தொடர் மருத்துவ கண்காணிப்பில் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் ! நேசக்கரம் நீட்டுமா தமிழக அரசு ?
உடல் நலக்குறைவால் வாடும் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் ! நேசக்கரம் நீட்டுமா தமிழக அரசு ?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் உடல் நலிவுற்று தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறார் என்ற தகவல் கவலை கொள்ள வைக்கிறது. அரசியல்வாதியைப் போல மிடுக்கான உடல்வாகும், அவரது மனம்போலவே அமைந்த வெள்ளை உடுப்பும், நரைத்த முடியும் முறுக்கிவிடப்பட்ட மீசையுமே த.வெள்ளையனின் அடையாளம்.
வணிகர்களின் நலனுக்கான சங்கமாக வரம்பிட்டுக் கொள்ளாமல், தமிழ்ச்சமூகத்தையே பாதிப்பிற்குள்ளாக்கும் அனைத்து வகையான சுரண்டலுக்கும் எதிராக வணிகர்களை அணிதிரட்டிக் குரல் கொடுத்தவர் த.வெள்ளையன். வாட் வரிவிதிப்பு தொடங்கி, தற்போதைய ஜி.எஸ்.டி. நடைமுறை வரையில் வணிகர்களையும் அதன்வழியே மக்களையும் பாதிக்கும் அம்சங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி எதிர்த்து வந்தவர்.

இவர் முன்னெடுத்த மிக முக்கியமான போராட்டங்களுள் ஒன்று கோக் – பெப்சி புறக்கணிப்பு. தங்களது சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளின் கடைகளில் கோக் – பெப்சி விற்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.
உள்ளூர் அளவிலான வியாபாரிகளின் நடைமுறை சிக்கல் தொடர்பான விவகாரங்களை மட்டுமன்றி, சில்லறை வர்த்தகத்தில்அந்நிய முதலீட்டை எதிர்ப்பதான நாடு தழுவிய ஒட்டுமொத்த வணிகர் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்பியவர், த.வெள்ளையன்.
தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் காய்கறி சந்தையையும் கபளீகரம் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்ட, ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளை திறப்பதற்கு எதிராகவும் வணிகர்களை அணிதிரட்டி கடுமையான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்.
எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்து நின்றும் அமைப்பை நடத்தாமல் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் வணிகர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலோடு சுட்டிக்காட்டும் அணுகுமுறையை கொண்டவர். மக்கள் நலன் சார்ந்து இயங்கிய ம.க.இ.க. உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
எப்போதும் வெறுமனே வணிகர் சங்கங்களின் தலைவராக மட்டும் அவர் இருந்ததில்லை என்பதற்கான எடுப்பான உதாரணங்கள் தான் மேற்சொன்னவை. இவ்வளவு இருந்தும், தான் சார்ந்த வணிகர் சங்கப் பேரவை நிர்வாகிகளின் ஒத்துழைப்பை மட்டுமே நம்பி மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வருகிறார் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனா காலத்திற்கு பிறகே, அவர் நலிவடைந்துவிட்டதாகவும், இடையில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கிறார் அவரது மூத்த மகள் அனுபாரதி. மேலும், மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் ஞாபக மறதி மற்றும் பேசுவதில் தடுமாற்றம் ஆகிய சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
ஒவ்வொரு முறை மருத்துவ சிகிச்சையின்போதும், இரண்டு மூன்று இலட்சங்கள் வரையில் செலவு ஆகிறது என்றும்; முடிந்தவரை வணிகர் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் பண உதவி செய்துவருவதாகவும் தெரிவிக்கிறார். தற்போதைய நிலையில், மருத்துவ தேவைக்காக வாங்கிய கடன் மட்டுமே மூன்று இலட்ச ரூபாய் அளவுக்கு இருப்பதாக கூறுகிறார், அனுபாரதி.
தங்களது சூழலை யாரிடமாவது சொல்லி, எந்த வகையிலாவது உதவி வந்து சேராதா? என்ற எதிர்பார்ப்பிலும் வெள்ளையன் குடும்பமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்போதுகூட, மிகவும் தயக்கத்தோடே பேசினர். தங்களது தந்தையை தாங்கள் தான் கவனித்துக் கொண்டாக வேண்டுமென்ற உளப்பூர்வமான கடப்பாடிலிருந்து வெளிப்படுபவை.
ஆனால், அவர் வணிகர்களுக்கு மட்டுமேயான தலைவராக என்றுமே இருந்ததில்லை என்ற நிலையில், தற்போது அவரது குடும்பத்தாரும் வணிகர் சங்கத்தினரும் மட்டுமே அவரை பராமரித்தாக வேண்டும் என்பது அவலமான ஒன்று. தனிப்பட்ட நபர்களாக, அமைப்புகளாக நேசக்கரம் நீட்டுவதைக் காட்டிலும், அரசே தன் சொந்த செலவில் ஐயா த.வெள்ளையனுக்கான உயர்சிகிச்சைக்கான பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் என்பதே நம் மேலான எதிர்பார்ப்பு!
– இளங்கதிர்.