மக்களுக்கு சேவையாற்ற எதுக்கு துப்பாக்கி ? கறார் காட்டிய மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி !
'எல்பின் இ-காம்' மோசடி புகாரில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பது மட்டுமல்ல; அந்த நிறுவனத்தின் வழக்கறிஞரும் இவரேதான்.
மக்களுக்கு சேவையாற்ற எதுக்கு துப்பாக்கி ? கறார் காட்டிய மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி !
“தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக எங்கள் கட்சி உள்ளது. நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள் சமூகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று தரும் பணியை செய்து வருவதால் என் மீது பலர் விரோதத்தில் உள்ளனர்.
தற்போது தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எனக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கையோடு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியின் தலைவரும் திருச்சியைச் சேர்ந்தவருமான பொன்.முருகேசன்.
“மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு எதற்கு? அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சேவையாற்றத்தான் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை. தேசிய கட்சிக்கு தலைவராக இருக்கும் முருகேசனுக்கு காவல்துறை பாதுகாப்பு எதற்கு? அப்படி பாதுகாப்பு தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாமே” என்று கேள்வி எழுப்பியதோடு, மனுவையையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி.
”கறம்பக்குடியில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பட்டியலினத்தவரை கொலை செய்த வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று” திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையாவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக பேட்டியளித்தவர் இந்த பொன்.முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் கூட்டணியில் இருப்பதாக குறிப்பிடும் பொன்.முருகேசன், கடந்த சட்டமன்றத் தேர்தலில், துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிடம் சீட்டு கேட்டவர். சீட் ஒதுக்காத பட்சத்தில் செருப்பு சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்காக செருப்பாக உழைப்போம் என்று சபதமிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமாக, அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சு.ராஜா என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் இ-காம் என்ற நிறுவனத்தை தொடங்கி, பத்தே மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று பலரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித்தரவில்லை என்ற புகாரில் சிக்கியவர்.
போட்ட பணத்தை திருப்பிக்கேட்டதற்காக அடியாட்களை வைத்து அடித்து துரத்தினார்கள் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில், ‘எல்பின் இ-காம்’ நிறுவன உரிமையாளர் சு.ராஜா உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் வழக்கறிஞரும் இவரேதான். எல்பின் நிறுவனத்தின் பண மோசடி தொடர்பாக திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆதிரன்.