திரௌபதி முர்மு – யஷ்வந்த் சின்கா ! குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆரம்பமாகும் சதுரங்க அரசியல் ஆட்டம் !
-ஆசைத்தம்பி
திரௌபதி முர்மு – யஷ்வந்த் சின்கா குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆரம்பமாகும் சதுரங்க அரசியல் ஆட்டம் !
16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 சூலை 2022 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் முடிவு 21 சூலை 2022 அன்று வெளியிடப்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்மு 24 சூன் 2022 அன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் திரிணாமுல் காங்கிரசு கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா 27 சூன் 2022 அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இருவரின் வேட்புமனுகளும் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் வேட்பாளர்கள் இந்திய முழுதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஆளும் கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு
பாஜக கூட்டணி வேட்பாளர் இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 64 வயதான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு ஜூன் 20 பிறந்தநாள். ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்தவர். திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார். ஒடிசா மாநில அமைச்சர் பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற அவர் பெருமையை பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவருக்கு வயது 85. ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்கியிருந்தது அக்கட்சி. இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் முறை
குடியரசுத் தலைவர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் பட்டியல் வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் – முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
வாக்குகள் எண்ணப்படும்போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல் தெரிவாகத் தேர்ந்தெடுத்திருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
ஆளும்கட்சி – எதிர்கட்சி வாக்கு விவரங்கள்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவாக உள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் கணிக்கப்படுகிறது.
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க விரும்பாது. வெற்றிக்காக என்ன விலையும் கொடுக்க பாஜக தயார் நிலையில் உள்ளது. எதிர்கட்சிகளின் வாக்குகளில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள YSR காங்கிரஸ் கட்சி பாஜகவை ஆதரிக்கின்றது. இதன்மூலம் பாஜக வெற்றிக்கான 51% வாக்குகளைத் தாண்டி 55% விழுக்காடு வாங்கிவிடும். மாரட்டியத்தில் தற்போது நடந்துமுடிந்துள்ள ஆட்சி மாற்றத்தில் 38 சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்கும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகள் இன்னாருக்குதான் வாக்களிக்கவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பாஜக வெற்றிபெறுவதற்கு எதிர்கட்சிகளில் உள்ள அதிருப்தி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களை இனம் கண்டு அவர்களுக்கு கொடுக்கவேண்டிய வெகுமதியை அளித்து, வெற்றியை எப்படியும் ஈட்டிவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆளும் கட்சியின் வேட்பாளருக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தந்துகொண்டிருக்கிறார். “மோடியின் ஆட்சி அரசியல் சாசனங்களை மீறி நடந்துகொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்திவரும் மாநிலங்களில் ஆளுநர்கள் காங்காணிகளைப்போல அமர்த்தி, ஆட்சிக்கு இடையூறு செய்து வருகின்றது” என்று தன் பரப்புரையில் கூறிவருகிறார். இவர் வாதங்களில் உண்மை இருந்தாலும் அவை வாக்குகளாக மாறாது என்ற நிலையில்தான் யஷ்வந்த் சின்காவின் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிக்கோட்டைத் தொடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
-ஆசைத்தம்பி