துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி தொடரும் ஆளுநரின் ஏட்டிக்கு போட்டி அறிவிப்பு !

0

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி தொடரும் ஆளுநரின் அடாவடித்தனம்

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறைக்கு மட்டுமே உள்ளது. இந்த அதிகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களையும் தேடுதல் குழுவில் இணைத்து ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்படியோர் அறிவிப்பை வெளியிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதைக் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மாநில நிதியோடு நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநர் என்பவர் வேந்தர் என்பது அலுவல் வழியிலான பதவிதானே தவிர, அது அதிகாரம் மிக்க பதவி அல்ல என்பதுதான் இந்திய விடுதலை தொடங்கிய வரலாறு.

இந்த வரலாற்றைத் தேவையில்லாமல் மாற்றியமைக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். இதன் மூலம் பல்கலைக்கழகங்களின் அன்றாட பணிகள் தேக்கமடையும். கல்வி சூழல் பாழ்பட்டுப்போகும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாகத் தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும்.

இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆளுநர் அவர்கள் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழகச் சட்ட விதிகளுக்கு எதிராகத் தேடுதல் குழுவைத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் குழு முழுக்கமுழுக்கப் பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. மரபுகளுக்கு முரணானது” என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் முனைவர் முரளி
பேராசிரியர் முனைவர் முரளி

மக்கள் கல்விக்_கூட்டியக்கம் சார்பில் மதுரையைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் முரளி விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு ஆளுநர் சென்னைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மான்யக் குழுவின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

இத்தனை நாள் வரை இதே ஆளுநர் இதற்கு முன்னர்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும்போது இந்த விதியைப்  பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தத் தேர்வுக் குழுவில் ஆளுநர் சார்பான பிரதிநிதி வேறு ஏற்கனவே இருக்கின்றார். கூடுதலாகப் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதியைச் சேர்ப்பதின் மூலம் இருவர் ஒன்றிய அரசின் சார்பாக இருப்பார்கள். அதைத் தவிர ஆளுநர்தான் இறுதி முடிவு எடுப்பார்.

மொத்தத்தில் நடுவண் அரசின் முடிவே இங்குத் தீர்மானிக்கப்படும். தமிழ் நாடு அரசு இனி வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களில் கொள்கை முடிவுகளில் தலையீடு செய்வது இயலாமல் போகும் நிலை உருவாகிவிட்டது. முன்பு மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வழக்கு ஒன்றில் நீதி மன்றம் தமிழ் நாடு அரசு சட்டச் சபையில் வைத்து ஏற்பு தெரிவிக்காத பல்கலைக் கழக மான்யக் குழு விதிகள் இம்மாநிலத்தில் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது நினைவு கூறத்தக்கது. ஆனால் அதற்கு எதிராக மாநில உரிமையை இந்த விவகாரத்தில் முழுமையாகப் பறிக்கும் தீர்ப்புகளும் இருக்கக்கூடும்.

2022இல் தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆளுநர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தலையிட முடியாது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுநர்தான். தமிழக மக்களின் கல்வி உரிமைகளைத் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள் கொண்ட சட்டச் சபைதான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வியல் பல்கலைகழகம்
கல்வியல் பல்கலைகழகம்

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரை, மனோன்மணியம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டசபையின் அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்குச் சமமானது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

தேடுதல் குழு தொடர்பான உத்தரவுகளை வெளியிட மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதிகளைத் தேடுதல் குழுவில் நியமிப்பதை மாநில அரசும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களும் ஏற்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ள கருத்துகளில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுக்களை ஆளுநர் தன்னிச்சையாக அறிவித்தது, அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் இன்னொரு முட்டுக்கட்டை உருவாகியிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதியை இணைத்திருப்பது என்பதை ஆளுநர் தன்னிச்சையாகச் செய்யமுடியாது.

மாநில அரசின் உயர்கல்வித்துறைதான் இதைச் செய்யவேண்டும். மேலும் தேடுதல் குழுவை அரசிதழ் மூலம் அறிவிக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்களுக்கான விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆளுநர் மதிக்கவேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தனது விருப்பப்படி செயல்படமுடியாது. அப்படிச் செயல்படச் சிறப்பு அதிகாரமே, உரிமையோ கிடையாது.

ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடுகள் துணைவேந்தர் நியமனத்தை மேலும் காலதாமதம் செய்வதற்கே உதவும். ஆளுநர் மாநில உயர்கல்வியின் நலத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு இடையில் கவர்னரின் ஏட்டிக்கு போட்டியான அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாமா என்று சட்டவல்லநர்களுடன்

– ஆதவன்

Leave A Reply

Your email address will not be published.