நாலரை கோடியை லவட்டிய மன்னன்:

0

நாலரை கோடியை லவட்டிய மன்னன்:

தமிழ் சினிமா ஏரியாவான கோலிவுட்டில் அப்போதிருந்து இப்போது வரை, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், ஃபைனான்சியர், ஹீரோ, ஹீரோயின்கள் இவர்களில் யாராவாது ஒருவர் இன்னொருவர் மீது பணமோசடி புகார் கொடுப்பதும், கொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களிடம் அழுது தீர்த்துவிட்டுக் கிளம்புவதும் வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட ‘சீட்டிங்’ போட்டியே நடக்கிறது என்று சொல்லலாம். இப்படி நடந்து கொண்டிருக்கும், நடக்கப் போகும் போட்டிகளில் பட்டம் வெல்லும் ‘சாம்பியன்’ யார் என்பதை இந்த செய்திக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். முதலில் 2010-லிருந்து ஆரம்பிப்போம்.

சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சினிமா தயாரிக்கும் ஆசையுடன் கோலிவுட்டில் வந்திறங் கினார். ‘திமிரு’ என்ற ஒரே ஒரு ஹிட் படத்தை டைரக்ட் பண்ணிய தருண்கோபியை ஹீரோவாகவும் டைரக்டராகவும் போட்டு ‘பேச்சியக்கா மருமகன்’ என்ற படத்தை ஆரம்பித்தார். இதில் பேச்சியக்காவாக வடிவுக்கரசி நடித்தார். பாதிக்கும் மேல் படம் வளர்ந்த நிலையில், படத்தின் வியாபாரத்திற்காக மன்னன் பிலிம்ஸ், மன்னன் (இப்போது முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் துணைத்தலைவராக இருக்கிறார் இந்த மன்னன்) பெயரில் படத்தின் உரிமையை எழுதிக் கொடுத்தார் சரவணன்.

இந்த உரிமையைப் பயன்படுத்தி சில ஃபைனான்சியர்களிடம் நாலரைக் கோடி கடன் வாங்கினார் மன்னன். படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான சரவணனுக்குத் தெரியாமல் ‘பேச்சியக்கா மருமகன்’ மொத்தப் படத்தையும் முடித்து ரிலீசுக்கு ரெடியான போது தான், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மன்னன் நாலரைக் கோடி வாங்கிருக்காரு. அதை செட்டில் பண்ணிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க” என சரவணனை கிறுகிறுக்க வைத்துள்ளனர் ஃபைனான்சியர்கள்.

சரவணனும் கோர்ட், கேஸ், வாய்தா, ஸ்டே ஆர்டர் என லோல்பட்டும் மன்னனிடமிருந்து விடுதலை பெறமுடியாமல், 12 வருடங்களாக ‘பேச்சியக்கா மருமகனை’ பெட்டிக்குள்ளே முடங்கிவிட்டது. கடந்த மாதம் சேலம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசிடம் மீண்டும் ஒரு புகாரைக் கொடுத்துவிட்டு, ‘அட போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும்’ என்ற விரக்தியில் சேலத்திலேயே செட்டிலாகிவிட்டார் சரவணன். ’அங்குசம்’ சார்பாக நாம் சரவணனிடம் பேசிய போது, “பக்காத் திருடனும் பாக்தாத் திருடனும் கவுன்சிலின் முக்கியப் பொறுப்பில் இருந்தால் பணத்தைப் பறிகொடுத்த என்னைப் போல ஆளுங்கெல்லாம் விக்கிக்கிட்டுச் சாக வேண்டியது தான்” என ரொம்பவே நொந்து பேசினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.