நடிகை விஜயலெட்சுமி புகார் காவல்துறை விசாரணைக்குச் சீமான் ஆஜராகவில்லை அடுத்து என்ன? பரபரப்பு தகவல்கள் -ஆதவன்
நடிகை விஜயலெட்சுமி புகார்
காவல்துறை விசாரணைக்குச் சீமான் ஆஜராகவில்லை
அடுத்து என்ன? பரபரப்பு தகவல்கள்
-ஆதவன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிக் குடும்பம் நடத்திவிட்டு. என்னைக் கைவிட்டுவிட்டார் என்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலெட்சுமி புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் சீமானின் வற்புறுத்துதல் 7 முறை கரு கலைப்பு செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் நடிகை விஜயலெட்சுமிக்கு திருவள்ளூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கடந்த 7ஆம் ஆனாள் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விஜயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சீமான் 09.09.2023 காலை 10.30 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டது. சம்மனைப் பெற்றுக்கொண்ட சீமான் கடந்த 9ஆம் நாள் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. 12ஆம் நாள் ஆஜராகி விளக்கம் தருவேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
இன்று காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் வழக்கறிஞர்கள் 7 பேர் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்று சீமான் கொடுத்த இரு கடிதங்களைக் காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்தனர்.
பின்னர்ச் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் ஒருவர் பேசும்போது,“சில பல காரணங்களால் சீமான் இன்று காவல்நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. அவரின் சார்பாக வழக்கறிஞர்கள் நாங்கள் காவல்நிலையம் சென்று ஆய்வாளரைச் சந்தித்து, சீமான் கொடுத்த இரு கடிதங்களைக் கொடுத்தோம். ஒரு கடிதத்தில் சீமான் காவல்துறை ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதன் விவரம்: 2011இல் இதே நடிகை விஜயலெட்சுமி என்மீது புகார் கொடுத்தார். சில நாள்கள் கழித்து, நானும் சீமானும் சமரசம் ஆகிவிட்டோம். அவர் மீது கொடுத்த வழக்கை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். எந்த மேல்நடவடிக்கையும் வேண்டாம் என்று கைப்பட எழுதிக் கொடுத்ததன் அடிப்படையில் பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
15 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜயலெட்சுமி என் மீது அதே புகாரை மீண்டும் கொடுத்துள்ளார்.

என்னை விசாரணைக்கு அழைத்துள்ளீர்கள். எனக்குத் தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். பழைய வழக்கின் நீட்சியாகத் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளதா? முன்பு போடப்பட்ட வழக்கு பிரிவுகளை விடத் தற்போது கூடுதலாகப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளதா? 15 ஆண்டுகள் முன்பு கொடுக்கப்பட்ட மனு அடிப்படையின் தொடர்ச்சியாகத் தற்போது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்காக நீதிமன்ற உத்தரவுகள் காவல்துறையால் பெறப்பட்டுள்ளாதா? என்பதை அறிய விரும்புகிறேன். தங்கள் அளிக்கும் விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டால் உங்கள் முன்பு விசாரணைக்கு ஆஜராவேன். விசாரணைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடிதங்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் அவர்கள், “கடிதங்களைப் படித்துப்பார்க்கிறோம். அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கையின்படி காவல்நிலையத்திற்கு ஆஜராக வேண்டிய நாளினைத் தெரிவிப்போம்” என்று கூறினார் என வழக்கறிஞர் தெரிவித்தார்.
சீமான் கட்சி நடவடிக்கைக்காகத் தொடர்பாக வெளியே எங்கும் செல்லவில்லை என்றும் அவர் சென்னை நீலங்கரையில் உள்ள பாலவாக்கத்தில் அவரின் வீட்டில்தான் இருக்கிறார் என்றும் காலை நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்குச் செல்லும்போது நியூஸ் 18 செய்தியாளர் வழிமறித்து, ஆஜராகக் காவல் நிலையம் செல்லும்போது பத்திரிக்கையாளர் சந்திப்பு வீட்டில் இருக்குமா? என்ற கேட்டிருக்கிறார். இல்லை. காவல்நிலையத்தில் பத்திரிக்கையாளரைச் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
சீமான் இருமுறை காவல்துறையின் சம்மனை நிராகரித்ததைத் தொடர்ந்து, காவல்துறை நீதிமன்றம் சென்று கைது செய்வதற்கான அனுமதி கோருவார்கள்.
காரணம் சீமான் மீது பெண்ணை ஏமாற்றுதல், பாலியல் தொடர்பு, வன்கொடுமை செய்தல் போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுச் சீமான் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் பார்வையாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
என்ன நடக்கும் என்பதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.
