இணைபிரியாத நட்பை சிதைத்த கூடா நட்பு : தற்கொலை வழக்கில் சிக்கிய மனிதம் தினேஷ் ! நடந்தது என்ன ?
இணைபிரியாத நட்பை சிதைத்த கூடா நட்பு : தற்கொலை வழக்கில் சிக்கிய மனிதம் தினேஷ் ! நடந்தது என்ன ?
திருச்சியில் இயங்கிவரும் “மனிதம் டிரஸ்ட்” நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனிதம் தினேஷ் என்கிற தினேஷ்குமார், திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த மோகன்தாஸ் – எஸ்தர் தம்பதியினரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சியில் மனிதம் டிரஸ்ட் என்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவர் தினேஷ் குமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அதன் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலராக மாநில அளவிலான பொறுப்புகளையும் வகித்து வந்தவர்.
மனிதம் டிரஸ்ட் அமைப்பின் வழியாக, ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம், ஆதரவற்ற தெருவோர வசிப்பவர்களுக்கு அன்றாடம் உணவு வழங்குவது, அவர்களுக்கு மனநல சிகிச்சை அளித்து அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பது, ஆதரவற்ற பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவது என மனித நேய அடிப்படையிலான பணிகளை மேற்கொண்டு வருபவர். முதல்வரின் கரங்களால் சிறந்த இளைஞருக்கான விருதை, இளம் வயதிலேயே பெற்றவர் என்ற பெருமையையும் உடையவர் இந்த தினேஷ் குமார். தமிழகத்தின் சிறந்த ஆளுமைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலருடனும் நல்ல அறிமுகமும் தனிப்பட்ட பழக்கமும் கொண்டவர்.
இவ்வளவு பெருமைகளையும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெற்றவராகவும் திகழ்ந்துவந்த தினேஷ்குமார்தான், “மனிதாபிமானமற்ற முறையில் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்ததற்காகவும்; இரு உயிர்களின் தற்கொலை முடிவுக்கு காரணமாக இருந்ததாகவு”மான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இணை பிரியாத நண்பர்கள் இருவரும் :
இதில் கொடுமையான விசயம், தற்கொலை செய்து மாண்டு போன தாராநல்லூரை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும், தினேஷ்குமாரும் இணை பிரியாத பால்ய நண்பர்கள்; மோகன்தாஸ் தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும்கூட இணைபிரியாத நண்பர்களாகவே இருந்து வந்தவர்கள் என்பதுதான்.
“நான் தினேஷை ஒரு ஆயிரம் முறை சந்தித்திருக்கிறேன் என்றால், அதில் தொள்ளாயிரத்து தொன்னூறு முறை மோகன்தாஸூடன்தான் அவரை பார்த்திருக்கிறேன். தினேஷ் இருக்கும் இடங்களிலெல்லாம் மோகன்தாஸூம் எப்போதும் உடன் இருப்பார்.” என்கிறார், அரசியல் தளத்தில் அவருடன் நெருக்கமாக பயணித்து வரும் தோழர் ஒருவர்.
”சமீபத்தில், அவர்கள் இருவரையும் தியேட்டர் ஒன்றில் சந்தித்தேன். அப்போது கூட, இவனுக்கு கடன் பிரச்சினை இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் என்கிறான். இவன் பிரச்சினையை கொஞ்சம் தீர்த்து விடுங்கள் தோழர் என்றார் தினேஷ். நான் இப்போது நிம்மதியாக படம் பார்க்க வந்திருக்கிறேன். எனது அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள் என்னவென்று பேசலாம். என்று சொன்னேன். கடைசியில், இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்” என்பதாக வேதனை தெரிவிக்கிறார், வழக்கறிஞர் ஒருவர்.
“தினேஷ் குடும்பத்தில் மோகன்தாஸை சக பிள்ளையாகத்தான் பார்ப்பார்கள். அதுபோலவே, மோகன்தாஸ் வீட்டிலும் தினேஷை சக பிள்ளையாக பார்ப்பார்கள். இருவருமே குடும்ப ரீதியாகவும் பிணைப்பை கொண்டவர்கள். இந்த துர்சம்பவம் எப்படி நிகழ்ந்ததென்றே, எங்களுக்கும் புதிராகவே இருக்கிறது.” என்கிறார்கள், அவர்களது குடும்ப நண்பர்கள்.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் தொடங்கிய நட்பு, பிஷப் ஹீபர் கல்லூரி வரை தொடர்ந்தது. ஆசையும் இலட்சியமுமாக தினேஷ் தொடங்கிய மனிதம் டிரஸ்டின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் தினேஷ். அந்த டிரஸ்டின் செயலர் மோகன்தாஸ். அவ்வளவு அன்யோன்யமாக இருந்து வந்தவர்களுக்கு மத்தியில் என்னதான் பிரச்சினை வந்தது?
