குருவி சுடும் துப்பாக்கியால் நண்பரை சுட்ட போதை ஆசாமி கைது!
நண்பர்களுக்கிடையிலான போதை தகராறில் குருவி சுடும் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டடி பட்ட நபர் தற்போது நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், செங்கரையூரைச் சேர்ந்த முருகேசன் மகன் பாண்டித்துரை வயது 23 என்பவர் நேற்று (08.04.2025) தனது நண்பர்களான வீரமணி, குட்டீஸ் ஆகிய இருவருடன் சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் மது அருந்தி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான செங்கரையூருக்கு வரும் போது அன்பில் கிராமத்தில் தனது நண்பர்களான 1) சந்தோஷ் குமார் வயது 21, வடக்கு செங்கரையூர், 2) ஜெகன் மற்றும் 3) ஆனந்த் ஆகிய நபர்களை சந்தித்து பேசி கொண்டிருந்த நிலையில், மேற்படி பாண்டித்துரைக்கு மது போதை அதிகமானதால் தனது இரு சக்கர வாகனத்தினை அங்கேயே வைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டனர்.

பின்னர் நேற்று (08.04.2025) இரவு 23.00 மணிளவில் மேற்படி பாண்டித்துரை வீட்டிற்கு சென்றவுடன் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி என்பவர் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில், மேற்படி பாண்டித்துரை மது போதையில் தனது இரு சக்கர வாகனத்தை அன்பில் கிராமத்திலேயே விட்டு சென்றதை மேற்படி சந்தோஷ், ஆனந்த் மற்றும் ஜெகன் ஆகிய மூவரும் பாண்டித்துரையின் வீட்டிற்கு சென்று கொடுத்த போது, மேற்படி பாண்டித்துரை தனது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த சந்தோஷ், ஆனந்த் மற்றும் ஜெகன் ஆகிய மூவரையும் நோக்கி கொக்கு சுடும் துப்பாக்கியால் (Air Gun) சுட்டுள்ளார்
அவ்வாறு Air Gun-ஆல் சுட்ட போது சந்தோஷ்குமாரின் அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. மேற்படி காயம்பட்ட சந்தோஷ் குமாருக்கு இலால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் சிகிச்சையில் உள்ளார். மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி பாண்டித்துரை மீது இலால்குடி காநி குற்ற எண். 165/2025 U/s. 296(b), 109(1) BNS பாண்டித்துரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.