குட்செட்டில் கிரேன் கவிழ்ந்து விபத்து – எதிர்பாராத சம்பவம் அல்ல ! இரயில்வே துறையின் அலட்சியமே காரணம்!
திருச்சி குட்செட்டில் கிரேன் கவிழ்ந்து விபத்து – காரணம் என்ன?
திருச்சி குட்செட்டில், வெளி மாநிலத்திலிருந்து சரக்கு இரயிலில் வந்திறங்கிய இரும்பு பிளேட்டுகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். சுற்றியிருந்த சக பணியாளர்களும் சாமர்த்தியமாக தப்பியிருக்கின்றனர்.
திருச்சியின் தொன்மையான அடையாளங்களுள் ஒன்று திருச்சி குட்செட் சுமைபணி தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவை. பொதுத்துறை நிறுவனமான பெல் மற்றும் அதனை சார்ந்து இயங்கக்கூடிய சிறு – குறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வந்திறங்குவது தொடங்கி … நெல் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி – இறக்குமதி என எப்போதும் குட்செட் சரக்கு ரயில் சேவை பரபரப்பாக காணப்படும்.
நெல் மூட்டையிலிருந்து, அபாயம் நிறைந்த இரும்பு ராடுகள், பிளேட்டுகளை ஏற்றி இறக்கி கையாளும் பணியை மேற்கொள்ளும் சுமைபணி தொழிலாளர்களின் நிலையோ பாதுகாப்பற்ற ஒன்றாகவே இருந்து வருவது சாபக்கேடு.
ஸ்டில் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் கே கே நகர் CWC குடோனுக்கு விசாகப்பட்டினம் BSB யிலிருந்து இரயில் வேகனில் ஏற்றிவந்த இரும்பு பிளேட்டுகளை கிரேன் உதவியுடன் ட்ரெய்லர் லாரிக்கு மாற்றும் பொழுதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
”இது எதிர்பாராத சம்பவம் அல்ல! இரயில்வே துறையின் அலட்சியமே காரணம்! சுமை பணி தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் இரும்புசெட் தோழர்கள் 14 பேர் குட்செட்டில் இரும்பு பிளேட், காயில், கம்பிகளை இறக்கி ஏற்றும் பணிகளில் வேலைகளில் நீண்டகாலமாக இங்கு பணியாற்றுகின்றனர்.
அவர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு இல்லை. இரவில் வேலை செய்ய மின் விளக்கு வசதியோ, தரமான சாலை வசதியோ இல்லை! குண்டும் குழியுமாக கிரேன் தரை தட்டி உரசும்! கொடிய விஷப்பாம்புகள் அலைகிறது! புதர்மண்டி கிடக்கிறது ! இதை இரயில்வே நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளதே விபத்துக்கு காரணம்!” என இரயில்வே நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர், சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ஞா.ராஜா, மற்றும் செயலாளர் தோழர் சாலமன் ஆகியோர்.
தொழிலாளர்களின் போராட்டம் அதனைத் தொடர்ந்து ரயில்வே குட்செட் யார்டு பொறுப்பாளர் சி எஸ் ஆர் மற்றும் இரயில்வே கமர்சியல் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
நிதி ஒதுக்கி தரமான சாலை அமைக்கும் வரை தற்காலிகமாக இன்றே பள்ளங்களை நிரப்பி சாலைகளை செப்பனிடுவதாகவும் இருட்டான பகுதிகளில் ஒளி விளக்குகள் பொருத்துவதாகவும் உறுதியளித்துள்ளதாக, நம்மிடம் தெரிவித்தனர் சுமை பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர்.
– மித்ரன்