திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் – கோ.கலியமூர்த்தி !

- ஆதவன்

0

திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் – கோ.கலியமூர்த்தி

“பாலையாகத் திரிந்து விட்ட மருதத்தின் பிள்ளை நான். பசிபடர்ந்த உதயமும் நம்பிக்கைகள் வறண்ட நடுப்பகலும் சேர்ந்து வனைந்த ஓட்டைப் பானை இந்த வாழ்வு. பாட்டில்கள் பருகிவிட்ட எம் நதிகளை, அழுதபடியே லாரிகளில் பயணிக்கும் அவற்றின் மணலுடலை, ஆழ்துளைக் குழாய்கள் வன்புணரும் நிலத்தின் வலியைத் தீகொண்டு எழுதும் என் பேனா. துயர்மிகு வரிகளின் வழியே மௌனத்தின் கனத்த ஓடுகளை உடைக்கத் துடிக்கிறது. காதலின் நிலமும் நிலத்தின்மீதான காதலும் பூத்துச்சொரியும் தீக்கொன்றை மலர்களே என் சொற்கள்…” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களைத் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரின் இல்லத்தின் ‘அங்குசம் செய்தி’ இதழ் இலக்கியப் பக்கத்திற்காகச் சந்தித்தோம். நம்மோடு அவர் உரையாடினார்……

துப்பாக்கித் தொழிற்சாலை
துப்பாக்கித் தொழிற்சாலை

“சோழ வளநாட்டின் ஆரூர் மாவட்டம் பண்டிதச் சோழநல்லூரைப் பூர்வீமாகக் கொண்டவன். பள்ளிப் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்து, 1990இல் துப்பாக்கித் தொழிற்சாலை என்று அறியப்படும் படைக்கலத் தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தேன். மாணவப் பருவத்தில் நான் படித்த புத்தகங்கள் என்னைப் படிப்பாளியாக்கி, பின்னர்க் கவிஞான மாற்றியது. 11 வயது பள்ளிப்பருவத்திலிருந்தே பேச்சாளன் நான். திராவிட இயக்கத் தாக்கம் மேலோங்கியிருந்த தஞ்சை மாவட்டத்தில் பேச்சுக்கலை இயல்பாகவே வரும். கவர்ச்சி என்பதோடு நுட்பம் ஆழம் போன்ற பரிமாணங்களை இணைத்துக்கொண்டு அடுத்தகட்டப் பரிணாமம் நோக்கி நகர்ந்த பாணி. மேலோட்டமான கவர்ச்சி மேடைப்பேச்சு அல்ல எனது ஒருமணிநேர உரையில் 100 புத்தகங்களின் பிழிவை வழங்கும் பொழிவு.

- Advertisement -

- Advertisement -

கோ. கலியமூர்த்தி
கோ. கலியமூர்த்தி

மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம் பின்நவீனத்துவம் கவிதையியல் இலக்கியம் என நீளும் பேச்சு. அறிந்தோர் அறிவர். தொழில்முறைப் பேச்சாளர்கள், நிலையக் கலைஞர்கள் பிடியிலிருந்து அரசு மேடைகள் தொடங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு மேடைகள் வரை சிக்கிக்கிடக்கும் அவலம் சீரழிந்த காலத்தின் அடையாளம். யாரும் அங்கீகரிக்கவில்லை, கவனிக்கவில்லை என்றெல்லாம் கவலைப்படுகிற மனிதன் இல்லை நான். தீவிர வாசகன் என்கிற திமிரோடு, அவ்வப்போது எழுதுபவன்.

கவிஞர் - கோ.கலியமூர்த்தி
கவிஞர் – கோ.கலியமூர்த்தி

எனது ஆதர்சம் யுவான் ரூல்ஃபோ. மார்க்யூஸின் நோபல் ஏற்புரையில், அவருக்கும், பிற, பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் என்று அவர் குறிப்பிட்டது ரூல்ஃபோவை. ‘எரியும் சமவெளி ‘என்றொரு சிறுகதைத்தொகுப்பு, பெட்ரோ பரோமா என்று சுமார் 100 பக்களவிலான ஒரேஒரு நாவல், இவ்வளவுதான் மொத்தம் அவர் எழுதியது. பதிப்பாளர்கள் மேலும் எழுதும்படி கேட்டுக்கொண்டபோது, எழுதவேண்டியதை எழுதிமுடித்துவிட்டதாகக் கம்பீரமாகச் சொன்னவர் அவர். இதுபோன்ற மனிதர்களை நேசிக்கும் ஒருவன், அங்கீகாரம், புகழ், அதிகாரத்தின் ஆசீர்வாதம், பட்டியல்களில் இடம்பிடிக்கும் இசை நாற்காலிப் போட்டிகள் எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏங்குவதில்லை.

