நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – துரை வைகோ அறிவிப்புக்கு காரணம் என்ன தெரியுமா ?
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டுதோறும் செப்.15 அண்ணா பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்த ஆண்டு மதுரையில் மதிமுக திறந்தவெளி மாநாட்டை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கில் மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். இம் மாநாட்டில் மதிமுக முன்னணித் தலைவர்கள் உரையாற்றினர்.
இம் மாநாட்டில் உரையாற்றிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசும்போது வைகோவைத் தலைவர் என்றே விளித்தார். வைகோவின் போராட்டங்களை எடுத்துக்கூறினார். “வைகோ மன்னிக்கும் குணத்தில் இயேசுநாதருக்கு இணையானவர். மறுமலர்ச்சி திமுகவில் நான் இணைந்து பணியாற்றுவதைப் பெருமையாக எண்ணுகிறேன். கட்சியில் எனக்கு வழங்கப்பட்ட பதவியைக்கூட நான் பெரிதாக எண்ணவில்லை. மறுமலர்ச்சி திமுகவின் இலட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதில்தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கூட்டணியில் 6 இடங்கள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டபோது, கட்சித் தொண்டர்கள் முன்னணித் தலைவர்கள் என்னைச் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் போட்டியிடப்போவதில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறினேன். என் முடிவைத் தலைவர் வரவேற்றார். மகிழ்ச்சியடைந்தார்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் நான் விருதுநகர் தொகுதியில் அல்லது திருச்சியில் அல்லது பெரம்பலூரில் போட்டியிடப்போகிறேன் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருகின்றன. நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. கட்சிக்காக உழைக்கும் ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும். கட்சியின் வெற்றிகாக நான் பிரச்சாரம் செய்வேன்” என்று கூறியவுடன் மாநாட்டில் பலத்த கைத்தட்டல் கிடைத்தது.
மதிமுக முன்னணித் தலைவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, துரை வைகோவின் பேச்சு குறித்து கேட்டோம். “மாநாட்டில் கழகத்தின் முதன்மைச் செயலாளர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பேசியது உண்மைதான். காரணம், திமுக தரப்பில் முதலில் விருதுநகர் துரை வைகோவுக்குச் சரியாக இருக்காது. வைகோவே இருமுறை தோல்வியடைந்துள்ளார்.
திருச்சி பாதுகாப்பாக இருக்கும் என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது என்றும், திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. கட்சியில் பொதுச்செயலாளருக்கு அடுத்தநிலை தலைவராக வளர்ந்து வரும் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றால் திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே இருப்பார். மேலும், தேர்தலில் போட்டியிட மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் உறுப்பினராகச் சேரவேண்டும்.
இது துரைவைகோவின் எதிர்கால வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உறுதுணையாக இருக்காது என்பதால்தான் துரை வைகோ போட்டியிட மறுத்துள்ளார். மதிமுகவுக்கு வட மாவட்டத்தில் திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தனித்தொகுதியை ஒதுக்க திமுக முன்வரும் என்ற செய்தியும் உள்ளது. அப்படி ஒதுக்கினால் மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிடுவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் மல்லை சத்யா மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது சிறப்பாகவே இருக்கும். இதன் மூலம் கட்சியில் சிலர் பரப்பிவரும் வாரிசு அரசியல் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளியாக இருந்திடும். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர்கள் பரம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அப்போது துரை வைகோவை சட்டமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட வைப்போம்” என்று கூறினார்.
மதுரை மதிமுக மாநாட்டில் துரை வைகோவின் அறிவிப்பு அரசியல் நுட்பம் வாய்ந்தது என்றும், இதன் மூலம் கட்சியில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள இடைப்பட்ட காலத்தில் துரை வைகோ தன்னை அரசியல் களத்திற்குத் தகுதியுள்ளவராக வளர்ந்துக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைகோவின் வாரிசு துரை வைகோ அரசியல் களத்தில் மிககவனமாகவே அடியெடுத்து வைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளமுடிந்தது.
–சிறப்பு செய்தியாளர்