மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 10
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 10
“அணைந்த விளக்கும் அடுத்த விளக்கை ஏற்றும் கண்தானம்” என்கிற அற்புதக் கவிதைக்குச் சொந்தக்காரர். இது மாதிரி குறிப்பாகச் சொல்ல நிறைய உண்டு. பட்டிமன்றப் பேச்சாளர்கள், உரையாளர்கள் இவரது கவிதைகளை பயன்படுத்தி காரவொலிகளை வாங்கிக் குவிப்பார்கள். அப்போது எங்கோ ஒரு மூலையில் தோட்டத்தில் இவர் கூலி வேலை பார்த்துக் கொண்டிருப்பார்.

உழைப்பை அதன் உன்னதத்தை வரப்பிலிருந்து அல்ல. வயலிலிருந்து அனுபவிப்பவர். பாடுபடுகையில் பெருகுவது வியர்வை மட்டுமல்ல. இவரது படைப்புகளும்தான். அவர்தான் கவிஞர் ஆங்கரை பைரவி அவர்கள். இயற்பெயர் ரா. ரெங்கராஜன். திருச்சிராப்பள்ளி லால்குடி வட்டத்தில் ஆங்கரை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். நமக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமான படைப்பாளி. ‘விரல் தொட்ட வானம்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
‘பின்னிருக்கையில் ஒரு போதிமரம்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியாகவும், அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிகப் பிரிவு எழுத்தராகவும் பணிபுரிந்து வருபவர். முதலில் ஒரு வானொலி நேயராக அடியெடுத்து வைத்தவர். பின்பு வாசகராக, கவிஞராக, எழுத்தாளராக மலர்ந்து, வானொலியில் கவிஞராகவும், கதை ஆசிரியராகவும், இலக்கிய மேடைகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ஆற்றலாக இயங்குபவர்.
விந்தன் நினைவு அறக்கட்டளை நடத்திய போட்டியில், “அப்பா” என்கிற இவரது சிறுகதை முதல் பரிசு பெற்றது. அதோடு புதுவை மாந்தன் இதழ் விருதையும், தமிழக அரசின் திருச்சி மாவட்ட அரசு விருதையும், சாகித்ய அகாடமி மேடைகளில் கதைகளும், கவிதைகளும் வழங்கியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதிஇருக்கிறார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் திருச்சி மாவட்டத்தின் இலக்கிய அணிச் செயலாளராகவும் இருந்து வரும் ஆங்கரைபைரவி விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசும் படைப்பாளர் என்பதே ஆகச் சிறந்தவொன்றாகும்.
-பாட்டாளி