மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !

0

மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !

தமிழக அரசியலிலும் சரி, இந்திய அரசியலிலும் சரி, பொதுவுடமை அரசியல் தவிர்க்க முடியாத தனித்துவம் வாய்ந்த அரசியலாக எல்லா காலகட்டங்களிலும் விளங்கி இருக்கிறது. அதன் பங்கும் அதனுடைய மகத்துவமான பணிகளும் நீண்ட நெடிய வரலாறு. இப்படியான எளிய மக்களுக்கான அதிகாரத்தை பேசும் பொதுவுடமை அரசியலை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தோழர்கள் தலைமை எடுத்து வழிநடத்தி வந்திருக்கின்றார்கள். இந்த வரிசையில் நான் கண்ட பேசிய தலைவர் தோழர் தா.பா, அவர் எங்களுக்கு ஏற்படுத்திய அனுபவங்கள் தவிர்க்க முடியாத வரலாறாய் இன்றும் நெஞ்சில் இருக்கின்றது. மகத்துவம் வாய்ந்த தலைவர், தமிழ்நாட்டில் சிவப்பு சூறாவளி என்று அழைக்கப்படும் தோழர் தா.பாண்டியன் அவர்களுடன் இருந்த அனுபவங்களில் சில.

https://businesstrichy.com/the-royal-mahal/

தா.பா என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது அவருடைய பேச்சாற்றல், அரசியல் நிபுணத்துவம், தெளிவான செயல்பாடு, கருப்பான தோற்றம், சிவப்பு துண்டு இந்த வரிசையில் இளைஞர்கள், மாணவர்களுடனும் அவர் பழகும் மாண்பு என்பது அத்துனை சிறப்புக்கு உரியது. தா.பா எத்தனை பெரிய கருத்து பெட்டகம் என்பதையும் அவருடன் பேசியதன் மூலம் அறிந்திருக்கின்றேன். அவரின் பழகும் குணம், அவருடன் நடந்த உரையாடல் என்று அவருடன் கழித்த நேரங்கள் அனைத்துமே வாழ்வின் சிறப்பான நினைவுகள்.

தோழர் தா.பா !
தோழர் தா.பா !

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தா.பா எந்த நிகழ்ச்சிக்கு திருச்சிக்கு வந்தாலும் அவரை அழைத்து வருவதில் இருந்து அவருடன் தங்கி அவரைப் பார்த்துக் கொள்வது, வேலைகளை செய்வது என்று அனைத்திலும் மாணவர் பெருமன்ற தோழர்களின் பங்கு அதிகமாக இருக்கும். தா.பா வருகிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தவுடன் காலை அவரை அழைத்து வருவது. ரூமுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பார்த்துக் கொள்வது பிறகு அனுப்பி வைக்கும் வரை மாணவர் பெருமன்ற தோழர்கள் தினேஷ், ஜீவா, சூர்யா, தாஸ் மற்றும் நான் ஆகியோர் உடன் இருப்போம். மேலும் தோழர் இந்திரஜித் மற்றும் தோழர் ஜனசக்தி சிவா, சா.மு.சிவா ஆகியோரும் உடன் இருப்பார்கள். தா.பா திருச்சிக்கு பெரும்பான்மையாக ராக்போர்ட் ரயிலில் தான் வருவார். நான்கு முப்பது மணிக்கு எல்லாம் அலாரம் வைத்து எழுந்து ரயில் நிலையம் சென்று தா.பாவை வரவேற்று மேகா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வோம், அன்றைய நாள் அவருடனேயே.

சிறிது நேரம் ஓய்வெடுக்கும் தா.பா “நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பா” என்று சொல்லி கட்டில் ஓரமாக படுப்பார். அதே கட்டிலில் நாங்களும் படுத்துக் கொள்வோம். அப்புறம் எழுந்து தினசரி நாளிதழ்களை கேட்டு வாங்கி படிப்பார், பிறகு தோழர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்குவார், பார்த்து பேசிவிட்டு காலை உணவை உட்கொண்டு பிறகு அன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு புறப்படுவார். நிகழ்ச்சியை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு முடித்து அழைத்து வருவோம். வந்தவுடன் அவரை ஓய்வெடுக்க விடாமல் சரமாரியாக மாணவர் பெருமன்ற தோழர்கள் ஒவ்வொருவராக பல்வேறு துறை சார்ந்த கேள்விகள், அரசியல், கடந்த கால நிலைகள், வருங்கால திட்டங்கள் என்று பல்வேறு கேள்விகளை ஒவ்வொருவராக எழுப்புவோம் அனைத்திற்கும் பொறுமையாக பதில் தருவார்.

