நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !

0

நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !

 

திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்-மல்லிகா தம்பதிக்கு சங்கிலி, சபரி அய்யப்பன் (வயது 22) என 2 மகன்கள் மற்றும் காளியம்மன் என்ற மகள் உள்ளார். இதில் சங்கிலி, காளியம்மன் ஆகியோருக்கு திருமணம் ஆகி, தனித்தனியாக குடியிருந்து வருகிறார்கள். கண்ணனும், மல்லிகாவும் மகளுடன் துரைசாமிபுரத்தில் வசித்து வருகின்றனர். மதுரைவீரன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சபரி அய்யப்பன் தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரி அய்யப்பன் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் சபரி அய்யப்பன் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

 

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் சபரி அய்யப்பன் வசித்த வீட்டுக்கு, சங்கிலி வந்தார். அப்போது வீட்டில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சபரி அய்யப்பன் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவருடைய கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்தனர். பின்னர் சபரி அய்யப்பன் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

சபரி அய்யப்பன் கொலையுண்ட வீடு பட்டிபோல இருந்தது. ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள அந்த வீட்டை சுற்றி சுவருக்கு பதிலாக கம்புகள் நடப்பட்டு, சுற்றிலும் சாக்குப்பை மற்றும் சேலையாலும் அடைக்கப்பட்டிருந்தது. மேற்கூரையில் சாக்கு போட்டு போர்த்தப்பட்டிருந்தது. அந்த வீட்டில் 3 பார்சல் சாப்பாடு கிடந்தது. மேலும் மதுபாட்டில்களும் கிடந்தன. எனவே, அங்கு நண்பர்களுடன் சேர்ந்து சபரி அய்யப்பன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அவரை கழுத்தை அறுத்தும், தலையில் கல்லை தூக்கிப்போட்டும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனால், கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்போது அவருடன் அடிக்கடி சுற்றித்திரியும் நண்பர் ரீகன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி காஜாபேட்டை பகுதியில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.