கோவில்பட்டியிலிருந்து குஜராத் வரை போக்கு காட்டிய நகை திருடன் ! கொத்தாக தூக்கிய போலீசு !
கோவில்பட்டியில் நகையை திருடி விட்டு குஜராத் வரை போலீசார் அலையவிட்டு டிமிக்கி கொடுத்த கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் சென்னையில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருள் சாந்தி. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18 ந்தேதி (18.10.24) அருள் சாந்தி தனது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 16 பவுன் நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்து சுந்தர் மனைவி அருள் சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கூசாலிபட்டி மேட்டு தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகன் வானு பாபு என்ற பாபு (34), திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் சண்முகம் காவலர்கள் கழுகாசலமூர்த்தி, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்த வானுபாபு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என மாறி மாறி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இறுதியில் குஜராத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. போலீஸாரும் விடாமல் துரத்தி குஜராத் வரை சென்றதும்; இதனை மோப்பம் பிடித்த வானுபாபு அங்கிருந்து எஸ்கேப் ஆகி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கியிருக்கிறான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கோழியை அமுக்குவது போல வேனுபாபுவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும், வானுபாபு திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக களக்காடு கக்கன் நகர் மேல தெருவை சேர்ந்த இந்திரா (49), அதே பகுதியில் வசித்து வரும் சேரன்மாதேவியை சேர்ந்த சுரேந்தர் மனைவி சகிதா ஆகியோரையும் போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். திருட்டுக்கும்பலை பின் தொடர்ந்து திருடனையும் பிடித்து கொள்ளை போன நகையையும் மீட்ட போலீசாரின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
— மணிபாரதி.