சமயபுரம் : படையெடுக்கும் பக்தர்கள் ! தொற்றுபரப்பும் குப்பைகள் ! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது . நாளை (15-ந் தேதி) முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக் குட்பட்ட சமயபுரம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுமையாக செய்யப்படாமல், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் நால்ரோடு பிரிவு பகுதியில் இருந்து தேரடி வரை தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற அன்னதானத்தினை பாக்கு தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு பரிமாறுகின்றனர். அதனை வாங்கி சாப்பிடும் பக்தர்கள் பாக்கு மரத் தட்டுகளை சாலையின் ஓரத்திலேயே வீசிவிட்டு செல்வதால் சமயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி, தற்காலிக பேருந்து நிலையம், பைபாஸ் பாலம் பகுதி மற்றும் அதன் அருகில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சாப்பிட்டு மீதமான உணவுகளும் , சாப்பிட பயன்படுத்திய பாக்கு மட்டை தட்டுகளும், பிளாஸ்டிக் கவர்களும் வழி நெடுகிலும் சிதறி கிடக்கின்றன.
மேலும் அவ்வழியாக கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் காலில் கீழே கிடக்கும் தட்டுகளில் மீதமான உணவுகளில் கால்மிதிபடக்கூடிய சூழல் நிலவுகிறது .மேலும், பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் சுமார் 50 – க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் குடிநீர் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகும் பக்தர்கள் தாகத்தை தணிப்பதற்காக தண்ணீருக்கு அலையக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிரப்பப்பட்ட குடிநீரும் குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என புலம்பும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதயாத்திரையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் தெப்பக்குளத்தில் குளித்து மாலை அணிந்து அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெப்பக்குளத்தை சுற்றிலும் குப்பைகள் பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாளை நடைபெற உள்ள தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகளிலும் சுகாதாரப் பணிகளிலும் மெத்தனப் போக்கை பேரூராட்சி நிர்வாகம் கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உடனடியாக இதனை சீர்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜோஷ்.