திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி
திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி ! நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும் மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்காகவும் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதென தலைமைக்கு கடிதம் கொடுத்துவிட்டதாகவும் தலைமையின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்த சூழலில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் திருச்சி மாநகர் மாவட்ட துணைசெயலருமான கோ.ஜெயகர்ணா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
”எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேலைப் பளுவின் காரணமாகவும்” தான் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கும் அவர், “என்னுடைய உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் கட்சியில் சரியான அங்கீகாரம் இல்லை” என்பதாகவும் அந்த விலகல் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், “விடைபெற்று செல்லும் நேரத்தில் கட்சியை குறை சொல்ல விரும்பவில்லை” என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். திடீர் ராஜினாமா முடிவுக்கு என்னதான் காரணம் என சொந்தக் கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, அவரது இந்த அதிரடி முடிவு.
இதில் வேடிக்கை என்னவெனில், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக கோ.ஜெயகர்ணா அறிவித்த அந்த ராஜினாமா கடிதமே, அக்கட்சியின் லெட்டர் பேடிலேயே வெளியாகியிருக்கிறது என்பதுதான். அதுவும், ஆக-05 அன்று வெளியான அவரது ராஜினாமா கடிதத்தில், ஆக-03 என்பதாக தேதி குறிப்பிடப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இதில் கூடுதல் சுவாரஸ்யம், “நீங்கள் குறிப்பிடுவதைப்போல இதுவரையில் எங்களுக்கு அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் அவர் வழங்கவில்லை. பிசினஸை கவனிக்க முடியவில்லை. வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்பதாக வாய்மொழியாக மட்டுமே தெரிவித்தார்” என்கிறார் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன்.
யார் இந்த ஜெயகர்ணா ?
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயகர்ணன், அடிமட்டத்திலிருந்து தனது சொந்த உழைப்பால் உயர்ந்து தொழிலதிபராக உருவெடுத்தவர். முதன்முதலில் செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் டீலராக களத்தில் இறங்கியவர், இன்று ஆக்சினா என்ற குழுமத்தின் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
ஹூண்டாய் கார், ராயல் என்ஃபீல்டு புல்லட், சுசுகி மோட்டார் மற்றும் ஐபோன் ஆகிய நிறுவனங்களின் டீலராகவும் இருந்து வருபவர். இவருக்குச் சொந்தமாக திருச்சி தில்லைநகரில் ஆக்ஸினா என்க்ளேவ் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. தனியே கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தவர், கட்சியில் சேர்ந்த புதிதிலேயே, மதுரையில் அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் கைதாகி 15 நாள் சிறைவாசத்தை அனுபவித்தவர்.
எந்த வழக்கிலும் சிக்காதவர், எவரிடமும் வம்பு தும்புக்கு போகாதவர் அமைதியான அரசியல்வாதி என்று அறியப்பட்ட, கோ.ஜெயகர்ணா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதற்கு காரணமே, கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறுதான் என்கிறார்கள்.
ஆக்ஸினா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜெயகர்ணா!
பாஜகவின் முன்னணி நிர்வாகி, தொழிலதிபர் என்ற அடையாளங்களைத் தாண்டி, கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவரது காதல்தான் ஜெயகர்ணனின் தனித்த அடையாளம் என்கிறார்கள். தனது குழுமத்தின் பெயரான ஆக்ஸினா பெயரிலே தனி கிரிக்கெட் டீமை கட்டமைத்திருக்கிறார், ஜெயகர்ணன்.
அந்த அணிக்கு அவர்தான் கேப்டன். மாவட்டங்களுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே நடைபெறும் டோர்னமெண்டுகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்ற அணி என்ற பெருமையையும் கொண்டிருக்கிறது ஆக்ஸினா அணி.
“ஒரு காலத்தில் அவரது டீமில் நல்ல பிளேயர்ஸ் இருந்தார்கள். இப்போது, அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியான ஆட்கள் கிடையாது. ஆனாலும், தனது பழைய அடையாளத்தை விட்டுக்கொடுக்கவும் அவர் தயாராக இல்லை. எப்படியாவது தங்களது அணிதான் முதல் பரிசை பெற்றாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்தவராக மாறிப்போனார்” என்கிறார்கள், அவரைப்பற்றி அறிந்தவர்கள்.