அதுவும், நண்பன் தினேஷ்குமார், அவரது தந்தை ராமையா, மற்றும் அவரது அண்ணன் புருஷோத்தமன் ஆகியோர்தான் என் சாவுக்கு காரணம் என்று சுவற்றில் மார்க்கர் பேனாவில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, காதல் மனைவியோடு ஒன்றாக தூக்கிட்டு சாகும் அளவுக்கு போனது எப்படி என்பதுதான் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த வழக்கில் அவிழ்க்க வேண்டிய முடிச்சாகவும் அமைந்திருக்கிறது.
இருவருக்கும் இடையில் அப்படி என்னதான் பிரச்சினை?
இருவருக்குமிடையிலான கொடுக்கல் வாங்கலில் எழுந்த பஞ்சாயத்துதான் தற்கொலைக்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது, என்கிறார்கள். ”மோகன்தாஸ் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்க, நண்பன் என்ற முறையில் தினேஷும் வீட்டை அடமானம் வைத்து உதவி செய்ய, ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதில் எழுந்த மனஸ்தாபங்கள்தான் தற்கொலைக்கான பிரதான காரணமாக அமைந்திருக்கிறது.
மோகன்தாஸின் தற்கொலைக் குறிப்புகளும், வீடியோ பதிவுகளும் அதையே உறுதிபடுத்துகின்றன. அதன் அடிப்படையில்தான், தினேஷை கைது செய்திருக்கிறோம். தலைமறைவான அவரது தந்தை, மற்றும் அண்ணனை தேடி வருகிறோம்.” என்கிறார் வழக்கை விசாரித்து வரும் காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன்.
இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இவர்கள் இருவரோடு தொடர்புடையதாக மட்டுமில்லை. அது பல்வேறு கிளைக் கதைகளையும், கிரிமினல் பின்னணியையும் கொண்டதாக இருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விசயமாகவும் இருக்கிறது.
ஷேர் மார்க்கெட்டும் ரெண்டாம் நெம்பர் பிசினஸும் !
மனிதம் தினேஷும், மோகன்தாஸும் எப்படி பால்ய நண்பர்களோ, அதுபோலவே சுரேஷ் என்பவரும் தினேஷின் உடன்பிறந்த அண்ணனான புருஷோத்தமனும் பால்ய நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால், ஒரே தெருவில் வசிப்பவர்கள். சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் சில நண்பர்களுடன் இணைந்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் Prime consulting Services என்ற பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து ஷேர் மார்க்கெட் பிசினஸில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 12% வரையில் டிவிடெண்ட் தருவதாக பலரிடம் பணத்தையும் வசூல் செய்திருக்கிறார்கள், சுரேஷ் – சரண்யா தம்பதியினர்.
அண்ணனின் நண்பர், குடும்ப நண்பர் என்ற பழக்கத்தில் தனிப்பட்ட முறையில் மனிதம் தினேஷும் சுரேஷிடம் சில இலட்சங்களை முதலீடு செய்திருக்கிறார். தனது நண்பர்கள், உறவினர்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். அந்த வகையில்தான், தினேஷ் அறிமுகத்தில் மோகன்தாஸூம் ஒரு இலட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். பின்னர், பல்வேறு தவணைகளில் தினேஷுக்கு தெரியாமல் 19 இலட்சத்தை முதலீடு செய்திருக்கிறார் மோகன்தாஸ். இந்த நிலையில், இவ்வாறு டிரேட் மார்க்கெட் செய்வதாகக்கூறி பலரிடமும் வசூலித்த பணத்தில் சுமார் 1.5 கோடியை மதுரையைச் சேர்ந்த கும்பல் ஒன்றிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள், சுரேஷ் – சரண்யா தம்பதியினர்.
அது, இரண்டாம் நெம்பர் பிசினஸ் என்று தெரிந்தே இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்திருக்கிறார், சுரேஷ். இதை வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும், முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சிய சுரேஷ், நெருங்கிய கூட்டாளிகளிடம் கூட ஏமாந்த விசயத்தை வெளிப்படுத்தாமல் மாதந்தோறும் முறையாக டிவிடென்ட் தொகையை வழங்கி வந்திருக்கிறார்.
