இதுதாண்டா ஜர்னலிசம் – 1
இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஸ்டிங்’ வீடியோக்களில் நாம் அடிக்கடி கேட்பது ‘டிஃபேம்’ பண்றது என்கிற சொல்லாடல். அதாவது ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி அதற்கு ‘தட்சிணை’ வாங்குவது. இவர்களெல்லாம் பேசினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று கதை கட்டினால் அதை நம்பி காசு கொடுக்க ஒரு கட்சியும் இருக்கிறது !
சரி விஷயத்துக்கு வருவோம்.
அச்சு ஊடகத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்த நாளிலிருந்து நாங்கள் கேட்டு வரும் எச்சரிக்கை செய்திகளிலும் கட்டுரைகளிலும் ‘defamation’ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான். விமரிசனத்திற்கும் அவதூறுக்கும் வேறுபாடு உள்ளது.
ஃபிரண்ட்லைனில் ஆசிரியராவதற்கு முன் நீண்ட காலம் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியை நான்தான் எடிட் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது சீனியர்கள் சொன்னது பத்திரிக்கையை விமரிசித்து வரும் கடிதங்களையும் பிரசுரிக்க வேண்டும். Retain the criticism and cut out the abuse. அதாவது விமரிசனத்தை வைத்துக் கொள்ளுங்கள், அவதூறைக் கத்தரித்து விடுங்கள். கட்டுரைகளைப் பொறுத்த வரையில் இதில் சமரசமே கூடாது.

அவதூறு இல்லாமல் எழுதுவதிற்கு ஒரு முக்கிய சான்றினைக் குறிப்பிட விரும்புகிறேன். என் நெருங்கிய சகா இளங்கோவன் ராஜசேகரன் சுமார் ஆறு மாதங்கள் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து மணல் கொள்ளை குறித்து ஒரு கவர் ஸ்டோரி எழுதினார் (இதுவும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்தான்.
இதழியல் பணி அடிப்படையிலேயே ஒரு விசாரணைதான்) அந்தக் கட்டுரையில், சம்பந்தப்பட்ட புள்ளிகளின் பெயரே இருக்காது. அவர்களின் நிறுவனத்தின் பெயர் கூட அரசு நியமித்த ஒரு விசாரணைக் குழுவின்
அதிகாரப் பூர்வ அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோளில் மட்டுமே வரும்.
அப்படி எழுதப் பட்ட கவர் ஸ்டோரியின் அடி ஒரு மிகப் பெரிய மணல் புள்ளிக்கு வலிக்க அவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு நாங்கள் அலுவலகத்தின் வழக்குரைஞர் மூலம் பதில் அனுப்பினோம். பதிலே இல்லை. ஏனெனில் அது அவ்வளவு ஆதார பூர்வமான ஆனால் அவதூறு செய்யாத கட்டுரை. இளங்கோவனுக்கு விவரம் போதவில்லை. அவர் திரட்டிய தகவல்களை வைத்துக் கொண்டு அந்தப் பக்கம் பேரம் பேசி கோடீஸ்வரர் ஆகியிருக்கலாம். அப்படிப் பேரம் பேசி வளம் பெற்றவர்களும் உண்டு.
டெய்ல்பீஸ்:
இவர் தூத்துக்குடியில் தி இந்து நிருபராக இருந்த போதே (1990களில்) மணல் கொள்ளை பற்றி எழுதியதால் சினிமாவில் வரும் வில்லன்களைப் போல் சிலர் அவர் வீட்டிற்குச் சென்று மிரட்டியதும் உண்மை. ஆனால் நான்தான் மணல்கொள்ளை விவகாரத்தை எக்ஸ்போஸ் செய்தேன் என்று சில ஆண்டுகளுக்கு முன் கூச்சமில்லாமல் பேட்டி கொடுத்தவர்களும் உண்டு.
கட்டுரையாளர் –

(தொடரும்)