விருந்தோம்பல் பயிற்சியாளர்…நாங்களும் மனிதர்கள் தானே ! தொடர் – 2
ஹோட்டல் துறை என்றொரு உலகம்ன்னு இந்த தொடருக்கு தலைப்பு, அப்படிப்பட்டஉலகத்துல என்னவெல்லாம் இருக்குமென்று தெரிந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். ஆனால் இன்று நமக்கு ஹோட்டல் என்றால் என்னவென்று தெரியுமா? பலர் ஹோட்டல் என்றால் சாப்பிடும் இடம் என்றுதான் சொல்கின்றனர். ஹோட்டலுக்கும் ரெஸ்டாரண்டுக்கும் முதலில் வித்தியாசம் தெரிந்துகொள்வோம். ஹோட்டல் என்ற வார்த்தைக்கு தமிழில் விடுதி என பொருள் கொள்ளலாம். அதாவது தங்கும் வசதி உள்ள இடம் என்பதாகும். ரெஸ்டாரண்ட் என்றால் உணவகம் என்பதாகும். ஆம், நாம் இன்று ஹோட்டல் என சொல்லிக் கொள்வதெல்லாம் ரெஸ்டாரண்ட்தான்.
ஹோட்டல் துறை என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது சமையல்தான். நான் 1996-ல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கக் கல்லூரியில் நுழைந்தேன். அப்போதெல்லாம் இந்த படிப்புக்கு சமுதாயத்தில் பெருமதிப்பு கிடையாது. சமையல்காரன் என இளக்காரமாக பேசுவார்கள். இதற்காகவே உள்ளூரில் வேலை செய்யக்கூடாது என முடிவெடுத்த பலருள் நானும் ஒருவன். ஆனால் இன்று செஃப் என பெருமிதத்துடன்அழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. செஃப் தாமு, செஃப் பழனிமுருகன், செஃப் மால்குடி கவிதா போன்ற பிரபலமான வல்லுனர்கள் இந்தத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், சமையல் மட்டுமே இந்தத் துறை கிடையாது. எடுத்துக்காட்டாக, சமைத்த உணவை பரிமாறும் துறை மிகவும் முக்கியமாகும். நினைத்த வேலை கிடைக்கலன்னா, சர்வர் வேலைக்கு போக வேண்டியதுதான் என இப்பணியை குறைவாக பேசுபவர்கள் இன்றும் உள்ளனர்.
உணவைப்பரிமாறும் இந்த வெயிட்டர் / சர்வர் / பேரர் / ஸ்டுவேர்ட் (ஸ்டார் ஹோட்டலில் ஸ்டுவேர்ட் என அழைப்பார்கள்) பணி எவ்வளவு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய பணி தெரியுமா?
உலகத்தில் அடுத்தவர் சாப்பிடுவதால் மகிழ்ந்திருக்கும் ஒரு உன்னத உயிர் சர்வீஸ் செய்யும் மனிதர்தான். இன்முகத்துடன் அடுத்தவர் மன நிறைவை எதிர்நோக்கும் இக்குணம் அன்னைக்கு மட்டுமே உண்டு. அதனால்தான்; நான் எப்பொழுதும் சொல்வேன், அம்மாவுக்கு அடுத்து ஒரு உன்னதமான சேவையைச் செய்பவர் உணவுத் தொழில் செய்பவர் ஆவார். சர்வீஸ் செய்பவர்கள் சாப்பாட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், தாமதமாகத்தான் சாப்பிடுவார்கள். தனது பசியினையும் கால் வேதனையினையும் மறைத்துக் கொண்டு எப்பொழுதும் நின்று கொண்டே இருக்கும் இவர்களை அலட்சியமாக நினைக்கும் மனிதர்கள் ஏராளம்.
ஒரு ஹோட்டலுக்கு செல்லும்போதே அதிகார தோரணை பலருக்கு வந்துவிடுகிறது. அங்கிருப்பவர்கள், வருபவர்களுக்கு உபசரிக்கும் பணிக்காக உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உணவகத்தின் உணவோ உபசரிப்போ சரியில்லை என்றால், நிச்சயம் அதனைச்சுட்டிக் காட்ட வேண்டும். வெகுவான இடங்களில் அமைதியாக சுட்டிக்காட்டுபவர்கள் உணவகத்தில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
ஹோட்டல் துறையில் நாங்கள் சொல்லிக் கொடுக்கும் பால பாடம் என்ன தெரியுமா? வருபவர் வாடிக்கையாளர் அல்ல விருந்தினர். விருந்தினர் நமது கடவுள், விருந்தினர் எப்பொழுதும் சரியானவர். என்பவைதான். இப்படி வருபவர்களை விழுந்து விழுந்து உபசரிக்கத்தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.
யாரேனும் உபசரிப்புக் குறைவாகவோ, கவனக்குறைவாகவோ இருந்தால் நிச்சயம் சொல்லுங்கள். ஆனால் மனிதத்தன்மையோடு எடுத்துச் சொல்லுங்கள்.
ஹோட்டல் துறையில் சேர்வதற்கு முதல் தகுதி என்ன தெரியுமா? உங்களுக்கு சாப்பிடப் பிடிக்குமென்றால் இத்துறையை தேர்ந்தெடுக்காதீர்கள். உங்கள் சாப்பாட்டை அடுத்தவர் சாப்பிடப் பிடிக்குமென்றால், நீங்கள்தான் இத்துறைக்குச் சரியானவர். உங்களுக்கு உணவு பரிமாறப்படுவது பிடிக்குமென்றால் இத்துறை சரியல்ல! நீங்கள் பரிமாறும்போது அடுத்தவர் மகிழ்வது பிடிக்குமென்றால் நீங்கள் இத்துறைக்குபொருத்தமானவர். ஆம், நம்மால் அடுத்தவர் மகிழவேண்டும் என நினைப்பவர்தான் ஹோட்டல் துறைக்கு சரியானவர். இதனை முதலில் மனதளவில் நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னரே, படிப்பு பற்றியும் வேலை பற்றியும் சிந்திக்கத் துவங்க வேண்டும். ஹோட்டல் துறையில் சேர்வதற்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும். அதனைப் படித்தபின் பலவகையான பணிகள் உள்ளன. ஹோட்டல் துறையின் பிரிவுகளைப் பற்றி நாம் அடுத்த தொடரில் காண்போம்.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்காதவர்களும் இத்துறையில் வெற்றி பெறலாம் என்றால் அதற்கு காரணம் வாடிக்கையாளர் / விருந்தினர் சேவையை உணர்ந்து நல்ல உபசரிப்பை செய்வதுதான். இனி உணவகங்களுக்கு செல்பவர்கள், அங்கு பரிமாறும் நபர்களிடம் நீங்க சாப்புட்டீங்களா? என கேளுங்களேன். ஏற்கெனவே கேட்பவர்கள் தொடர்ந்து கேளுங்கள், கேட்காதவர்கள்கேட்கத்துவங்குங்கள், அனைவரும் இன்முகத்துடன் பேசுங்கள்….
நீங்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் எங்கள் சேவையைத் தொடர்வோம். வாருங்கள், நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவைபுரிய, ஹோட்டல் துறையின் மூலம் உங்களை மகிழ்விக்கும் நாங்களும் மனிதர்கள்தான் …..
தொடரும்
கபிலன் ராமராஜன்,
விருந்தோம்பல் பயிற்சியாளர்.