படைப்பிலக்கியப் பயிலரங்கமும்… புல்லாங்குழல்களான மூங்கில்களும்!

0

படைப்பிலக்கியப் பயிலரங்கமும்… புல்லாங்குழல்களான மூங்கில்களும்!

திருச்சி தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை ஏற்பாட்டில், ”படைப்பிலக்கியப் பயிலரங்கு” ஜனவரி-08,09 ஆகிய இருநாட்கள் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ஃபிளக்ஸ் பேனர் பயன்படுத்தக்கூடாது என கண்டிப்புடன் கல்லூரி நிர்வாகம் விதித்த தடையைத் தொடர்ந்து கோரைப்பாயில் வரையப்பட்டிருந்த அறிவுப்பு பதாகை அனைவரின் கவனத்தையும் பெற்றது. அங்குசம் இதழ், வேர்கள் அறக்கட்டளை, வெற்றிமொழி வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து இப்படைப்பிலக்கியப் பயிலரங்கை நடத்தின.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

தூயவளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இப்பயிலரங்கை தொடங்கிவைத்து பேருரையாற்றினார், எழுத்தாளரும், கவிஞருமான ஜெய பாஸ்கரன். “வாசிப்பதும், எழுதுவதும் இளைஞர்களின் வழக்கமாக வேண்டும். இலக்கியம் கூறும் அறம் வழி வாழும் படைப்பாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். கல்வி வழி மனிதம் வளர்க்கும் தூய வளனார் கல்லூரியின் பணி போற்றுதலுக்குரியது.” என்றார் அவர்.

படைப்பிலக்கியப் பயிலரங்கம்
படைப்பிலக்கியப் பயிலரங்கம்

- Advertisement -

கடந்த ஆண்டு பயிலரங்கில் பங்கேற்ற மாணவர் கள் படைத்த, “விதை நெல்” என்கிற மாணவர் இதழை வெளியிட்டு கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உரையாற்றினார். ஹைக்கூ கவிஞரும் மூத்த ஓவியக்கவிஞருமான அமுதபாரதி அவர்களுக்கு தூயவளனார் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 50,000 பொற்கிழி வழங்கி சிறப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கவிஞர் பாட்டாளி, கவிஞர் திருவைக்குமரன் ஆகியோர் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இவ்விழாவில், திருச்சி ராயல் அரிமா சங்கத்தின் சாசனத் தலைவர் முகமது ஷபி; தூயவளனார் கல்லூரி சார்பில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெஸ்கி; பணிமுறை-2இன் துணை முதல்வர் திருமதி சி.பாக்கிய செல்வரதி; படைப்பிலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ்; பேராசிரியர்கள் ஜா.சலேத், ராசாத்தி, சு.சீனிவாசன், கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன், அங்குசம் இதழின் ஆசிரியர் ஜே.டி.ஆர். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

4 bismi svs

இதனைத்தொடர்ந்து, கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் பாட்டாளி, கவிஞர் திருவைக் குமரன், கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், தமிழ்தாசன், முனைவர் ஜா.சலேத், அங்குசம் இதழின் ஆசிரியர் ஜே.டி.ஆர்., மற்றும் அங்குசம் இதழின் முதன்மை செய்தியாளர் வே.தினகரன் ஆகியோர் பயிற்சியாளர்களாக பங்கேற்று இருநாள் படைப்பிலக்கியப் பயிலரங்கை நடத்தினர். இருநாள் நிகழ்வையும், தமிழ்த்துறை மாணவர் களான ச.மதுமிதா, ச.ஆஷிக்டோனி மற்றும் செ.ஜா. அரசி மார்லின் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

நாளொன்றுக்கு இரண்டு ”ஷிப்டுகள்” வீதம் பாடப்புத்தகங்களின் வழியே, பிழைப்புக்கான கல்வித் தகுதியை வழங்கும் ’தொழிற்சாலை’யாய் அல்லாமல், ”அறிவை விரிவு செய், அகண்டமாக்கு” என்ற பாவேந்தனின் வரிகளுக்கேற்ப மாணவர்களை வார்க்க வேண்டுமென்ற நோக்கிலான, தூய வளனார் கல்லூரி நிர்வாகத்தின் முன்னெடுப்பு முன்னுதாரணமானது. திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் சார்பில் பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுள் கணிசமானவர்கள் தமிழ்த்துறை அல்லாத, பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்கள். அதிலும் சரிபாதிக்கும் மேலானவர்கள் மாணவிகள்.