”திருச்சி காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய T-20 ஸ்டேட் லெவல் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி, திருச்சியில் ஆக 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி, ஆக-04 அன்று திருச்சி சாரநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில்தான், இறுதிப்போட்டியில் தங்களது அணியை எதிர்த்து விளையாட இருந்த மெட்லைன் அணிக்கு எதிராக சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார் ஜெயகர்ணன்.
விளையாட்டு மைதானத்தில் தங்களது அணி வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய, ஜெயகர்ணனை கண்டித்தத்தற்காக, மெட்லைன் அணியின் கேப்டன் வீரமணி என்பவரை தாக்கியிருக்கிறார். தான் தாக்கியது மட்டுமின்றி, வெளியிலிருந்து நால்வரை வரவழைத்து அவர்களை வைத்து தாக்கியிருக்கிறார்.” என்கிறார், வீரமணியின் நண்பரும் வழக்கறிஞருமான எஸ்.ரஞ்சித்.
கிரிக்கெட் விளையாட்டும் ஈகோவும்தான் காரணமா?
ஜெயகர்ணன் தாக்கியதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும், மெட்லைன் அணியின் கேப்டன் வீரமணியை நேரில் சந்தித்தோம். “கிரிக்கெட் விளையாட்டில்தான் அவர் எனக்கு அறிமுகம். தனிப்பட்ட எந்த பகையும் அவருடன் கிடையாது. கிரிக்கெட் மைதானத்தில் எங்கள் அணி வீரர்களிடம் தேவையில்லாமல் தகராறு செய்தார். அவர்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசினார்.
எங்கள் அணி வீரர்களை அவர் அவமானப்படுத்துவதை பார்த்து சகிக்க முடியாமல்தான், நான் அவரிடம் தட்டிக்கேட்டேன். நான் யார் தெரியுமா? என் பின்னணி என்ன தெரியுமா? தேவையில்லாமல் என்கிட்ட வச்சுக்காதே என அங்கேயே மிரட்டினார். நான் பயந்துபோய் 100-க்கு போன் செய்துவிட்டேன். போலீசார் வந்து விசாரித்தார்கள்.
அவர்களும் விளையாட்டு போட்டியில் தகராறு என்று சாதாரணமாக விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஜெயகர்ணனும் அப்போது எதுவும் செய்யவில்லை. அதற்குபிறகு, கொஞ்ச நேரத்தில் வெளியிலிருந்து வந்த நபர்கள் யார் வீரமணி என கேட்டு என்னை தாக்கினர். கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் பின் மண்டையில் அடிபட்டிருக்கிறது. வீக்கம் இன்னும் குறையவில்லை. அடிக்கடி மயக்கம் வருகிறது.” என்கிறார், வீரமணி.
மேலும், “இதுகுறித்து எடமலைப்பட்டி போலீசு நிலையத்தில் புகார் செய்தேன். இதுவரை சி.எஸ்.ஆர். கொடுக்கவில்லை. எஃப்.ஐ.ஆரும் போடவில்லை. போலீசு நிலையத்திலேயே புகார் எழுதிகொடுத்ததால், புகார் கடிதத்தின் நகல் கூட என்னிடமில்லை. போனில் போட்டோ எடுத்துக்கிறோம் என்று கேட்டதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில், ஜெயகர்ணனே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்.
உன்னால என்ன செய்ய முடியும்? என் பவர் என்ன தெரியுமா? எனக் கேட்கிறார். என்னிடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி இருக்கிறது என்று சொல்லி மறைமுகமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் பாஜகவில் இருக்கிறார். தொழிலதிபர். அவரது பெயருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று சமரசம் பேசுவதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.” என்கிறார்.
“நடந்த சம்பவத்தை நானும் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதைப்பார்த்துவிட்டு என்னிடம் நிறையப்பேர் தொடர்புகொண்டு பேசினார்கள். கிரிக்கெட் மைதானத்தில் தன்னை எதிர்த்து போட்டியிடும் எதிரணியினரை நிலைகுலைய வைக்கும் வகையில் இவ்வாறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் இந்த ஜெயகர்ணன். பலமுறை காரிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்டியே பலரை மிரட்டியிருக்கிறார். ஷூவை கழட்டிவிட்டு வர சொன்னதற்காக அம்பயரை ஒருமையில் பேசி சண்டைக்கு சென்றவர் என்கிறார்கள்.
