பட்டா மாற்றம் – விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை – தஞ்சை கோர்ட் தீர்ப்பு !
தஞ்சாவூர் மாவட்டம், மாரியம் மன் கோவில் ராஜராஜன் நகரை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் கார்த்திகேயன் தான் குடியிருந்து வரும் வீடு, தனது தங்கை இந்திரா காந்தி மனை, தனது நண்பர் ரவிச்சந்திரன் மனைக்கு தனிப்பட்டா கேட்டு, கடந்த 23.02.2011ம் தேதி தஞ்சாவூர் வட்டாட்சியரிடம் அவரவர் பெயரில் மனு கொடுத்துள் ளார்.
அந்த மூன்று மனுக்களும் புளியந்தோப்பு விஏஓ சுந்தரமிடம் விசாரணைக்கு வந்த போது கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற பரிந்துரை செய்ய, மூன்று மனுக்களுக்கும் ரூ.5000 லஞ்சமாக கார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். பின்னர், ஒவ்வொரு மனுவிற்கும் ரூ.1500 வீதம் மூன்று மனுக்களுக்கும் ரூ.4,500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கார்த்திகேயன் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நடவடிக்கை மேற்கொண்ட போது கடந்த 16.03.2011ம் தேதி ரூ.4,500யை புகார்தாரர் கார்த்திகேயனிடம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது, புளியந் தோப்பு விஏஓ சுந்தரத்தை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.
அந்த சமயத்தில் இதே போன்று தனிப்பட்டா பரிந்துரை செய்வதற்காக தள வாய்பாளையத்தை சேர்ந்த மற்றொரு நபரான வடிவேல்விடம் அவருடைய மனைக்கும் அவருக்கு தெரிந்த மகர் நோம்பு சாவடியை சேர்ந்த சித்ராவின் மனைக்கும் சேர்த்து ரூ.2,000 கேட்டு,. கடந்த 03.03.2011ம் தேதி ரூ.1,000 பெற்றும், மீதப்பணம் ரூ. 1,000த்தினை கடந்த 16.03.2011 பெற்ற போது அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி பின்னர் புளியந்தோப்பு விஏஓ சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புளியந்தோப்பு விஏஓ சுந்தரம் மீது நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதில், புளியந்தோப்பு விஏஓ சுந்தரத்தை ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8,000 அபராதமும், அபரராதம் கட்டத்தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.