துரை வைகோ பொறுப்புக்கு வந்தது எப்படி ? மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் லைவ் ரிப்போர்ட் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“மதிமுகவில் பெரியாரும் இருப்பார்; பெருமாளும் இருப்பார் என்றால் கட்சி பேனர்களில் பெரியார் படத்தை நீக்குங்கள்”
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொந்தளிப்பு – ஒரு லைவ் ரிப்போர்ட்!

மதிமுகவில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிவந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. ‘பொதுச்செயலாளர் வைகோ உடல் நலம் குன்றியுள்ளார். முன்பு போல அவரால் பயணம் மேற்கொள்ளமுடியவில்லை. இந்த நிலையில் வைகோ மகன் துரை வையாபுரியைக் கட்சியில் அதிகாரமிக்க பதவியில் அமர்த்த வேண்டும்’ என்ற கோரிக்கை பல இளம் மாவட்டச் செயலாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இதற்கு பல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மகன் வையாபுரியின் அரசியலுக்கு வருவது குறித்து பேசும்போது,“என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வரமாட்டார். என் குடும்பத்திலிருந்தும் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அரசியலில் நான் பட்ட வேதனைகள், அவமானங்கள் என்னோடு போகட்டும். அரசியல் என்பது முதல்போடுகின்ற பிசினஸ் ஆகிவிட்டது. என் மகன் அரசியலுக்கு வருவதை நான் எப்போதும் ஏற்கமாட்டேன். இந்த உறுதியிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்று சூளுரைத்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

செய்தியாளர்களிடம் பேசும்போது,‘வாரிசு அரசியலுக்கு மதிமுகவில் இடமில்லை. மதிமுக சுவரொட்டிகளில் துரை வையாபுரி படம் போட்ட சுவரொட்டிகளை நானே கிழிக்கச் சொன்னேன். வையாபுரிக்காக துணைச்செயலாளர் பதவியை விட்டுத்தரத் தயார் என்ற மல்லை சத்யாவைக் கண்டித்தேன். என்னை மீறி மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு, எனக்குத் தெரியாமல் என் மகனைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை என்பதை மாவட்டச் செயலாளர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்” என்று கடுமையான குரலில் கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

முருங்கை மரம் ஏறிக்கொண்டிருக்கும் வேதாளங்களை அயராது வெட்டிவீழ்த்தும் விக்கிரமாதித்தியன் போல மாவட்டச் செயலாளர்கள் பலர் வைகோவின் கட்டளையை மீறி செயல்பட்டு, துரை வையாபுரியை தங்களின் மாவட்டங்களுக்கு அழைத்து, கட்சிக்கு இளஇரத்தம் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். துரை வையாபுரிக்கு இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு உள்ளது என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 22ஆம் தேதி துரை வையாபுரி தன் பெயரை துரை வைகோ என்று மாற்றிக் கொண்டு, வைகோவின் பிறந்தநாளை ‘தமிழர் தலைநிமிர்வு நாள்” என்று சென்னையில் தனியார் ஓட்டலில் கொண்டாடினார்.

வைகோ தரப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தை மதிமுக கைப்பற்றியது. இது துரை வைகோவின் தேர்தல் பணியால் கிடைக்க வெற்றி என்று மதிமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மதிமுகவின் மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் ‘துரை வைகோ’விற்குக் கட்சியில் அதிகாரமிக்க பதவி தரப்படவேண்டும்’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டன. மாணவர் அணியும், மகளிர் அணியும் கூட துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 20.10.2021ஆம் நாள் அரசியல் ஆலோசனைக் குழு, ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வைகோ மகன் துரை வைகோவின் அரசியலுக்கு வருவதை அறிவிப்பாரா? தவிர்ப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது. (துரை வைகோவுக்கு முடிசூட்டு விழா என்று அங்குசம் கட்டுரையை 17.10.2021ஆம் நாள் வெளியிட்டிருந்தது)
“நான் தலைமை ஏற்க மாட்டேன்” வைகோவிடம் ஈரோடு கணேசமூர்த்தி கூறினார்.


மதிமுக அறிவித்தபடி 20.10.2021ஆம் நாள் புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அரசியல் ஆய்வுக்குழு, ஆலோசனைக் குழு அடங்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வரவில்லை. இதனால் தலைவர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் காணப்பட்டது. கூட்ட மேடையில் மதிமுக பொருளாளர் என்ற நிலையில் அமர்ந்திருந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியை வைகோ அழைத்து, “அவைத்தலைவர் கூட்டத்திற்கு வரவில்லை. எனவே பொருளாளர் நீங்கள் தலைமை தாங்குங்கள்” என்று கேட்டுக் கொண்டார். உடனே கணேசமூர்த்தி,“நான் சட்டப்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர். பொருளாளராக இருப்பதை திமுக கேள்வி கேட்கவில்லை என்பதால் நான் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நான் எப்படி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கமுடியும்?” என்று பதில் சொன்னவுடன், வைகோ,“நான் சொல்கிறேன் தலைமை தாங்குகள்” என்றவுடன் கணேசமூர்த்தி,“நீங்களே சொன்னாலும் என்னால் தலைமை தாங்க முடியாது” என்று கண்டிப்பாக கூறியவுடன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா எழுந்து,“கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய திருப்பூர் துரைசாமி வரவில்லை என்பதால், இந்தக் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறும்” என்று அறிவித்தார். அதன்படி மதிமுக வரலாற்றில் முதன்முறையாக அவைத்தலைவர் தலைமை இல்லாமல் முதல்முறையாக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. 21.10.2021 நாளிட்ட தினத்தந்தி, தினகரன் நாளிதழ்கள் திருப்பூர் துரைசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றதாக மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்து தமிழ் நாளிதழ் மட்டுமே அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது.

