ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் ! நடந்து என்ன ?
ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் ! நடந்து என்ன ? பெண் போலீசாரை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களோடு அவரது நேர்காணலை அப்படியே ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வி யாஸ்மின் கொடுத்த புகாரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் பிணை வழங்கக்கோரி ஏ-2 ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதபதி ஜெயப்பிரதா முன்பாக இன்று (மே-22) விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த் குமார் பிணை வழங்கக்கூடாது என்று கடும் ஆட்சேபணை தெரிவித்தார். “அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. பிணையில் வெளியில் வந்தால் தப்பிவிடுவார். ஏற்கெனவே, கீதா என்பவர் தொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர். இப்போதும் டெல்லியில் தலைமறைவானவர்.” என்பதாக வாதங்களை முன்வைத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த, ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்ஸ் மற்றும் கென்னடி, “போலீசாரின் கைது நடவடிக்கையே தவறானது. முறைப்படி கைது செய்யவில்லை, கடத்தித்தான் வந்தார்கள். டிஸ்கிளைமர் போட்டு வெளியான வீடியோவிற்கு அவரை எப்படி பொறுப்பாக்க முடியும்? கீதா வழக்கில் நீதிமன்றமே முன்ஜாமீன் வழங்கியதை எப்படி தப்பி ஓடினார் என்று சொல்ல முடியும்? இப்போதும் டெல்லிக்கு தப்பி ஓடவில்லை. பிரஸ் கவுன்சிலுக்குத்தான் சென்றார்.” என்பதாக வாதங்களை முன்வைத்தனர்.
“சொல் என்பது அறுவாளைவிட வலுவானது” என்று அரசு தரப்பில் வாதிட, “அரசாங்கத்தின் முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும்” என்று எதிர்த்தரப்பில் ஆக்ரோஷமாக வாதிட, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இறுதியாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் ஆறு மாதத்திற்கு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மாதம் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி கையெழுத்து போட வேண்டும். இருபதாயிரம் மதிப்பில் இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதான மற்ற வழக்குகளிலும் பிணை கிடைத்தால் மட்டுமே அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியும். அதுவரை இந்த பிணை உத்தரவு காகித ஆவணமாகவே இருக்கும் என்பதே யதார்த்தம்.
-ஆதிரன்