மக்கள் விரோத நபருக்கு வெற்றிமாறன் கைதட்டுவது நிச்சயமாக விமர்சிக்கப்படத்தான் வேண்டும் !

0

வெற்றிமாறனை விமர்சிக்க் கூடாதா?

வெற்றிமாறனை விமர்சிப்பதுதான் அவரை முறைப்படுத்தும் என நினைக்கிறேன்.

ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று வெற்றிமாறன் பேசியதை வைத்து சங்கிகள் அவருக்கு மிரட்டல் விடுத்தபோது நாம் எல்லோரும் வெற்றிமாறனுக்கு ஆதரவாக நின்றோம். அது ஒரு சமூகப் பொறுப்புள்ள கலைஞனுக்கு நாம் கொடுத்த Solidarity. அதேபோல் வெற்றிமாறன் அறிந்தோ அல்லது புரியாமலோ அந்த சமூகப் பொறுப்பிலிருந்து சமயங்களில் தவறும்போது அதனை தவறென்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமும் இருக்கிறது.

சவுக்கு சங்கரின் மீடியா துவக்க விழாவில் வெற்றிமாறன் பங்கேற்று அதனை பிரபலப்படுத்துவதை தவறு என்று சொல்வது கட்சி அரசியலை மையப்படுத்தியது அல்ல. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக சவுக்கு இருக்கிறான் என்பதாலோ, இல்லை திமுகவுக்கு எதிராக பேசுகிறான் என்பதாலோ வெற்றிமாறனை நாம் விமர்சிக்கவில்லை. சவுக்கு சங்கர் ஒரு அரசியல் புரோக்கர் என்பது ஊரறிந்த விடயம். கிடைக்கும் அமெளண்ட்டுக்கு எற்றார்போல் நிமிடத்திற்கு ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பேசுவான் என்பதும், எந்த நேரம் வேண்டுமானாலும் ஆதாயத்திற்காக சங்கி அவதாரம் எடுப்பான் என்பதும் அவனை கவனிக்கும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

- Advertisement -

ஆனால் இங்கு வெற்றிமாறன் தனது அரசியல் நிலைப்பாடு என்னவென்று சினிமாவிலும், பொதுவெளியிலும் கறாராகப் பேசுகிறாரோ அந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் விரோதமான நபராக சவுக்கு சங்கர் இருக்கிறான். அடிப்படையில் கலை கலைக்கானதல்ல, மக்களுக்கானது என்று வெற்றிமாறன் பேசி வருகிறார். அப்படியென்றால் கலைஞனும் மக்களுக்கானவன் தானே. ஆனால் ஒரு மக்கள் விரோத நபருடன் அந்த கலைஞன் சேரும்போது விமர்சனங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

சவுக்கு சங்கர் தனது Biopic-யை வெற்றிமாறன் படமாக எடுக்கப்போவதாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சமயத்தில் நாம் வெற்றிமாறனின் தவறை விமர்சிக்காவிட்டால், ஒரு மக்கள் விரோத நபரை சமூகத்தின் நாயக பிம்பமாக திரையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பார்க்கும் கொடுமை இந்த சமூகத்திற்கு ஏற்படலாம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனல் 16 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி சவுக்கு பேசும்போது, போலீஸ் வானத்தைப் பார்த்தும், சத்தம் வரவைக்க ட்ரம்களைப் பார்த்தும் தான் சுட்டார்கள். தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டு சிலர் இறந்து விட்டார்கள் என்று சினிமாவில் கூட வைக்க முடியாத ஒரு Narration-ஐ வைத்து அப்பட்டமாக ஒரு அரச பயங்கரவாதத்திற்கு வெள்ளையடிக்கிறான். அதிலும் கொல்லப்பட்ட மக்களைப் பற்றி பேசும்போது, “ஒருத்தன்” அடுத்த நாள் செத்துப் போனா’ன்’னு நினைக்கிறேன். சிலர் முன்னாடி நாளே செத்துட்டா’னு’ங்க என்று கொல்லப்பட்ட மக்களை நோக்கி அவன், இவன் என்று கிரிமினல்களைப் போல ஒரு மோசமான திமிரான வார்த்தைப் பிரயோகத்தைக் கட்டமைக்கிறான். அரச வன்முறையை எதிர்த்து படமெடுக்கும் வெற்றிமாறன் அரச வன்முறையை நியாயப்படுத்துவதற்காகவே ஒரு மக்கள் விரோத புரோக்கர் தொடங்கியுள்ள ஒரு சேனலின் துவக்க விழாவில் எதற்காக பங்கெடுக்க வேண்டும்? அது தவறு என்பதை நாம் சொல்லத்தான் வேண்டும்.

Ban Neet என்ற பதாகையை வெற்றிமாறன் வைத்திருக்கும் புகைப்படத்தைப் போட்டு நாம் எல்லோரும் பெருமைப்பட்டோம். நீட் தேர்வால் கொல்லப்பட்ட மாணவர்களைப் பற்றி பேசும்போது “செத்தா சாவட்டும்” என்று பேசுபவனை, அதைப் பேசுவதற்காகவே சேனல் தொடங்குபவனை வெற்றிமாறன் ஆதரிப்பது மிகப்பெரிய முரண்பாடில்லையா? சவுக்கு சங்கர் ஒரு Social Media influencerஆக இருப்பதால் அவரோடு கைகோர்க்கிறேன் என சொல்வதற்கு வெற்றிமாறன் ஒன்னும் அரசியல்வாதி இல்லைதானே!