மாதந்தோறும் முறையாக பணம் கொடுத்து நம்பிக்கையை பெற்றிருந்ததாலும், இடைத்தரகர்களாக பணம் வசூலித்துக் கொடுப்பவர்களுக்கு கமிஷன் தொகையும், டிவிடெண்டை கீழே பிரித்துக் கொடுப்பதில் சில சலுகைகள் கிடைப்பதாலும் புதிய முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு புதிய முதலீடுகளை தங்களது டிவிடெண்ட் மற்றும் பண சுழற்சிக்கு பயன்படுத்தியிருக்கிறார் சுரேஷ்.
ஒரு கட்டத்தில், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் கதையாக, மதுரை கும்பலிடம் இழந்த 1.5 கோடியை, சேலத்தை சேர்ந்த இன்னொரு கும்பலிடம் கொடுத்து பணத்தை இரட்டிப்பாக்கி நிலைமையை சரிசெய்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறார், சுரேஷ். ஒன்று போட்டால் ரெண்டு, ரெண்டு போட்டால் நாலு என்பது போல, இதுவும் ரெண்டாம் நெம்பர் பிசினஸ்தான். பெரும்பாடு பட்டு 1.5 கோடி அளவுக்கு திரட்டி சேலம் கும்பலிடம் கொடுத்து மீண்டும் ஏமாறுகிறார், சுரேஷ். வசூலித்த தொகையை திருப்பித் தர முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கியிருக்கிறார் சுரேஷ்.
இந்த பின்னணியில், பணம் போட்டவர்கள் டிவிடெண்ட்டும் கிடைக்காத நிலையில் முதலீடு செய்த பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அப்போது, குடும்ப நண்பர் என்ற முறையில் சுரேஷுக்கு ஆதரவாக போலீசு ஸ்டேஷனிலும், பணம் போட்ட முதலீட்டாளர்களிடமும் சமரசம் பேசியிருக்கிறார், மனிதம் தினேஷ். அந்த தருணங்களில் மோகன்தாஸூம் தினேஷூக்கு ஆதரவாக சென்றிருக்கிறார்.
இந்த பின்புலத்தில்தான், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் வழக்கில் சிக்கி கைதாகிறார்கள் சுரேஷ் – சரண்யா தம்பதியினர். வழக்காகி சிறை சென்றதை காரணம் காட்டியும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் வழக்கு இருந்து வருவதை சொல்லியும் முதலீட்டாளர்களின் நெருக்கடியிலிருந்து சுரேஷ் – சரண்யா தம்பதியினர் தப்பி விடுகின்றனர்.
சுரேஷை நம்பி பலரிடமிருந்தும் பணத்தை வசூலித்து கோடி கணக்கில் முதலீடு செய்திருந்த பலரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த பட்டியலில் மனிதம் தினேஷும், மோகன்தாஸும் இடம்பெறுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், சுரேஷ் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார் என்று சுரேஷிடம் பணம் கேட்டு நெருக்கியவர்களிடம், தினேஷ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியும் வழக்கறிஞரும் நண்பருமான ரஞ்சித் உதவியுடன் சுரேஷுக்கு ஆதரவாக சமரசம் பேசியிருக்கிறார். பொதுவில் பண முதலீடு விசயங்களில் தினேஷும் ஆர்வம் உடையவர்தான் என்றும் சொல்கிறார்கள். சுரேஷ் இரண்டாம் நெம்பர் பிசினஸில் பணத்தை இழந்து நின்றபோதும், அந்த மோசடி கும்பலிடமிருந்து பணத்தை திரும்பப்பெறுவதற்கும் தினேஷ் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பிரதிநிதியிலிருந்து பைனான்சியர் ஆன கதை !
தொடக்கத்தில் மோகன்தாஸ் மருத்துவ பிரதிநிதியாகத்தான் பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில், குறைந்த வட்டிக்கு வாங்கி, அதைவிட கூடுதல் வட்டிக்கு தண்டல் முறையில் பணம் கொடுத்து வாங்கும் பிசினஸை நடத்தியிருக்கிறார். பின்னர், தீபாவளி சீட்டு, ஷேர் மார்க்கெட் முதலீடு என பல்வேறு வகைகளில் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், திருச்சி மாநகரின் பிரபலமான ஸ்வீட் நிறுவனங்கள் உள்ளிட்டு பலரிடமும் கோடிகளில் பணத்தை பெற்றிருக்கிறார். பலருக்கும் வட்டிக்கும் கொடுத்திருக்கிறார். வட்டிக்கு கொடுத்தவர்களிடமிருந்து பணம் திரும்ப பெறுவதில் சிக்கலையும் சந்தித்திருக்கிறார். இந்த பின்புலத்தில்தான் சுரேஷிடமும் சுமார் 20 இலட்சம் வரையில் நஷ்டப்பட்டுமிருக்கிறார். பெரும் கடனாளியாகியிருக்கிறார்.
