தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

0

கடந்த 31ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆளுநர், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கு இணையாக ஆட்சி நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ஆளுநர் என்பவர் அலுவல்வழி (ணிஙீ-ளிதிதிமிசிமிளி) பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்று அரசியல் சாசனத்தின்படி அழைக்கப்படுகிறார். அவருக்கு எந்த அதிகாரமும் பல்கலைக்கழகத்தில் இல்லை.

அரசு தேர்வு செய்யும் மூவர் அடங்கிய துணைவேந்தர் பட்டியலில் ஒருவரைத் தேர்வு செய்வார். (யாரைத் தேர்வு செய்யவேண்டும் என்பதையும் ஆளுநருக்கு அரசு தெரிவிக்கும்) பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளின்போது நடைபெறும் ஆட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஆளுநர் தலைமை தாங்குவார்.  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்புக்கு வந்தவுடன் பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. மாநில அரசு நிதியில் நடைபெறும் பல்கலைக் கழகங்களைத் தற்போது ஆளுநர்தான் ஆட்சி செய்து வருகிறார்.   தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆளுநரால் நியமிக்கப்படும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். என்னும் இந்து சனாதன அமைப்பின் சார்பாளர்களாகவே உள்ளனர். இப்படிப் பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ளனர் என்பது தனிக்கதை. அதைப் பின்னர் விரிவாகப் பேசுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2 dhanalakshmi joseph

இந்த உரை சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியவுடன் ‘அங்குசம் செய்தி’  இதழின் புலனாய்வுக் குழு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய/பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பலரையும் சந்தித்து விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. கிடைத்த செய்திகளை அப்படியே வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளம் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி உள்ளே நுழைந்தது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

- Advertisement -

- Advertisement -

“2015-18ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மற்றும் தத்துவத்துறைத் தலைவராக இருந்த பாஸ்கரன் துணைவேந்தராக இருந்தார். இவருடைய நண்பர் (இவர் பெயரும் பாஸ்கரனே) திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாஸ்கரனை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்குநராக நியமித்தார். இவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சார்ந்தவர் என்பதை வெளிப்படையாகவே சொல்லிக்கொள்வார்.

2018ஆம் ஆண்டில் பாஸ்கரன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘கோயில்களும் சுற்றுச் சூழலும்’ என்னும் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தினார். அந்தக் கருத்தரங்கிற்குப் பலவகையில் உதவி செய்தவர் 2017ம் ஆண்டு இலக்கியத் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட ஜெ.தேவி. இவர் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர் என்றும், அவரின் பரிந்துரையால்தான் பல்கலைக்கழகத்தில் பணி பெற்றேன் என்பதைப் பெருமையாகச் சொல்லுவார். தொலைக்கல்வி இயக்குநர் பாஸ்கரன் இலக்கியத்துறைத் தலைவர் ஜெ.தேவி கூட்டணியில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.+பாஜக சிந்தனைகள் நுழையத் தொடங்கின.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், 2017-மே மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் தற்போது வழக்கு நடைபெற்று வருகின்றது.விதிமுறை மீறி நியமிக்கப்பட்ட 10 பேராசிரியர்களில் ஜெ.தேவியும் ஒருவர்.

இந்தக் காலத்தில்தான் பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் சென்ற நேரம் என்பதால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த ஜெ.தேவி, இலக்கியத் துறை நடத்தும் கூட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை அழைக்கத் தொடங்கினார். இப்போது ஆளுநர் தமிழிசை வரை வந்து முடிந்திருக்கிறது. இனி என்ன நடக்குமோ” என்று முடித்துக்கொண்டார்.

புதிய துணைவேந்தர் திருவள்ளுவன் பொறுப்பேற்றவுடன் திமுக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களின் கூட்டம் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது குறித்து மற்றொரு பேராசிரியரிடம் கேட்டோம்.  அவர், “இரு அமைப்பினரும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வது உண்மைதான்” என்று போட்டுடைத்தார். மேலும், “கடந்த பிப்ரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ விழாவிற்குத் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி என்.சிவா கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் பேச்சில் எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் தாய்மொழி உணர்வு மேலோங்கியிருந்தது.

இந்த நிகழ்வு நடந்து முடிந்தவுடன் மார்ச்சு 4ஆம் நாள் தேதி ஜெ.தேவி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்னும் கருத்தரங்கில், பாஜக பொதுச்செயலாளர், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக மதிப்புறு பேராசிரியருமான இராம.சீனிவாசன் கலந்து கொண்டார். பல்கலைக்கழகம் வளாகம் முழுவதும் கம்பங்களில் பாஜக கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. பாஜக தஞ்சை பிரமுகர்கள் பலரும் படையெடுத்து வந்தனர். பல்கலைக்கழகம் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோன்ற தோற்றம் இருந்தது உண்மைதான்.

