ஸ்ரீரங்கம் படித்துறையில் அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் ! அரசியலாக்கிய எடப்பாடி ! மாவுக்கட்டுப் போட்ட போலீசார் !
“திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர். நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை. கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.
தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?” என்று உள்ளூர் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு உலக பொருளாதாரத்தோடு ”கனெக்ட்” செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக, தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் குரல் எழுப்பி வந்தாலும், பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பிறகு, அத்தகைய எதிர்ப்புக் குரலின் வீச்சு பலதரப்பிலிருந்தும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் சம்பவத்தில் என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த 17 வயதான ரஞ்சித் கண்ணன், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தவர். ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கீதாபுரத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான அத்தை சாந்தியின் வீட்டிற்கு வந்தவர், சம்பவத்தன்று (ஆக-02) காலை, ரஞ்சித்தும் அவரது அத்தை மகன் ஹரியை அழைத்துக் கொண்டு, கரைபுரண்டோடும் காவிரியின் அழகை ரசிக்க சென்றிருக்கின்றனர்.
காவிரி பிரதான ஆற்றுப்பாலம் மற்றும் அம்மா மண்டபம் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கோனோர் குவிந்திருந்த சூழலில், ஸ்ரீரங்கம் கீதாபுரத்தில் புஷ்பக் நகர் காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.
அதே பகுதியில் அங்கு ஏற்கெனவே குழுவாக, நவீன்குமார், விஜய், சுளுக்கி ரமேஷ் (எ) சுரேஷ், மதன், பிரகதீஸ்வரன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். தாங்கள் குழுவாக இருக்கும் பகுதிக்கு புதியதாக இருவர் வருவதை கண்டு, எதற்காக இங்கு வந்தீர்கள் என்பதாக அவர்கள் கேட்க, அதற்கு ரஞ்சித் முறைத்ததாக கூறப்படுகிறது.
இதனை அவமதிப்பாக கருதிய அந்த கும்பல், ரஞ்சித் கண்ணனை சரமாரியாக கூட்டாக சேர்ந்து தாக்கியிருக்கின்றனர். கைகளாலும், அங்கு கிடந்த கட்டைகளைக் கொண்டும் கண்மூடித்தனமாக தொடுத்த தாக்குதலில் நிலைக்குலைந்து போயிருக்கிறார் ரஞ்சித் கண்ணன்.
உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜி.வி.என். மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மேற்படி கும்பல் கடுமையாகத் தாக்கியதில் ரஞ்சித் கண்ணனின் நுரையீரலிலும், வயிற்றிலும் உள்புறமாக ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்.
ரஞ்சித் கண்ணனை தாக்கிய கும்பலில் சுளுக்கி சுரேஷ் (எ) சுரேஷ் என்பவன், சி பிரிவு ரவுடி பட்டியலில் பெயர் இடம்பெற்றவன். மதன் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள். 18 வயதிற்கும் கீழான சிறார்கள் என்பதால், மதன் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் சிறார் நீதிக்குழுமம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
குற்றப்பின்னணியைக் கொண்ட சுளுக்கி சுரேஷ் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரும் போலீசார் பிடிக்க முயன்றபோது, வழுக்கிவிழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறார்கள் இருவரைத் தவிர மற்ற மூவருக்கும் ஆக-18 வரை நீதிமன்றக்காவலில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
”ரீல்ஸ் மோகம் போல, ரவுடித்தனம் செய்வதும்கூட இப்போது பேஷனாக மாறியிருக்கிறது. “கெத்து” காட்டுவதற்காகவே தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடும் போக்கும் இளசுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மிக முக்கியமாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் இளசுகள் திசைவிலகி செல்வதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மற்றபடி, ரவுடிக் கும்பலின் அரம்பத்தனங்களும், ஆதாயக்கொலைகளும் எல்லா ஆட்சியிலும் நிகழ்ந்து கொண்டுதான் வந்திருக்கிறது. அவற்றின் புள்ளி விவரங்களின் எண்ணிக்கையில் வேண்டுமானால், கூடுதல் குறைவான மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி, இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நடைபெறக்கூடிய ஒன்றுதான். ” என்கிறார்கள், போலீசு வட்டாரத்தில்.
”திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் இதுபோன்ற விவகாரங்களில் பெரிய அளவில் கருத்து சொன்னது கிடையாது. இப்போது எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.” என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
இதுபோன்ற விவகாரத்தில், போலீசு வழக்கம் போல தமது கடமையை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். என்ன ஒன்று, எடப்பாடியின் எக்ஸ் தள பதிவால், குற்றப்பின்னணி கொண்ட குற்றவாளிகள் இருவர் ”மாவுக்கட்டு” போட்டாக வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
– ஆதிரன்.