இப்படி குண்டு வெடிப்பில் சிக்கிய அனுபவம் முதல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவருடன் தா.பா நடத்திய உரையாடல் வரை அனைத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் நடத்திய அத்தனை உரையாடுகளும் இன்றும் பசுமையான நினைவாய் இருக்கின்றது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐந்து முனைகளில் இருந்து புறப்பட்ட பிரச்சார இயக்கம் திருச்சியில் நிறைவடையும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்காக காலை கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுனாவில் கொடியை கட்டிக் கொண்டிருந்த பொழுது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொடிகளை அவிழ்த்து கீழே எறிந்தார். அது குறித்து தகவல் வந்தவுடன் தோழர் இந்திரஜித், சுரேஷ் மற்றும் மாணவர் பெருமன்ற தோழர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மத்த கட்சி கொடிகள் கட்ட அனுமதி வழங்கும் காவல்துறை ஏன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை கட்ட அனுமதி மறுக்கிறது என்று கூறி, உரிய அனுமதியை காட்டிய பொழுது கூட ஆய்வாளர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார், இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தா.பாவிடம் நடந்த சம்பவத்தை கூறியவுடன் தா.பா அத்தனை கோவத்தை வெளிப்படுத்தினார்.பிறகு உழவர் சந்தை மைதானத்தில் மிக பிரம்மாண்ட கூட்டத்தில் தா.பா பேச தொடங்கினார். அப்போது “தூக்கிப்பிடித்தால் செங்கொடி திருப்பி அடித்தால் தடியடி” என்று தா.பா கூறியவுடன் பொதுக்கூட்ட திடலே அதிர்ந்தது. சம்பந்தப்பட்ட ஆய்வாளரும் உடனடியாக பொதுக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் எப்போதும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சொல்லும் தா.பா கிளம்பிவிட்டு நிகழ்ச்சிக்கு செல்ல தயாரான பொழுது அவர் துண்டைக் காணவில்லை, கட்டிலுக்கு அடியில் இருந்தது, தூண்டில்லாது நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்தார், ஒரு வழியாய் தேடி துண்டை தோளில் போட்ட பிறகே நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். தா.பா செங்கொடியை எவ்வளவு நேசித்தார் என்பதற்கு இதுவே சாட்சி.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது தா.பா நடக்க சிரமப்பட்ட நேரம் அது, மேலும் டயாலிசிஸ் செய்து கை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது அப்போது கூட ஓய்வு என்ற பெயரில் புத்தகம் எழுதுவதற்காக மதுரைக்கு செல்ல சென்னையிலிருந்து புறப்பட்ட தா.பா திருச்சிக்கு வந்தார். அப்போது கொரோனா பெருந்தொற்றால் பெரும் முதலாளிகள் அடையும் லாபம் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து எடுத்துரைத்தார். அதை எனது முகநூல் பக்கத்தில் நேரலையாக பதிவு செய்தேன். பிறகு அதுவே அவரின் எழுத்து வடிவில் “கொரோனாவா முதலாளித்துவோமா.?” என்ற புத்தகாமாக வெளி வந்தது. இப்படி மக்களை எப்படியாவது வெளிப்படைய செய்ய வேண்டும் என்று நேரம் காலம் பார்க்காமல் பேசியவர்.

மேலும் உணவை பொறுத்தவரை தா.பாவிற்கு அசைவ உணவு பிடிக்கும். ஆனால் எங்களிடம் இட்லி, தோசை என்று நிறுத்திவிடுவார். ஆனால் நாங்கள் அசைவமாக வாங்கி வருவோம். அதே நேரம் இந்திரஜித் தோழர் ஒரு வேளை உணவாவது வீட்டில் இருந்து எடுத்து வந்துவிடுவார். மேலும் போகும் வழியில் இருக்கக்கூடிய ரோட்டு கடையில் நிறுத்துங்க சாப்பிடலாம் என்று கூறுவர். இப்படி திருச்சியில் பல்வேறு ரோட்டுக்கடைகளில் சாப்பிட்டு இருக்கிறார்.

மாலை நிகழ்ச்சி ஏதேனும் நடைபெற்றால் அது விரைவாக முடிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஏனென்றால் ட்ரெய்னுக்கு குறித்த நேரத்திற்கு முன்பாக செல்ல வேண்டும் என்பது தா.பாவின் எண்ணமாக இருக்கும். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் தா.பாவுடன் போட்டோ எடுக்க வரிசையாக தோழர்கள் வந்து கொண்டிருப்பவர்கள். அப்போதும் பொறுமையாக அனைவரோடும் போட்டோ எடுத்துக் கொண்டு புறப்படுவார். இப்படி பெரும்பான்மையான நேரம் ராக்போர்ட் ட்ரெயினை ஓடிப் போய் தான் பிடித்திருக்கிறார். பிறகு வண்டியில் உட்கார்ந்து “மாணவர்களே சென்று வாருங்கள்” என்று அவர் அழுத்தி உச்சரிக்கும் வார்த்தை இன்றும் செவிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி திருச்சிக்கு எத்தனை முறை வந்தாலும் பல்வேறு செய்திகளை கற்றுக் கொடுக்கும் தா.பா 2021ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு பிறகு அனைத்து தோழர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்று வருகிறேன் என்று சொல்லிக் புறப்பட்ட தா.பா, திருச்சியில் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி அது என்பதை நாங்கள் யாரும் அன்று நாங்கள் அறியவில்லை.

மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் இனிமையானவராகவும், இளைஞராகவும், ஆகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கிய அருமை தோழர் தா.பாவின் நினைவை போற்றுவோம். அவர் இல்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற கொள்கையையும், கொடியையும் என்றும் உயர்த்துவோம்.

-க.இப்ராகிம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.