பின்னர் மார்ச்சு 23ஆம் நாள் பல்கலைக் கழகத்தில் ‘தந்தை பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவு’ நடைபெற்றது. அதற்குப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அழைக்கப்பட்டார். அந்த நிகழ்வின்போது துணைவேந்தர் மைசூரில் இருந்தார் என்பதால் துணைவேந்தர் கலந்துகொள்ளவில்லை. இது ஓர் எதேச்சையான நிகழ்வா? என்று பல்கலைக்கழகத்தில் பேசிக் கொண்டனர்.

பல்கலைக்கழகம் வந்த பேராசிரியர் சுப.வீ-யை இலக்கியத்துறை பேராசிரியர் ஜெ.தேவி சந்தித்துள்ளார். அப்போது, தான் மந்திரி கே.என்.நேருவின் உறவினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ஜெ.தேவி சென்றபின்னர், கே.என்.நேருவின் உறவினரா இப்படி ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அழைத்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்? என்று சொல்லிவிட்டு சுப.வீ. புன்னகை பூத்துள்ளார்.

மார்ச்சு 25ம் நாள் இலக்கியத்துறையின் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக் காகத் தந்தி டிவியின் பேச்சரங்கத்தின் நெறியாளர், ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் என்று அறியப் பட்ட அசோகவர்ஷினி கலந்துகொண்டு உரையாற்றினார். பல்கலைக்கழகங்களில் உரையாற்றுகின்ற அளவுக்கு அசோகவர்ஷினி என்ன ஊடகஅறிவு பெற்றுவிட்டார்? என்பது புரியவில்லை. அசோகவர்ஷினி கலந்துகொண்ட செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. முகநூலில் பதிவு செய்யப்பட்ட படங்கள் உடனே நீக்கம் செய்யப்பட்டன. இங்கே நடைபெறும் அனைத்துச் செய்திகளும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. என்றாலும் பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி கொண்ட அமைப்பு என்பதால் அமைச்சர் அமைதி காக்கிறார் என்பதைப் பலவீனமாக யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வீசிக்கொண்டிருந்த மார்ச் மாதப் புயலில்  பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவும் சிக்கிக்கொண்டது. பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு பன்னாட்டு கருத்தரங்கத்தைப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் அவசரகதியில் நடத்த முற்பட்டார். ஏன் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

4 bismi svs

இது குறித்து பேராசிரியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “பன்னாட்டு கருத்தரங்கம் என்பது 6 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்கப்படவேண்டும். இதுதான் பன்னாட்டு கருத்தரங்க நடைமுறை.

அயல்நாட்டு தமிழ்க் கல்வித்துறை மார்ச்சு 15ம் தேதி பன்னாட்டு கருத்தரங்க அறிவிப்பை வெளியிட்டுக் கட்டுரைகளை வரவேற்கின்றது. சில நாள்களில் மார்ச்சு 30 கருத்தரங்கத் தொடக்கவிழா என்றும் மார்ச்சு 31 நிறைவு விழா என்றும் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை இருக்கும் வளர்தமிழ்ப் புலத்தில் அமைக்கப் பட்டுள்ள பாரதியார் சிலையைத் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைப்பார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அழைப்பு வெளியானவுடன் தஞ்சை தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்தனர். அனைத்துக் கட்சி மற்றும் இயக்கப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறியதாவது,

“தமிழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே, தஞ்சை கரந்தை தமிழ்ச்சங்க நிறுவனர் உமாமகேஸ்வ ரனார், தஞ்சாவூரில், தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், என வலியுறுத்திய ந.மு. வேங்கடசாமி சிலையை அமைக்கக் கோரிய போது, திருவள்ளூர் சிலை ஒன்று மட்டுமே வைக்க அனுமதி உள்ளதாக, பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவித்தது.

தற்போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு எடுத்து, தனியார் ஒருவர் நன்கொடையில் சிலை அமைப்பதால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம். பல்கலைக்கழகம் சார்பில் அமைத்தால் எதிர்ப்பு கூறப் போவதில்லை” என்றார்.

