அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி – திமுகவின் அடுத்த மூவ் !

0

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
அமைச்சர் பதவியை இழந்தார்

முன்னாள் அமைச்சர் பொன்முடி 2006 – 11ஆம் ஆண்டுகளில் கலைஞர் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தார் என்று 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. 2016இல் இவ் வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த விடுதலையை எதிர்த்து 2017இல் ஆட்சிப் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 19ஆம் நாள் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 21ஆம் நாள் (இன்று) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

தண்டனை விவரங்கள்

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதத் தொகையாக இருவரும் தலா 50 இலட்சம் செலுத்தவேண்டும். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையை ஏற்கவேண்டும்.

- Advertisement -

பொன்முடி - நீதிமன்றத்தில்
பொன்முடி – நீதிமன்றத்தில்

தண்டனை நிறுத்தி வைப்பு

நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளிக்கும் முன்பு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சார்பில் “வயதையும் உடல் நோய்க்குச் சிகிச்சை பெறுவதையும் கணக்கில் கொண்டு தண்டனையைக் குறைவாக வழங்கவேண்டும் என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், சிறை தண்டனை வழங்கப்பட்டால், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாகத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்திருந்தார். நீதிபதி வயதையும், உடல் நோயையும் தீர்ப்பு வழங்கும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று வேண்டுகோளை ஏற்று, தண்டனை 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி தகுதி இழந்தார்

4 bismi svs
பொன்முடி
பொன்முடி

உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர்,“அமைச்சர் பொன்முடி ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியை இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார்” என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கும். 6 மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் திருக்கோவிலூர் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தலை நடத்தும்.

பொன்முடிக்கு உடனே சிறைத்தண்டனை இல்லை

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது. இந்தத் தண்டனைக்கான பிணை எனும் ஜாமீனை உச்சநீதிமன்றத்தில்தான் பெறமுடியும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அந்த மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனைக்குத் தடை பெற்றால் மட்டுமே உச்சநீதிமன்ற வழக்கு முடியும் வரை பொன்முடி சிறைக்குச் செல்லாமல் இருக்கமுடியும். உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்றுத் தண்டனைக்குத் தடை வழங்கவில்லை என்றால் 30 நாள்கள் கழித்துப் பொன்முடியும் அவரது மனைவியும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்குப் பின்னடைவா?

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

இந்தத் தீர்ப்பு குறித்துத் திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,“இந்தத் தீர்ப்பு தனிமனிதரான பொன்முடிக்குப் பின்னடைவுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனால் திமுகவுக்குப் பின்னடைவு என்பதை ஏற்கமுடியாது” என்று குறிப்பிட்டார். “இதுவரை ஊழல் வழக்கில் திமுகவைச் சார்ந்தவர்கள் ஒருவர் சிறை தண்டனை பெற்றுள்ளனரா?” என்று சவால் விட்டுக் கொண்டிருந்த திமுகவுக்குப் பொன்முடியின் சிறை தண்டனை ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது என்னவோ உண்மைதான்.

திமுக மக்கள் மன்றத்தில் இனி வருங்காலங்களில் ஊழல் குறித்து என்ன கருத்தை முன்வைக்கப் போகின்றது என்பதைப் பொறுத்தே திமுகவின் வெற்றி தோல்விகள் அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.