கட்சி சார்பில் பேசியவர்கள், எதுக்கு பெருசு படுத்துறீங்க. விடுங்க. சமாதானமா போகச்சொல்லுங்க, என்கிறார்கள். நாங்கள் எதையும் மிகைப்படுத்தவில்லை. அவர்கள் வீரமணியை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினார்கள் என்றும் புகார் கொடுக்கவில்லை. என்ன நடந்ததோ அதை சொல்லியிருக்கிறோம். அதற்குரிய சட்ட நடவடிக்கையைத்தான் எதிர்பார்க்கிறோம்.” என்கிறார், உடனிருந்த வழக்கறிஞர் எஸ்.ரஞ்சித்.
நான் திருச்சியிலே இல்லை… பெங்களூரில் இருக்கிறேன் !
ஜெயகர்ணனின் கருத்தையறிய அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். “90% எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே ராஜினாமா செய்திருக்கிறேன். எனது பிசினஸை கவனிக்க நேரமில்லை. வேலைப்பளு அதிகமாக இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனது அறிக்கையிலும் அதைத்தான் சொல்லியிருக்கிறேன். கட்சி மீது சில விமர்சனங்களை சொல்லியிருந்தாலும் அது கட்சி விசயம் வெளியில் சொல்ல முடியாது.
மற்றபடி நீங்கள் சொல்வது போல கிரிக்கெட் தகராறு எல்லாம் காரணம் இல்லை. கட்சியில் ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம். எங்கள் டீம்தான் விளையாடியது. நான் பெங்களூரில் இருக்கிறேன். எனக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என திட்டவட்டமாக மறுக்கிறார், கோ.ஜெயகர்ணன்.
மீண்டும் வீரமணியை தொடர்புகொண்டு ஜெயகர்ணனின் மறுப்பு குறித்து கேட்டதற்கு, “சம்பவம் நடைபெற்றது ஆக-04 ஞாயிற்றுக்கிழமை. சாரநாதன் கல்லூரி மைதானத்தில் எங்கள் அணிக்கும் அவரது அணிக்குமான இறுதிப்போட்டி. போட்டி தொடங்கி இரண்டு ஓவர்கள் முடிவடைந்த நிலையில், எப்படியும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எங்களோடு தகராறு செய்து மேட்சை நிறுத்திவிட்டார்.
அந்த மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சாட்சி. அதற்கு முதல்நாள் ஜே.ஜே.கல்லூரி மைதானத்தில் மேக்னம் அணியுடன் அவர் அணி மோதியது. அதிலும் அவர் விளையாடியிருக்கிறார்.
உங்களிடம் நான் திருச்சியிலே இல்லை, பெங்களூருவில் இருக்கிறேன் என எப்படி சொல்வார்? ஸ்டேஷனில் வேண்டுமானாலும் விசாரித்து பாருங்கள்.” என்கிறார், வீரமணி.
எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்று பதிலளிக்கவில்லை.
”நடந்த சம்பவத்தின் மீது எஃப்.ஐ.ஆர். போட வேண்டும் என்பதில் வீரமணி தரப்பு உறுதியாக இருந்தார்கள். முதலில் மிரட்டி பணிய வைக்க முயற்சித்தார்கள். பிறகு, எஃப்.ஐ.ஆர். பதிவாவதற்கு முன்பாக எப்படியும் சமாதானமாக பேசி முடித்துவிட முயற்சித்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக போலீசும் நடவடிக்கையில் காலம் தாழ்த்தியது.
இந்நிலையில்தான், ஒருவேளை வழக்கில் சிக்கினால், கட்சிப் பெயரும் சேர்ந்து அடிபடும் என்பதால், சம்பவ நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக தேதியிட்டு ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். சுமுகமாக பேசி முடித்திருக்க வேண்டிய ஒன்றுக்கும் இல்லாத பிரச்சினையில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார், ஜெயகர்ணன். ” என்கிறார்கள், இந்த விவகாரத்தை நன்கறிந்த பெயர் வெளியிட விரும்பாத நண்பர்கள் சிலர்.
கடைசி புல்லட்..
திருச்சியில் கால்வாய் சாலையில் கட்டியிருக்கும் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்டில் முன் பகுதி இரண்டு அடி ஆக்கிரமிப்பு சிக்கலில் இருப்பதால் அதை இடிப்பதற்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினையில் பிஜேபி கட்சி கைக்கொடுக்காத நிலையில் தான் ராஜினாமா காட்சிகள் என்கிறார். இதற்கு பிரச்சினையில் முதலில் வழக்கு பதிவு செய்து பிறகு அதை ரத்தும் செய்து விட்டார்கள் என்கிறார்கள்..
அங்குசம் புலனாய்வுக் குழு.