கொள்ளை போகும் கோயில் நிலங்கள் நடவடிக்கை எடுப்பாரா சேகர்பாபு!
கொள்ளை போகும் கோயில் நிலங்கள் நடவடிக்கை எடுப்பாரா சேகர்பாபு!
திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் ரோட்டில் அமைந்துள்ளது நல்ல காவல் தாய் அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு சொந்தமாக திருச்சி ரோட்டில் சுமார் 12 ஏக்கர் 98 சென்ட் நிலங்கள் உள்ளன. இவற்றின் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பாகும். துறையூரின் முகப்பில் திருச்சி செல்லும் பிரதான சாலையின் முன்பாகவே அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தற்போது தனிநபர்கள் அத்துமீறி ஆக்ரமித்துக் கொண்டு அந்த இடங்களில் வணிக வளாகங்கள், வாகனம் பழுது பார்க்கும் பட்டறை, குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளாகவும் மாற்றி லட்சக்கணக்கில் விற்று வருகின்றனர்.
துறையூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பல்வேறு இடங்களில் இடம் பார்த்தும் இடம் கிடைக்கவில்லை. அமைச்சர் நேரு உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்கு பலமுறை நகர்ப்புற பகுதிகளில் தேடியும் இடம் கிடைக்கவில்லை. தற்போது இந்த கோவில் நிலத்தை அறநிலையத் துறையிடம் ஒப்புதல் பெற்று பேருந்து நிலையம் அமைத்தால் அனைத்து மக்களுக்கும் மிகவும் செளகரியமானதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கோயில் நிலத்திலுள்ள ஆக்ரமிப்புகளை எடுத்தாலே மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை விட பெரிய அளவில் சகல வசதிகளுடன் இந்த இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்கலாம் என்றும் கருதுகின்றனர். பல வருடங்களாக தனிநபர்கள் அத்துமீறி கோயில் நிலத்தை ஆக்ரமித்துள்ளதைப் பற்றி கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “இது முழுவதும் கோவிலுக்கு சொந்தமான ஊழிய மானிய நிலங்களாகும்.
மேலும் திருக்கோயில் வசம் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் தனிநபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், கோவில் இடத்தை முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுவதாக கூறினர்.
-ஜோஸ்