தமிழர்களின் பத்தினி தெய்வம் கண்ணகியின் கோவில் – சீரமைப்பு எப்போது ?

0

தமிழர்களின் பத்தினி தெய்வம் கண்ணகிக்கு கோவில் – பாதை எப்போது ?

 

“தமிழர்களின் பத்தினி தெய்வம் கண்ணகி கோயில் மற்றும் கோயில் செல்லும் மலைப் பாதைகளைத் தமிழ்நாடு அரசு சீரமைக்க வேண்டும்”-  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்குக் கரூர் தமிழ் இராசேந்திரன் வேண்டுகோள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழர்களின் வாழ்வியலைப் பேசும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் நாயகி கண்ணகிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கோயில் உள்ளது. அந்தக் கோயில் கேரள வனப் பகுதியில் இருப்பதால் கோயில் மற்றும் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதைகளைக் கேரள அரசு சீரமைக்க மறுக்கின்றது. தமிழக எல்லையையொட்டி உள்ள கோயில் பாதைகளைத் தமிழ்நாடு அரசு சீரமைக்க முன்வர வேண்டும் என்று கரூர் வழக்கறிஞர் மற்றும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ் இராசேந்திரன் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கண்ணகிக்கு கோவில்
கண்ணகிக்கு கோவில்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அதன் விவரங்கள் பின்வருமாறு:

கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கண்ணகி கோயிலுக்கு இரண்டு வழி உண்டு அதில் தமிழ் நாட்டில் இருந்து அடர்ந்த காடுகளுக்குள் செல்லும் வழி கரடுமுரடாக இருந்தாலும் பார்க்கப் பச்சைப்பட்டு உடுத்திய பேரழகு கொண்டது என்பார். ஆனால் கண்ணகி கோயில் தமிழர்கள்  சென்று வழிபட முடியாதபடி கேரளா அரசு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது.

கண்ணகிக்கு மங்கலதேவி என்று பெயர் மாற்றிவிட்டார்கள். இது எங்கள் சாமி. எங்கள் நிலம் என்கிறார்கள். தமிழர்கள் விழா நடத்த, பந்தல் போட, கூட்டம்கூட விடுவது இல்லை தமிழர்களின் உரிமையைப் பறிக்கிறது கேரளா அரசு. நம்முடைய அளவுகளின்படி கண்ணகி கோயில் இருக்கும் இடம் தமிழ்நாடு எல்லைக்குள் அமைந்துள்ளது. ஆனால் தற்போது கண்ணகி கோயிலுக்குப் போகும் வழி கேரளா நிலப்பகுதிக்குள் இருப்பதால் பெரும் சிக்கல். இதனைத் தவிர்க்கும் விதமாகத் தமிழக வனப்பகுதி வழியாகக் கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியைச்  சரி செய்து தமிழர்கள் தமிழ்நாடு நிலப் பகுதி வழியாகவே கண்ணகி கோயிலுக்குச் சென்றுவரத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்ணகி கோயில் இடிந்த நிலையில் கற்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கிறது. அதைப் பார்த்துத்  தமிழ் உணர்வு கொண்ட கண்ணகி பக்தர்கள் மனம் வெதும்பி நிற்கிறார்கள் இந்தக் கோயிலைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது அவர்கள் கோயிலைச் சீரமைத்துத் தரவேண்டும். அல்லது தமிழ்நாட்டு அரசிடம் கோயிலை ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு  இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

கண்ணகி கோயில்

மங்கலத் தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்குச் சித்தரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாகக் காணலாம்.

கண்ணகி கோயில்
கண்ணகி கோயில்

கோயில் வரலாறு

கோவலனுக்குப் பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரணத் தண்டனை அளித்துக் கொன்றுவிட்டது அறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரசச் சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.

மதுரை மாநகருக்குத் தனது கணவனுடன் கண்ணகி கிழக்கு வாயில் வழியாக நுழைந்தாள். அதன் பின்னர், தனது கணவனை இழந்த கண்ணகி பாண்டியனையும், மதுரையையும் அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் மாமதுரையை விட்டுப் புறப்படுகிறாள். (சிலம்பு 53:183) அதன் பின்னர் வையை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் வையை ஆறு பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகைய காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து வந்து இக்கோயிலை அமைத்தான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கண்ணகி கோயில்
கண்ணகி கோயில்

மங்கலதேவி பெயர்க்காரணம்

சுமங்கலி பெண்ணானவள் கணவனை இழந்தவுடன் அமங்கலியாகிறாள். அப்படியாயின் கண்ணகி எங்ஙனம் மங்கலதேவியாவாள்? என்கிற வினா அனைவரிடமும் எழும். கணவனை இழந்து கணவன் மீது சுமத்தப்பெற்ற பழியை நீக்கி மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகியைக் கோவலன் மங்கல மடந்தையாக்குகிறான். அவ்வாறு கோவலனால் மீண்டும் மங்கல மடந்தையாக்கப்பெற்று விண்ணுலகெய்திய கண்ணகியே மங்கலம் தரும் மங்கலதேவியாக அனைத்து மக்களாலும் வழிபடப்பட்டுவருகிறாள். விண்ணுலகிலிருந்து பூப்பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் அணிவித்து விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதால் கண்ணகியை மக்கள் மங்கலதேவி என்று அழைக்கிறார்கள்.

எல்லைப் பிரச்சனை

தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கண்ணகி கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817இல், கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்தச் சர்வேயில், கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாகச் சுட்டி காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896-இல் நடத்திய சர்வேயும், 1913,1915-இல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபணையும் எழுப்பவில்லை. 1976-இல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளித் தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்பு கொள்ளப்பட்டது.

கண்ணகி கோயில்
கண்ணகி கோயில்

இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்டச் சீரமைப்புக்குழு துவக்கப்பட்டுக் கோயிலைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது. 1976இல் இந்தச் சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோயிலுக்குச் செல்லப் பாதை அமைக்க வேண்டும் எனச் சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாகக் கண்ணகி கோயிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையில் 1976-இல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு அவசர அவசரமாகக் கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழகப் பக்தர்கள், கண்ணகி கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்தச் சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

கண்ணகி கோயில் விழா

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோயில் வழிபாட்டிற்காகத் தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்திச் சித்திரை முழுநிலவு திருவிழாவிற்குப் பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

தமிழ் இராசேந்திரன்
தமிழ் இராசேந்திரன்

கோயில் நிலை

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றிக் கோயிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோயில் சுவற்றின் கற்கள் உடைந்து போய்க் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் அழிந்து போகும். கோயிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

வேண்டுகோள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தி உடனடியாகத் தமிழ்நாட்டிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியைச் செப்பனிட்டுக் கொடுத்துத் தமிழர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் கண்ணகி கோயிலுக்குச் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.