காதல் திருமணம் செய்த ஜோடியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்கள்! திருமணத்திற்கு சென்ற ஊர்க்காரர்களை இடுப்பில் துண்டை கட்டியவாறு காலில் விழவைத்த கொடுமை..! வீடியோ
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்து அவ்விருவரின் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அத் திருமணத்தில் கலந்து கொண்ட அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இடுப்பில் துண்டை கட்டியவாறு அரை நிர்வாணமாக காலில் விழவைத்துள்ளனர் ஊர்ப் பஞ்சாயத்தார்கள்.
இக் கொடூர சம்பவம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதுகுறித்து உரிய நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
ஒரத்தநாடு வட்டம் பூவத்தூர் ஊராட்சி பொட்டலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன் (28). எம்எஸ்சி பட்டதாரியான சுமன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கழுகரை கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் பிப்ரவரி 16-ம் தேதி மடத்துக்குளம் சவுண்டம்மன்கோவிலில் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தங்களுடைய சமூக கட்டுப்பாட்டை மீறி காதல் செய்ததால் அத்தம்பதியினரையும் அவர்களது குடும்பத்தாரையும் கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வீடியோ லிங்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுமன் கூறியதாவது:
நானும் அபிநயாவும் 3 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிப்ரவரி 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், எங்கள் ஊர்த் தலைவர் கணேசன் மற்றும் பஞ்சாயத்தார் தண்டோரா போட்டு கிராம மக்களை வரவழைத்து ஊர்க் கூட்டம் போட்டு அதில் காதல் திருமண் செய்வது எங்களது சமூகத்திற்கு கௌரவ குறைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஊரில் காதல் திருமணமே இருக்கக் கூடாது என்றும், சமுதாய கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்துள்ள எங்களிருவரையும் எங்களது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்தனர்.
அதோடு, எங்களது திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவிட்டதாகவும், ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அனைவரும் அபராத தொகை கட்டி, ஊர்த் தலைவரின் காலில் விழ வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.
இதையடுத்து எங்களது திருமணத்தில் பங்கேற்றவர்கள் வேறு வழியின்றி இடுப்பில் துண்டை கட்டியவாறு அரை நிர்வாணமாக ஊர்த் தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர் என்கிறார் சுமன்.
அதுமட்டுமின்றி, எங்கள் இருவரது குடும்பத்தினரையும், எங்களது திருமணத்தில் கலந்து கொண்ட ஊர்க்காரர்களையும் ஒதுக்கி வைப்பதாக ஊர் தலைவர் கணேசன் ‘டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்’ என்ற வாட்ஸ்ஆப் குரூப்-பில் பதிவிட்டுள்ளார் எனவும் சுமன் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வீடியோ லிங்
சமுதாய கட்டுப்பாடு என்ற போர்வையில் சட்டத்துக்குப் புறம்பாக கட்டப்பஞ்சாயத்து செய்து தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கணேசன் மற்றும் பஞ்சாயத்தார்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் சுமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை ஊர் தலைவர் கணேசன் மறுத்துள்ளார்.
இதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களது நடத்தை மற்றும் பேச்சு பிடிக்காததால் நாங்கள்தான் அவர்களைவிட்டு விலகிவிட்டோம்,” என்றார் கணேசன்.
மேலும், காலில் விழும்படி யாரையம் கட்டாயப்படுத்தவில்லை. யாரையும் அபராதம் கட்ட சொல்லவில்லை. வயதில் மூத்தவன் என்பதால் என்னிடம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள். அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன் என கணேசன் கூறியுள்ளார்.
ஆனால், கணேசனின் கூற்றுக்கு மாறாக, சுமன்-அபிநயா திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்களது இடுப்பில் துண்டைக் கட்டியவாறு அரை நிர்வாணமாக ஊர்த்தலைவரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.