மேலும், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு அனுமதி இன்றியும், தமிழக அரசின் ஆலோசனை பெறாமலும், ஒரு தனியார் ஒருவர் செய்து கொடுத்த பாரதியார் சிலையை, தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் திறக்கக் கூடாது எனத் தஞ்சாவூரில் உள்ள அனைத்துக் கட்சி, இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தைக் கடந்த 27ம் தேதி, தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த உத்தரவையடுத்து, பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும், பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெறும்.  இதில், கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழிசை, கருத்தரங்க ஆய்வுக் கோவையை மட்டும் வெளியிட்டு, சோகத்துடன் திருச்சி திரும்பித் தனிவிமானத்தில் ஹைதராபாத் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை யாளர் என்று அறியப்படுகின்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் கலந்துகொண்டதும் பல்கலைக் கழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. திறக்கப்பட வேண்டிய பாரதியார் சிலை தற்போது வளர்தமிழ்ப் புலத்தில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதில் துணைவேந்தரும், கருத்தரங்கை முன்னின்று நடத்திய பேராசிரியர் குறிஞ்சி வேந்தனும் முறையாக இந்த விழாவை நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரம் தேவையில்லை என்பது என் கருத்து” என்று கூறினார்.

தமிழிசையை அழைப்பது என்ற முடிவைத் துணைவேந்தர் எடுத்ததில் ஒரு நன்றியுணர்ச்சியே காரணம் என்பதைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஒருவர் நம்மிடம் பேசியதன் வாயிலாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

“துணைவேந்தர் திருவள்ளுவன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் எனக்குப் பின் படித்தவர். நான் அவரை நன்கு அறிவேன். அவர் தந்தை திமுக இயக்கம் சார்ந்தவர். திருவள்ளுவனும் திமுக சிந்தனையாளர்தான். மாற்றுக் கருத்தில்லை. அவர் தந்தையார் காலத்திலே தென்மாவட்டத்திலிருந்து நெய்வேலி வந்துவிட்டனர். துணைவேந்தர் பொறுப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று சாதிய உணர்வு அடிப்படையில் தமிழிசையைச் சந்தித்துத் திருவள்ளுவன் கோரிக்கை வைத்துள்ளார். பின்னர் அவர் துணைவேந்தராக வந்துவிட்டார்” என்று கூறினார். இதன் மூலம் நன்றி உணர்ச்சியுடன்தான் திருவள்ளுவன், தமிழிசையை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார் என்று எண்ணுவதைத் தவிர்க்கமுடியாது அல்லவா?

06.04.2022ஆம் நாள் திருச்சி விழாவில் கலந்துகொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகப் பெண் பேராசிரியர் ஒருவர், உரை முடிந்தவுடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் சிலை ஏன் திறக்கப்படவில்லை என்று ஒரு சிறு விளக்கத்தை முன்வைத்தார். “பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கவே ஆட்சி மன்றக் குழுவின் ஒப்புதலைப் பெற்றே வைக்கப்பட்டது. மேலும், எந்தச் சிலையும் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்க அனுமதியில்லை என்று பல்கலைக்கழகத் துணை சட்டவிதி தெளிவாக எடுத்துரைக் கின்றது. இந்நிலையில் அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவின் காரண மாகவே பாரதியார் சிலை மூடி வைக்கப் பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரின் திருக்கரத்தால் திறந்து வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.  இவர் சொன்னதுபோல் நடந்தால் அது இடியாப்பச் சிக்கலில் பல்கலைக்கழகம் சிக்கிக்கொள்ளுவதுபோல் ஆகிவிடுமே என்ற கவலை நம்மைத் தொற்றிக் கொண்டது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயலில் ஆளுநரும் தன் பங்கிற்கு ஒரு செய்தியைத் தந்துள்ளார். அது என்னவெனில், “தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ராஜவரதராஜா என்பவரை ஆளுநர் 18.02.2022ஆம் நாளிட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பி னராக நியமித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்தக் கடிதம் முகநூலில் ரமேஷ்ராஜா என்பவரால் 05.04.2022ஆம் நாள் பகிரப்பட்டுள்ளது.

இதில் எழும் கேள்விகள் என்னவென்றால், திட்டக்குழு பதவி கேட்டு ராஜவரதராஜ விண்ணப்பித்தாரா? அதற்கான விளம்பரம் வந்ததா? இல்லை என்றால் ஆளுநரே தேர்வு செய்தாரா? துணைவேந்தர் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமித்துள்ளரா? என்றால் துணைவேந்தர் எப்படி ராஜாவரதராஜாவை பரிந்துரை செய்தார். இதிலும் ஆர்.எஸ்.எஸ். கைங்கரியம் இருக்குமோ? என்ற கவலையை ஒரு பேராசிரியர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

எப்படியோ திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சொல்வதுபோல் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆர்.எஸ்.எஸ்.-இன் பிடியில் சிக்கி யிருப்பதுபோன்று தெரியும் தோற்றம் மெய்யா? பொய்யா? என்பது மூடப்பட்டுள்ள பாரதியார் சிலை திறப்பு விழாவில் தெளிவாகிவிடும்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.