நீட் தேர்வு அரசியல் சடுகுடு..

0

எதிர்பார்த்தபடியே தமிழக ஆளுநர், ‘நீட்’ என்றழைக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவு தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார்.

இதையடுத்து நீட் மசோதா விவகாரம் குறித்து தமிழக அரசு அனைத்து கட்சிகள் பங்கேற்கும் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி, அனைத்து கட்சிக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, (பா.ஜ.க., அதிமுக இக்கூட்டத்தை புறக்கணித்தது) இந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2 dhanalakshmi joseph

இனி அடுத்து என்ன..?

நீட் விலக்கு குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் அனுப்பிய சட்ட மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்ப ஆளுநருக்கு வாய்ப்பு குறைவு. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதை தவிர ஆளுநருக்கு வேறு சாத்தியக் கூறுகள் இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

- Advertisement -

- Advertisement -

தமிழகத்தில் மருத்துவ கல்வி கட்டமைப்பு :

தமிழ்நாட்டில் தற்போது 41 அரசு மருத்துவக் கல்லூரிகள் (சிதம்பரம் இராஜா சர் முத்தையா செட்டியார் மருத்துவக் கல்லூரி தனியார் கல்லூரியாக இருந்து, தற்போது அரசு கல்லூரியாக மாறியுள்ளது) செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாடு அரசின் சொந்த நிதியில் 29 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. அண்மையில் ஒன்றிய தலைமை அமைச்சர் மோதி,  தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தார். இந்த 11 கல்லூரிகளின் உருவாக்கத்தில் மட்டுமே ஒன்றிய அரசின் நிதி 60%, மாநில அரசின் நிதி 40% ஆகும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 6229ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 1,35,456 எண்ணிக்கையில் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் போல பரப்பள விலும்  மக்கள் தொகையிலும் இருமடங்கு கொண்ட உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 12. மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்கள் 3000 மட்டுமே. இது தமிழ்நாட்டின் எண்ணிக்கையில் பாதியளவுதான்.

 நீட் எப்படி

தமிழ்நாட்டை பாதிக்கிறது..!

தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங் களில் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் குறைவாக இருப்பதால் நீட் தேர்வு மூலம் பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களில் 90% இடங்களில் பிறர் நுழைந்து விடுகின்றனர். வட மாநிலங்களில் நீட் தேர்வுக்கான விடைத்தாள் முன்கூட்டியே வெளி யாவதும், தேர்வுக்குப் பின் சரியான விடைத்தாள்களை இணைப்பது போன்ற தில்லுமுல்லுவும் நடைபெறுகின்றன.

மேலும் தேர்வு எழுதுவதில் ஆள்மாறாட்டம் நடைபெற்று 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் தமிழ்நாடு தவிர்த்த பல மாநிலங்களில் நீட் தேர்வுக்குப் பலத்த எதிர்ப்பில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

2020ம் ஆண்டு நீட் தேர்வில் இந்தியாவில் முதல் இடத்தில் வெற்றிப் பெற்ற பீகார் மாநில மாணவி ஒருவர் +1 மற்றும் +2 படிக்க பள்ளி செல்லாமல் இரு வருடங்களும் தில்லியில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் படித்து, +2 தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் முதல் இடம் பெற்றுவிட்டார்.

இந்தச் செய்தியை எல்லா நாளிதழ் களும் வெளியிட்டிருந்தன. “நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்பது பித்தலாட்ட வாதம் ஆகும்”என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4 bismi svs

கடந்த 2020ம் ஆண்டில் தமிழ் நாட்டில் இருந்த 4000 மருத்துவ இடங்களில் 400 பேர்கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் சேரமுடியவில்லை. 3600 பேரும் கேரள, ஆந்திரம் மற்றும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்தது, பா.ஜ.க.வை ஆதரிக்கும், கடந்த அதிமுக அரசு. இந்த இடஒதுக்கீட்டினால் இந்தக் கல்வியாண்டில்(2021-&22) 336 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதை அறிய வேண்டும்.

நீட் தேர்வால் தமிழ்நாடு மருத்துவக்

கட்டமைப்பு சிதையும் அபாயம்

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு நாட்டிலும் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகித்தில் மருத்துவக் கட்டமைப்பு இருக்கவேண்டும் என்று விதியைக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் 252 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. உலக அளவில் எந்த நாடும் தமிழ்நாடு பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இந்த விகிதத்தைப் பின்பற்றவில்லை. இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு {கட்டமைப்பு விபரம் பெட்டிச் செய்தியில்..) அசாத்தியமானது.

மருத்துவக் கட்டமைப்பில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலம் என்பதைவிட உலக அளவிலும் முதலிடம் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில் 12% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளனர்.  தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுகாதாரத் துறைக்கு கணிசமான தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது. 2021-&22ஆண்டுக்கு ஒதுக்கிய நிதி 18933.20 கோடி..!

எனவே நீட் என்பது மருத்துவக் கல்வி படிக்கும்  6000 மாணவர்களின் பிரச்சனை என்று நாம் சுருக்கி பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களின் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நீட் தேர்வால் ஆண்டுதோறும் நமக்குள்ள 6229 இடங்களில் சுமார் 6000 மருத்துவ இடங்களை தமிழ்நாட்டு மாணவர்கள் இழக்க நேரிட்டால், சில ஆண்டுகளில் தமிழ்நாடு கட்டமைத்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் வைத்தியம் பார்த்துக்கொள்வதற்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்த முடியாத நிலை ஏற்படும். தமிழ் நாட்டின் வளமான மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைக்கப்படும் அபாயம் இதில் உள்ளது”என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நீட் விலக்குக் கோரும் மசோதாவை மீண்டும் அனுப்பி வைக்கும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தி பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் பா.ஜ.க. அரசு :

கல்வி ‘ஒத்திசைவு’என்னும் Concurrent list  இல்தான் உள்ளது என்றாலும் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் நீட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, மாநில அரசுகளின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. மாநிலங்களின் உரிமைகளை பறித்துக் கொண்டு, தன் நோக்கமான ‘ஒரே நாடு, ஒரே கல்வி’ என்னும் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முயன்று வருகின்றது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைந்து வாழும் துணைக்கண்டம் என்ற உணர்வின்றி, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து ஓர்மை தன்மையை திணிக்க முயன்று வருகின்றது பா.ஜ.க. அரசு.

தீர்வென்ன..?

மாநில பட்டியலில் உள்ள விவசாயத் துறையில் ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களை மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றியது. வட இந்திய வேளாண் பெருங்குடி மக்கள் ஒன்றிணைந்து ஒரு வருடம் தொடர்ந்து போராடி அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைத்தார்கள்.  தமிழ்நாட்டு மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்குகொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்தை இயற்றியது ஒன்றிய அரசு என்ற வரலாறும் உள்ளது.

நீட் தேர்வு விலக்குச் சட்டம் என்பது மாணவர்கள் பிரச்சனை என்பதைவிடவும், மாநில  உரிமைகள் மீது ஒன்றிய அரசு தொடுக்கும் போர், தமிழ்நாட்டின் இறையாண்மையின் மீதான சவால் என்பதை உணரவேண்டும்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக உக்கிரமான போரைத் தொடுப்பதற்கு வெகுமக்கள் ஆதரவு வேண்டும்.

நீதிமன்றங்களை விடவும் மக்கள் மன்றமே உயர்ந்தது என்ற மக்களாட்சியின் மாண்பை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே நீட் தேர்விலிருந்து விலக்கு பெறமுடியும்.

கல்வி பயிலும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதியும், உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும் காக்க, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பெற, தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவதே தீர்வாக அமையும்.

– ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.