4 bismi svs

படித்த தத்துவம், கோட்பாடு, பயின்ற நடைமுறை, வாழ்க்கை கற்றுத்தந்த பாடங்கள், வரலாற்றுணர்வு, மொழிப்பற்று, இனப்பற்று, அனைத்துவகையான ஒடுக்குதல்களுக்கும் எதிரான ஆவேசம், விடுதலை அரசியல் இவற்றைப் பகிர்ந்து கொள்ளும் வடிவமே படைப்பு /கவிதை /புனைவு எனக்கு. அசட்டுக் குழந்தைத்தனம் இல்லை என்னிடம். கம்பீரம் நான் தேர்ந்துகொண்ட வாழ்க்கைமுறை. பாரதி, பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மட்டுமல்ல, நீட்ஷே, ஃபோத்ரியா, தெல்யூஸ்-கத்தாரி, லியோடார்ட், கார்ல் மார்க்ஸ், பிராய்டு, யுங், கிராம்ஸி, லக்கான் என நீளும் ஆளுமைகளிடம் கற்றவன் நான். சங்கச் செழுமையும், பின்நவீனப் பிரக்ஞையின் குலைந்த மனமும் கலந்த சேர்மானம் நான். அன்பு, அறம், பெருங்கருணை தேடி நீளும் நெடிய பயணம்” என்றார்.

சௌமா இலக்கிய விருது
சௌமா இலக்கிய விருது

கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்து அந்தப் பொறுப்புக்குச் சிறப்பு சேர்த்தவர். தமிழகம் முழுவதும் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கியவர். கடந்த 2023 ஆகஸ்ட்டு திங்களில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் சௌமா இலக்கிய அமைப்பு, கவிஞர் எழுதிய “நாம் இன்னும் சந்திக்கவேயில்லை” என்னும் கவிதை நூலுக்காக இலக்கிய விருதை அறிவித்தது. இவ் விருது தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் கவிஞர் கோ.கலியமூர்த்திக்கு வழங்கி சிறப்பித்தார்.

தொழிற்சாலை பணியிலிருந்து ஓய்வு பெற இன்றும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த செப்டம்பர் 17ஆம் நாள் பெரியார் பிறந்தநாளில் விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து கலை, இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டும் பிணைத்துக்கொண்டும் செயல்பட்டு வருகிறார்.

கவிஞர் அனல் குடித்த மலர், தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி, மஞ்சள் தட்டான்கள் அழிந்துவிட்டன, அரூபா, நாம் இன்னும் சந்திக்கவேயில்லை, சொற்கள் கூடுதிரும்பும் அந்தி ஆகிய கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

கோ. கலியமூர்த்தி
கோ. கலியமூர்த்தி

தீபாவ(லி)ளி…
***
மருதாணி அரைக்கும்போதே
விரல்சிவந்த அக்காக்கள்
புருஷன்மேல் கொள்ளைப்பிரியம்
கொள்வார்கள் என்று
வெற்றிலைக்காவிச் சிரிப்போடு
பாட்டிகள் சொல்லும் கதைகளின்
வெட்கத்தோடு இருள்கிறது
தீபாவளிக்கு முதல்நாள் இரவு
காற்றும் இடியும்
கனமழையும் தாக்கும்
கார்காலத்தில் எவன் பண்டிகையை வைத்தது
நனைந்த பட்டாசை
அகலாது அணுகாது தீக்காய்வார்போல
அடுப்போரம் சூடேற்றும் தம்பிகளின் முனகல்
கடைசிநேர விற்பனையில்
விலைமலிவாய்க் கிடைக்குமென்று
மழையோடு போன மனுசன் இன்னும் திரும்பல
உறக்கமற்ற விழிகளோடு முறுக்குசுடும் அம்மாக்கள்
இடிந்த சுவர் இருந்த இடம்
சாக்குக்கட்டி மறைத்து
ஊளையிடும் குளிர்க்காற்றைத் தடுக்கும் குடிசைகளில்
இட்டிலியும் தோசையும் சுழியனும் என்று
உடன்பலகாரம்தான் தீபாவளிக்கும்
காரைவீட்டு வாசல்களில் கம்பிமத்தாப்புகள் சிரிக்க
ஓலைவெடியோடு வேடிக்கை பார்க்கிற
ஊர்ச்சிறுசுகளின் முகமெல்லாம் ஒளிச்சிறகு
ஒலிஒளிகள் ஓய்ந்து சூரியன்
பதுங்கிப்பதுங்கி மெல்ல வெளிவர
வெடிக்காத பட்டாசுகள் பொறுக்கிப்
பிரித்து ஒற்றைத்தாள் விரிப்பில்
மொத்தமருந்து பரப்பி
கடைசித் தீப்பெட்டி மத்தாப்பால்
பற்றவைக்கையில்
முடிவுக்கு வருகிறது மொத்த மகிழ்ச்சியும்
புலால் மணக்கும் வீதிகளில்
சாராயம் ஓட
களைத்த பின்மதியம்
உறங்கவைக்கும் அம்மாக்களின்
விட்டேற்றியான விழிகளில்
இன்னொரு கார்காலம் உருக்கொள்ளும்போது
வளர்ந்துவிடுகிறார்கள் பிள்ளைகள்

-கவிஞர் கோ.கலியமூர்த்தி

எங்கள் WhatsApp  சேனலில் இணைந்திடுங்கள்.. 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.