நெருங்கிய நண்பன் மோகன்தாஸின் நெருக்கடியை உணர்ந்து நண்பனுக்கு நண்பன் உதவுவது என்ற அடிப்படையில், தினேஷ் தனது வீட்டை அடமானம் வைத்து கடனுதவி செய்கிறார். அதற்காக மாதந்தோறும் சுமார் 60,000 அளவுக்கான தவணையை, மோகன்தாஸ் முறையாக கட்டியும் வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2024 தீபாவளி சமயத்தில் பலரிடமும் வசூலித்த பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் மீண்டும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் மோகன்தாஸ். அவ்வாறு கொடுக்க முடியாமல் போனால், பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் வீட்டை முற்றுகையிட்டுவிடுவார்கள் போலீசு கேசாகிவிடும் என பயந்து மீண்டும் தினேஷின் உதவியை நாடுகிறார். அவரும் பல்வேறு வகையில் முயற்சி செய்து, வட்டிக்கு பணம் வாங்கி சுமார் 16 இலட்சம் வரையில் கொடுத்து இக்கட்டிலிருந்து நண்பனை மீட்டு விடுகிறார்.
கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதுதான் பிரச்சினை !
ஏற்கெனவே, வீட்டை அடமானம் வைத்துக் கொடுத்த கடனுக்கான மாத தவணையும் கட்ட முடியாமல், புதியதாக வாங்கிக் கொடுத்த கடனுக்கான வட்டியும் கட்ட முடியாமல் ரொம்பவே தடுமாறுகிறார் மோகன்தாஸ். மோகன்தாஸ் முறையாக தவணை கட்ட முடியாமல் போகும்போதும், வட்டிப்பணம் கொடுக்க முடியாமல் போகும்போதும் தினேஷ் அதனை தன் பணத்திலிருந்து முடிந்தவரை சமாளித்திருக்கிறார். தீபாவளிக்கு பிறகு, இந்த சிக்கல் அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையில், மனிதம் தினேஷ் இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தனது தொண்டு நிறுவனத்தை, சொந்தமாக நிலம் வாங்கி அதில் சொந்த கட்டிடம் கட்டிவிடுவதென முடிவெடுக்கிறார். எதிர்பார்த்த அளவுக்கு நன்கொடையாளர்கள் கிடைக்காமல் அவதியுறுகிறார். வேறு வழியின்றி, தனிப்பட்ட முறையில் வங்கி கடனுக்கு முயற்சி செய்கிறார். ஏற்கெனவே தன் பெயரில் கடன் வாங்கி மோகன்தாஸுக்கு கொடுத்திருப்பதால், அந்தக் கடனை முடித்தால்தான் டிரஸ்டுக்காக அடுத்த கடனை வாங்கியாக வேண்டுமென்ற நிலையில், வீட்டுக்கடனை மோகன்தாஸ் பெயருக்கு மாற்றிக் கொள்ளும்படியும் அல்லது மொத்தக் கடனையும் முடித்துவிடும்படியும் கோரிக்கை விடுக்கிறார்.
மேலும், தீபாவளி சமயத்தில் வட்டிக்கு வாங்கிக் கொடுத்த 16 இலட்சத்தையும் திருப்பிக் கேட்கிறார். இவையிரண்டும் மோகன்தாஸ் எல்லையை மீறிய விவகாரங்களாக அமைந்துவிடுகிறது. இருவருமே நண்பர்கள் என்பது எந்தளவு உண்மையோ, அந்த அளவுக்கு இருவரும் பணம் விஷயத்தில் ரொம்பவே கறாராக இருந்தார்கள் என்பதும் மற்றொரு உண்மை. அதன்படி, தினேஷ் கறாராகவே கேட்டிருக்கிறார்.
”மனிதம் டிரஸ்ட் என்பதுதான் என்னுடைய ஒரே ஆதாரம் என்றாகிவிட்டது. இதைவிட்டு போகவும் முடியாது. எனக்கு இது மானப் பிரச்சினையாகிவிடும். எப்படியாவது, கடனை திருப்பிக் கொடுத்துவிடு. இல்லையேல், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்பதாக தினேஷ் தன் பங்கிற்கு புலம்பியுமிருக்கிறார்.