மதிமுக பேனர்களில் பெரியார் படத்தை நீக்குங்கள் – கூட்டத்தில் கொந்தளிப்பு
மதிமுகவின் மூத்த உறுப்பினரும், பழுத்த திராவிட இயக்கச் சிந்தனையாளரும், மதிமுக விவசாய அணி செயலாளருமான புலவர் முருகேசன் கூட்டத்தில் பேசும்போது,“பொதுச்செயலாளர் இதுவரை தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை. யாரையும் கொண்டாட அனுமதித்தும் இல்லை. இந்நிலையில், துரை வைகோ கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பொதுச்செயலாளரின் பிறந்தநாளை ‘தமிழர் தலைநிமிர்வு நாள்’ என்று கொண்டாடினார். அவ்விழாவில் பேசிய துரை வைகோ,‘இனி ஒவ்வொரு ஆண்டும் என் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய துரை வைகோ என் மனதில் பெரியாரும் உண்டு, பெருமாளும் உண்டு என்று பேசிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. தந்தை பெரியார் உள்ள இடத்தில் பெருமாள் என்ற கடவுளுக்கு வேலையில்லை. பெருமாள் என்ற கடவுள் இருக்கும் இடத்தில் தந்தை பெரியாருக்கு வேலையில்லை. திராவிட இயக்கக் கருத்துகளைப் படிக்காமல், உள்வாங்கிக் கொள்ளாமல் பேசியதாகவே கருதுகிறேன். இனி மதிமுகவில் பெருமாளும் இருப்பார் என்றால் மதிமுக பேனர்களில் உள்ள தந்தை பெரியார் படத்தை எடுத்துவிடுங்கள்” என்ற ரீதியில் கொந்தளிப்புடன் பேசி முடித்தார்.
உடனே ஒரு மாவட்டச் செயலாளர் எழுந்து, புலவர் முருகேசன் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்,‘கடவுள் மறுப்பு என்பது பெரியார் கட்சியான திராவிடர் கழகத்தின் கொள்கை. மதிமுக அண்ணா வழியில், ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் கடவுள் மறுப்பை ஏற்காத இயக்கம். ஓட்டு அரசியல் இயக்கத்தில் கடவுள் மறுப்பை வலியுறுத்த முடியாது. துரை வைகோ பெருமாளை வணங்குகிறார், ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் குறைசொல்ல வேண்டியதில்லை” என்று பேசினார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதற்குப் பதில் அளித்து பேசிய புலவர் முருகேசன்,“ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று அண்ணா சொல்லவில்லை. திருமூலர் சொல்லியதை அண்ணா குறிப்பிட்டு பேசினார். அண்ணா ஒருபோதும் இறை மறுப்பைக் கைவிடவில்லை. 1967இல் திமுக ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்ற நிலையில், திருச்சியில் தன் தலைவர் தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர்களிடம் பேசும்போது ‘இந்த ஆட்சி அய்யாவிற்குக் காணிக்கை’ என்றார். அண்ணா ஓட்டு அரசியலுக்காக கொஞ்சம் நெளிவு சுளிவுடன் பேசியதை வைத்துக் கொண்டு அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கையை ஏற்றார் என்று என்று சொல்லக்கூடாது” என்றவுடன், கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய பேசிய அதே மாவட்டச் செயலாளர் மீண்டும் எழுந்து,“அப்படியானால் மதிமுக பேனர்களில் பெரியார் படத்தை நீக்கிவிடுங்கள்” என்று கூறினார். கடவுள் மறுப்பை வலியுறுத்திய புலவரின் கருத்தும், கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மாவட்டச் செயலாளரின் கருத்தும் வேறுவேறு தன்மை கொண்டிருந்தாலும் பெரியார் படம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் விவாத பொருளாக மாறியது வியப்பாக இருந்தது.
நியமித்துவிடுங்கள். வாக்கெடுப்பு நாடகம் வேண்டாம் – கோவை மாவட்டச் செயலாளர் வெளிநடப்பு
கூட்டத்தில் பேசிய பல மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் துரை வைகோவுக்கு அதிகாரமிக்கப் பதவி தரப்படவேண்டும். இளைஞர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றுள்ள துரை வைகோவால் கட்சிக்குப் புதிய இளஇரத்தம் பாய்ச்சப்படும். அண்மையில் நடந்த ஊராக உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு துரை வைகோதான் காரணம். அவரின் அணுகுமுறைதான் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது என்று துரை வைகோவுக்கு ஆதரவாகவே பேசினார்கள். ஒரு கட்டத்தில் வைகோ பேசும்போது,‘கட்சியில் ஜனநாயகம் வேண்டும் என்ற எண்ணுகிறவன் நான். எனவே மதிமுக அரசியலுக்கு துரை வைகோ வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு பிற்பகலில் இரகசிய வாக்கெடுப்பு நடக்க இருக்கின்றது. அதில் அனைவரும் கலந்துகொண்டு விருப்பப்பட்ட வகையில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே கணேசமூர்த்தி,‘அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஏற்றுக்கொள்ளும்போது ஏன் வாக்கெடுப்பு. அதுவும் இரகசிய வாக்கெடுப்பு எதற்கு? என்ற வினாவை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, கோவை புறநகர் மாவட்டச் செயலாளர், ‘மகன் அரசியலுக்கு வருவதைப் பொதுச்செயலாளர் ஏற்கிறார். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஏற்கின்றனர். கட்சியில் யாரையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. துரை வைகோவை நியமித்துவிட்டு போங்கள். ஏன் இந்த வாக்கெடுப்பு நாடகம். சர்வாதிகாரமாக முடிவெடுக்க முடியாமல் எதற்கு ஜனநாயக முகமூடி. நான் வெளிநடப்பு செய்கிறேன்” என்று கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.


துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் – 104 வாக்குகள்; வரவேண்டாம் – 2 வாக்குகள்
வைகோ எப்போதும் தான் எடுத்த முடிவிலிருந்து அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி பிற்பகலில் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டுமா? வரவேண்டாமா? என்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. ஒவ்வொருவர் கையிலும் ஒரு தாள் கொடுக்கப்பட்டது. தாங்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. வாக்களிப்பில் வைகோ உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் என 106 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். வாக்குகள் மாலை 5 மணியளவில் எண்ணப்பட்டன. துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று 104 பேரும் அரசியலுக்கு வரவேண்டாம் என்று 2 பேரும் வாக்களித்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ,‘பெரும்பான்மை உறுப்பினர்கள் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் துரை வைகோவிற்கு மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுகின்றது என்று அறிவித்தார். மேலும், துரை வைகோ இனி நாள்தோறும் தலைமைக் கழகம் வருவார். கடிதங்களைப் பார்வையிடுவார். தலைமையிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவிப்பார். மாநிலம் முழுவதும் கட்சிப் பணிக்காகச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவித்தார்.

தாயகக் கூட்டத்திற்கு வருகை தராதவர்கள்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அரசியல் உயர்நிலைக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன், ஆலோசனைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன், பொடா அழகு சுந்தரம், மாநில இளைஞர் அணிச் செயலாளர் கோவை ஈஸ்வரன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. சில மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் வரஇயலாமையை விளக்கி கடிதங்கள் அனுப்பி இருந்தார்கள். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளாமை மதிமுகவிற்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

துரை வைகோவின் அரசியல் பயணம் துவங்கின்றது

தந்தை வைகோ பலமுறை எச்சரித்தும், கண்டித்தும் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து, தலைமைக் கழகச் செயலாளர் என்னும் அதிகாரமிக்கப் பதவியைப் பெற்றுவிட்டார். அப்பாவின் நிழலில் அரசியல் நடத்தப்போகிறாரா? அப்பாவைத் தாண்டி அரசியல் நடத்தப் போகிறாரா? என்பதை எதிர்காலம் தெளிவாக்கிவிடும். வரும் 25ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து துரை வைகோ வாழ்த்து பெறுகிறார். பெரியார், அண்ணா நினைவிடங்களில் மலர் வளையம் வைக்கிறார் என்ற செய்தி துரை வைகோ தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பேற்ற சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. கலைஞர் நினைவிடம் ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தந்தை பெரியார் பெருமாள் என்னும் இரட்டைக் குதிரை சவாரி ஊர்போய் சேருமா? என்பதற்கு வருங்காலம் விடை சொல்லும்.

துரை வைகோவை எதிர்க்கும் தலைவர்கள் இவர்கள்.. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, நாகர்கோயில் கோட்டார் கோபால்( தணிக்கை குழு உறுப்பினர்), துரை சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் புதுகோட்டை மாவட்ட செயலாளர்), தேனி பொடா அழகுசுந்தரம்( கொள்கை பரப்பு செயலாளர்), வழக்கறிஞர் தேவதாஸ் (வழக்கறிஞர் பிரிவு செயலாளர்), புலவர் செவந்தியப்பன் ( சிவகங்கை மாவட்ட செயலாளர்), மாரியப்பன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர்), டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் ( திருவள்ளூவர் மாவட்ட செயலாளர்), திருச்சி வீரபாண்டி (வழக்கறிஞர்), ஈஸ்வரன் (இளைஞரணி செயலாளர்), சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்ட செயலாளர்), மோகன் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஜெ.ராமலிங்கம் (கடலூர் மாவட்ட செயலாளர்.)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் கோவை ஈஸ்வரன் வைகோவின் வாரிசு அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவிலிருந்து விலகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

-ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.