இசுலாமிய பெண்மணி ஒருவர் எழுதிய முதல் கவிதை; மருத்துவ சிகிச்சையிலிருந்து அப்படியே பயிற்சியில் பங்கேற்ற மாணவி; பகுதிநேர வேலைக்கும் சென்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினூடே பயிற்சியில் பங்கேற்ற மாணவர்; குறிப்பிட்ட அரசியல் பத்திரிக்கை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த இதழ் எங்கே கிடைக்கும் என்று விசாரித்த மாணவி ஒருவரது அரசியல் ஆர்வம்; பயிற்சியை முடித்த சூட்டோடு மாணவர் ஒருவர் தனது படைப்புகளை பதிவு செய்வதற்கென்றே பிரத்யேகமாக தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கம் என பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் படைப்பிலக்கிய ஆர்வம் பிரமிப்பை ஏற்படுத்தின. மிக முக்கியமாக, இவர்களை பின்னிருந்து வழிநடத்தும் பேராசிரியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. போற்றுதலுக்குரியது!

”இந்தக் காட்டில் – எந்த மூங்கில் – புல்லாங்குழல்? ” என்ற, புகழ்பெற்ற கவிஞர் அமுதபாரதியின் ஹைக்கூ கவிதைக்கு பதிலளிக்கும் விதமாக, “இங்கே வீற்றிருக்கும் மூங்கில்கள் அனைத்துமே நிச்சயம் புல்லாங்குழல்களாக மாறும்” என அனுபவப் பகிர்வில், முத்தாய்ப்பாய் பேசினார் மாணவி ஒருவர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், நறுக் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட சமூக அவலங்களை சுட்டும் நேர்த்தியான ஹைக்கூ கவிதைகள்; விமர்சன கண்ணோட்டத்தில் எழுதப் பட்ட அரசியல் கட்டுரைகள்; பெண் வாழ்வியலை மையப்படுத்திய சிறுகதைகள் என ஆகச்சிறந்த படைப்புகளை சமர்ப்பித்து அசத்தி னார்கள், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள். தூயவளனார் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெஸ்கி தலைமையில் நடைபெற்ற நிறைவுவிழாவில், வேர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் அடைக்கலராஜா அவர்கள், பயிலரங் கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் அறிவுப் பொக்கி ஷங்களான நூல்களையும் வழங்கி பாராட்டினார்.

ஃப்ளக்ஸ் பேனருக்கு மாற்றாக கோரைப்பாய் பேனர்!
”ஃப்ளக்ஸ் பேனருக்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் ஓவியக்கலைஞர் புஷ்பராஜ் பங்களிப்போடு, இந்த கோரைப்பாய் பதாகையை நிறுவினோம்” என்கிறார், பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.சலேத். ப்ளக்ஸ் பேனர்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அபாயகரமானது என்பதை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலில், மிக முக்கியமாக, முந்தைய காலகட்டத்தில் தூரிகை கலைஞர்களாக, சுவரோவியக் கலைஞர்களாக வலம் வந்தவர்களை யெல்லாம், சுண்ணாம்பு அடிக்கும் பெயிண்டர்களாக மாற்றிவிட்ட அவலத்திற்கு மத்தியில், ஃப்ளெக்ஸ் பேனர்களை பயன்படுத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கும் தடை முக்கியத்துவம் பெறுகிறது.

ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்
ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்

”ஆஹா! அற்புதம்!” என்ற வகையிலான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கடந்து செல்லாமல், அவரவர் தனது வரம்பிற்குட்பட்ட வகையில் ஃப்ளெக்ஸ் பேனர்களின் பயன்பாட்டை தவிர்ப்பதே காலத்தின் தேவை.

– வே.தினகரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.