4 bismi svs

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சாதி Perspective-ஐ உருவாக்கி சாதி மோதலாக மாற்ற முயன்ற நபரை அசுரன் இயக்குநர் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு மைனர் சிறுவனின் பெயரையும், அந்த சிறுவனின் சாதியையும் சொல்லி அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் காதல் என்ற Narration-ஐ வைத்து மைனர் சிறுவனை மையப்படுத்தி ஒரு சமூகப் பதட்டத்தை இவன் உருவாக்கியதை நாம் மறந்துவிட முடியாது. அதுமட்டுமில்லாமல் பள்ளிக்கு எதிராக போராடிய மக்கள், முற்போக்கு சக்திகள் அனைவரும் பள்ளி ஓனரிடம் இருந்து பணம் பிடுங்கத்தான் போராடினார்கள் என்ற மோசமான வெர்சனையும் முன்வைத்தான். இப்படிப்பட்ட நபருக்கு புரோமசனாக வெற்றிமாறன் எப்படி செயல்பட முடியும்?

அதேபோல் வெற்றிமாறன் தனக்கு அற்புதம்மாவின் வாழ்க்கையை படமாக்க விருப்பம் இருப்பதாக பல இடங்களில் சொல்லியிருக்கிறார். பாரட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் பேரறிவாளனை தமிழக முதல்வர் கட்டிப்பிடித்து வரவேற்றதை உலக மகா குற்றமாக சித்தரித்தான் சவுக்கு சங்கர். இது என்ன சாதாரண கேசா, இல்ல பேரறிவாளன் என்ன நிரபராதின்னு ரிலீஸ் பண்ணாங்களா, Intelligence Agencies இதை ஏத்துக்கவே மாட்டாங்க, ஸ்டாலின் செஞ்சது மாபெரும் குற்றம் என்றெல்லாம் உளவுத்துறைக்கு ஆதரவாக நின்று பூச்சாண்டி காட்டினான். தண்டனைக் காலம் முடிந்த பின்னரும், நீதிமன்றமே விடுதலைக்கு ஒப்புதல் கொடுத்த பின்னரும், சாகும் வரை ஒரு மனிதனை குற்றவாளியாகவே பார்க்க வேண்டும் என்று பேசுவது என்ன மாதிரியான அரசியல்? உளவுத்துறையின் குரலாகவும், போலிசின் குரலாகவும் வீடியோக்களில் ஒலிக்கும் ஒருவனை வெற்றிமாறன் எப்படி Whistleblowerஆக பார்க்க முடியும்.

ராம்குமார் சிறையில் கரண்ட் கம்பியைக் கடித்துதான் தற்கொலை செய்து கொண்டான். நான் உள்ள இருந்த அதிகாரிகள்கிட்டலாம் பேசிட்டேன்னு போலிஸ் வெர்சனுக்கு சர்டிபிகேட் கொடுக்குறான். விசாரணை திரைப்படமெடுத்த இயக்குநருக்கு சிறையில் ஒரு கைதி எப்படி கரண்ட் கம்பியை கடிக்க முடியும் என்று தெரியாதா?

ஈழப் போராட்டத்தை திரைப்படமாக எடுப்பதை தனது முக்கிய விருப்பமாக வெற்றிமாறன் பேசினார். ஆனால் யார் இந்த சவுக்கு சங்கர்? புலிகளை ஆயுத வெறியர்கள்னு பேசினானா இல்லையா? புலிகள் செய்த தவறுகள்னு பல பொய்களைக் கோர்த்து அவன் போட்ட வீடியோ, லட்சக்கணக்கான மக்களுக்கு ஈழப்போராட்டம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது. ஈழப் போராட்டத்தின் நியாயத்தை படமாக எடுப்பதை தனது நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடும் வெற்றிமாறன், அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக தனி சேனலையே வைத்திருக்கும் சவுக்கு சங்கரின் புதிய சேனலுக்கு எப்படி வாழ்த்து சொல்ல முடியும்?

மேற்சொன்ன பல விசயங்களையும், இதைவிட இன்னும் மோசமான பல விடயங்களையும் தான் சவுக்கு மீடியா வருங்காலங்களில் பேச இருக்கிறது. இப்படிப்பட்ட சேனலின் துவக்க விழாவில் நின்று கைதட்டி துவக்கி வைக்கும் வெற்றிமாறனின் நிலைப்பாட்டை நாம் விமர்சிப்பதே சரியானது.

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர். தமிழ்த்தேசிய அரசியலைப் பேசுவதுடன் சமூகப் பொறுப்புள்ள பல விவகாரங்களையும் தொடர்ந்து பேசி வருகிறார். இவையெல்லாம் பாராட்டத்தக்கதுதான். இப்படிப்பட்ட ஒருவரை திட்டி எதிர் முகாமுக்கு தள்ளி விட்டுவிடக் கூடாது என நாம் நினைப்பதும் சரிதான். வெற்றிமாறன் இல்லையென்றால் அந்த இடத்தை ஷங்கர் மாதிரியான வலதுசாரி கும்பல்தான் நிரப்பும்.

ஆனால் அதற்காக சமூக நீதி பேசும் ஒரு கலைஞன் தனது அரசியல் நிலைப்பாடுகளில் சமயங்களில் தடுமாறும்போது அந்த கலைஞன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்தான் அந்த கலைஞனை நெறிப்படுத்த முடியும். சவுக்கு போன்ற மக்கள் விரோத நபருக்கு வெற்றிமாறன் கைதட்டுவது நிச்சயமாக விமர்சிக்கப்படத்தான் வேண்டும். இல்லையென்றால் ஒரு மக்கள் விரோதியை மக்கள் நாயகனாக திரையில் பார்க்கும் கொடுமை இங்கு நடக்கும்.

– விவேகானந்தன் ராமதாஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.