாக்கியிருக்கும் Fact Checking Unit-க்கு தலைமை பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது சரியான தேர்வு. புதிய துறை, புதிய பொறுப்பு கூடவே சமூகப் பொறுப்பும் கொண்ட இப்பணி சிறக்க ஐயன் கார்த்திக்கேயனுக்கு அங்குசம் சார்பில் வாழ்த்துக்கள்!
– அன்புடன் ஆசிரியர்