அப்போதுதான் மோகன்தாஸ், சுரேஷிடம் ஏமாந்த பணம் குறித்து பேசியிருக்கிறார். ”நீ கொடுத்த பணத்தை இவ்வளவு கறாராக கேட்கிறாயே? நீ சொல்லித்தானே சுரேஷிடம் பணம் போட்டேன். பல பேரிடம் வாங்கி வேற கொடுத்திருக்கிறேன். அதனாலதானே இவ்வளவு நெருக்கடியை சந்திக்கிறேன். அதைபத்தி பேச மாட்றனு.” மோகன்தாஸ் சண்டையிட்டிருக்கிறார்.
பதிலுக்கு, ”என்னை வைத்து ஒரு இலட்சம்தானே போட்ட. மிச்ச 19 இலட்சமும் எனக்கு தெரியாமத்தானே சுரேஷ்கிட்ட கொடுத்த. அது வேற. இது வேற. சுரேஷ்கிட்ட நானும்தான் ஏமாந்திருக்கிறேன். சொந்த பந்தம்னு நானும்தான் வசூலிச்சி கொடுத்துட்டு பதில் சொல்ல முடியாம இருக்கேன். அதை இதோடு சேர்க்காதே.” என்று தினேஷும் பேசியிருக்கிறார்.
தினேஷுக்கு ஆதரவாக அவரது தந்தை ராமையாவும் மோகன்தாஸிடம் பேசியிருக்கிறார். ”உன் கடனுக்காக என் மகன் சாக வேண்டுமா?” என்றெல்லாம் கேட்டதாகவும் சொல்கிறார்கள். மேலும், தினேஷின் அண்ணன் புருஷோத்தமனும் மோகன்தாஸ் வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். அப்போது, ”கடன்காரர்கள் போல இவ்வளவு கறாராக அணுகுகிறீர்களே?” என்று கைவசம் இருந்த சுமார் 9 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கணவருக்கே தெரியாமல் எடுத்து கொடுத்திருக்கிறார் மோகன்தாஸ் மனைவி எஸ்தர். இதுவும் மோகன்தாஸ் கவனத்திற்கு போக மனம் உடைகிறார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத ஏக்கமும் அந்த தம்பதியினரை வாட்டியிருக்கிறது. “பேசாமல் லெட்டர் எழுதி வச்சிட்டு செத்துடலாம்னு சொல்றாடா”னு தினேஷிடம் அதையும் சொல்கிறார்.
வெளிப்பார்வைக்கு நேரடியாக தினேஷ் கொடுத்த அழுத்தம்தான், மோகன்தாஸ் – எஸ்தர் தம்பதியினரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்று சொன்னாலும்; அதன் பின்னணியில் சுரேஷும் அவர் இரண்டாம் நெம்பர் பிசினஸில் இழந்த சில கோடி ரூபாய்களும் முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றன என்றே கருத இடமிருக்கிறது.
இந்த மனஸ்தாபங்களுக்கு மத்தியிலும் இருவரும் ஒன்றாக சினிமாவுக்கு சென்றிருக்கிறார்கள். கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மோகன்தாஸ் சாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரையில் இருவரும் பேசியுமிருக்கிறார்கள்.
இதில் தொடர்புடைய, சுரேஷ், தினேஷ், மோகன்தாஸ் ஆகிய அனைவருமே நெருங்கிய நண்பர்கள்தான் என்பதுதான் சோகம். பண விவகாரமும் நண்பர் சென்டிமெண்டும்தான் தினேஷ் சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய இக்கட்டிற்கும் தள்ளியிருக்கிறது.
”மனிதர்கள் மத்தியில் தற்போதைய காலத்தில் மனித நேயம், இரக்க குணம் என்பது குறைந்து கொண்டு வருகிறது. சமூகம் மனிதனின் வாழ்க்கையை பணத்திற்கு பின்னால் இயந்திரம் போல் ஓட வைத்துவிட்டது.” என்பதாக, தனது அமைப்பிற்கு “மனிதம்” என்று பெயர் சூட்டுவதற்கான காரணமாக இணையப்பக்கத்தில் குறிப்பிடுகிறார், தினேஷ். அதுபோலவே, அவரையும் பணத்தின் பின்னே ஓட வைத்துவிட்டதுதான் சோகம் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.