பத்திரிகையாளர் உழைப்புக்கு கவுரவமும்…. நாளிதழ் அதிபரின் பெருந்தன்மையும்

0

பத்திரிகையாளர் உழைப்புக்கு கவுரவமும்…. நாளிதழ் அதிபரின் பெருந்தன்மையும்

ஆண்டுதோறும் பத்திரிகையாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவருக்கு வாழ்நாள் சாதனையாக “கலைஞர் எழுதுகோல்” விருது வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த விருதானது ஐந்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையினையும் சான்றிதழையும் கொண்டது. ஆண்டுதோறும் ஜூன் -3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் அந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல்” விருது மூத்த பத்திரிகையாளர் ஆன தினத்தந்தி ஐ. சண்முகநாதன் என்பவர்க்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது எண்பத்தியேழு.

2 dhanalakshmi joseph
 விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ. சண்முகநாதன்
விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ.சண்முகநாதன்

சண்முகநாதன் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 1935ல் பிறந்தவர். பதினேழு வயதில் திருச்சி தினத்தந்தி பதிப்பில் செய்தியாளர் மற்றும் ஆசிரியர் குழுவில் இடம் பிடிக்கிறார். தன்னுடைய சுறுசுறுப்பினாலும் தமிழ் மொழி மீதான பற்றினாலும் சமயோசித ஐடியாக்களினாலும் அந்த வயதிலேயே உதவி ஆசிரியர் என்கிற நிலைக்கு உயர்ந்து வந்து விடுகிறார். தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவரது பார்வை சண்முகநாதன் மீது பதிகிறது. 1953ல் சண்முகநாதனை சென்னைக்கு அழைத்துச் சென்று விடுகிறார் சி.பா. ஆதித்தனார். அங்கு தினத்தந்தியின் செய்திகள் திட்டமிடும் உருவாக்கும் பணிகளில் அவரை ஈடுபடுத்துகிறார். சண்முகநாதனும் அதனை வெகு லாவகமாகக் கையாண்டு தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரிடம் நற்பெயர் பெறுகிறார்.

- Advertisement -

- Advertisement -

தினத்தந்தி நாளிதழில் எட்டு காலம் செய்திகளின் தலைமை ஆசிரியராகவும் திறம்பட செயலாற்றுகிறார்.   நாளிதழ் ஒன்றில் அப்போதெல்லாம் தொடர் கதைகள் வருவது ரொம்ப ரொம்ப அபூர்வம். வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அந்தத் தொடர்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு நாளிலும் வெளிவரும்.

1970, 1980களில் தினத்தந்தி நாளிதழில் “நாதன்” என்கிற புனை பெயரில் ஐ. சண்முகநாதன் எழுதிய குடும்பம் மற்றும் காதல் சார்ந்த தொடர்கதைகள் அப்போதைய தினத்தந்தி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பின்னர், “வரலாற்றுச் சுவடுகள்” என்கிற தலைப்பில் தினத்தந்தி நாளிதழில் தொடர் வெளியானது. அதன் தொகுப்பாசிரியராக பணியாற்றியவர் ஐ. சண்முகநாதன். அப்போது தினத்தந்தி நாளிதழ் விற்பனையும் கூடியது தனிச் சிறப்பாகும். அதே தொகுப்பு பின்னர் நூலாக வெளி வந்த போதும் விற்பனையில் பெரும் சாதனையை நிகழ்த்தியது.

4 bismi svs

ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் அதன் நிறுவனர் தொடங்கி அவர்களின் மூன்று தலைமுறையினரிடமும் பணியாற்றிய பொறுமையும் பெருமையும்  ஐ. சண்முகநாதனைத் தான் சாரும். நிறுவனர் சி.பா. ஆதித்தனார் (1905 -1981),  பா. சிவந்தி ஆதித்தன் (1936-2013), சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் (1965….) ஆகிய மூன்று தலைமுறையிலும் தினத்தந்தி நாளிதழோடு சண்முகநாதனின் தொடர்பு இன்னமும் நீடித்து வருகிறது. இப்போதும் தினத்தந்தி நாளிதழின் ஆலோசகராக இருந்து வருகிறார். அந்த வகையில் பத்திரிகைத் துறையில் தனிச் சிறப்புக்கு உரியவராக இருந்து வருகிறார் ஐ. சண்முகநாதன்.

ஒருமுறை சண்முகநாதனுக்கு குடும்பத்தில் பணக் கஷ்டம். யாரிடம் கேட்பது எனத் திகைத்து நிற்கிறார். ஏதும் புரியவில்லை. தயங்கித் தயங்கி அப்போது சிவந்தி ஆதித்தனிடம் பகிர்ந்து கொள்கிறார். சிவந்தி ஆதித்தனும் அதற்கு ஒரு உபயம் சொல்கிறார். சண்முகநாதனுக்குப் பணம் கிடைத்து விடுகிறது. அவ்வளவு தான். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

2013ல் தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் இறந்து விடுகிறார். அதன் பின்னர் அவரது மகன் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொறுப்பேற்கிறார்.  ஓய்வாக இருக்கும் ஒரு நாளில் அப்பாவின் முக்கிய பீரோக்களைத் திறந்து பார்க்கிறார் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன். அதனுள்ளே வீட்டுப் பத்திரம் ஒன்று தென்படுகிறது. எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். ஐ. சண்முகநாதனின் சென் னை வீட்டுப் பத்திரம். அலுவலகம் வந்ததும் சண்முகநாதனை உடனே வரச் சொல்கிறார்.

சண்முகநாதனின் வீட்டுப் பத்திரத்தை அவரிடமே தருகிறார் பாலசுப்பிரமணியன் ஆதித்தன். வீட்டுப் பத்திரத்தினைத் தந்து விட்டு சண்முகநாதனிடம் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துகளால் பதிக்கத்தக்கன. “நீங்க உங்க வீட்டுப் பத்திரத்தை எந்தச் சூழ்நிலையில என் அப்பாகிட்டே குடுத்திங்கனு எனக்குத் தெரியாது.

என்னோட அப்பா (சிவந்தி ஆதித்தன்) உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார்னும் எனக்குத் தெரியாது. அதுல நீங்க எவ்வளவு திருப்பித் தந்தீங்கனும் எனக்கு எதுவுமே தெரியாது. அதெல்லாம் எதுவுமே நான் தெரிஞ்சுக்கவும் நெனைக்கலை. எனக்கு விருப்பமும் இல்லை. உங்க வீட்டுப் பத்திரத்தை சந்தோசமா நீங்களே வெச்சுக்கோங்க.”  இது எப்போதோ நடந்த நிகழ்வு தான்.

தினத்தந்தி இயக்குனர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும், “கலைஞர் எழுதுகோல்” விருது பெற்றுள்ள தினத்தந்தி ஐ. சண்முகநாதன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் இணைந்தே நாம் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.