அறுவால் வெட்டுபட்ட காயத்தோட போலீஸ் ஸ்டேசன் போனா, பாதிக்கப்பட்ட எங்க மேலேயே எஃப்.ஐ.ஆர் ! அஞ்சு புள்ளைங்களோட கதறும் குடும்பம் !

2

அறுவால் வெட்டு காயத்தோட போலீஸ் ஸ்டேசன் போனா, பாதிக்கப்பட்ட எங்க மேலேயே எஃப்.ஐ.ஆர் ! அஞ்சு புள்ளைங்களோட கதறும் குடும்பம் !

முருகதாஸ் குடும்பத்தினர்
முருகதாஸ் குடும்பத்தினர்

”ஸ்கூலுக்கு போற வயசுல அஞ்சு புள்ளங்கள வச்சிகிட்டு டெய்லி நிம்மதியா தூங்கி எழுந்திருக்க முடியல. எந்த நேரம் என்ன ஆகுமோனு பதட்டத்திலேயே மொத்த குடும்பமும் வாழ்ந்திட்டிருக்கோம். எனக்கும் எங்க ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடத்தகராறு இருக்கு. கோர்ட்ல கேஸ் போட்ருக்கோம். ஆனாலும், ஊர்ல நாலுபேர சேர்த்துகிட்டு அன்றாடம் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுத்திட்டே இருக்காங்க.

எதுக்கெடுத்தாலும் கம்பையும், அறுவாளையும் தூக்கிட்டு வர்றாங்க. வீட்டு பொம்பளைங்க கூட வம்புக்கு வர்றாங்க. ஒருவாட்டி வந்த தகராறுல அறுவா வீசுன காயத்தோட போலீஸ் ஸ்டேசன் போனா, பாதிக்கப்பட்ட எங்க மேலேயே எஃப்.ஐ.ஆர். போட்டு டெய்லி ஸ்டேசன்ல கையெழுத்துப்போடச் சொல்லி ஒருமாசம் அலைய வச்சிட்டாங்க… எங்க கொடுமைய எங்கப் போயிட்டு சொல்றதுனே புரியல…” என புலம்புகிறார், திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, உசிலம்பட்டி கிராமம், பொன்முச்சந்தியைச் சேர்ந்தவர் முருகதாஸ்.

மணப்பாறை ரயில்நிலையம்
மணப்பாறை ரயில்நிலையம்

”நாங்க குடியிருக்கிற பொன்முச்சந்தியில இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில சீகம்பட்டினு கிராமம். பூர்வீக வழி பாத்தியப்பட்ட 2 ஏக்கர் 20 சென்ட் விவசாய நிலம் இருக்கு. தவசிங்கிறவர் கிட்டயிருந்து 1985 இல எங்க அப்பா கிரையம் பன்னியிருக்காரு.

அவரு கிட்ட இருந்த மொத்த இடம் 2 ஏக்கர் 44 சென்ட். அதுல, 2 ஏக்கர் 20 சென்ட் எங்க அப்பா வாங்கிட்டாரு. மிச்ச இருக்கிறது 24 சென்ட் தான். ஆனா, எங்களுக்கு அப்புறம் அந்த மிச்ச இருந்த இடத்த 1987 இல வாங்குன ஆறுமுக செட்டியார் என்பவர் 29 சென்ட்னு பத்திரம் எழுதி வாங்கியிருக்காரு. மிச்ச இடமே 24 சென்ட்தான்ங்கிறப்போ, மூலபத்திரத்தை சரிபார்க்காம 29 சென்ட்னு பத்திரம் எழுதி வாங்கினது அவங்க தப்பு.

அதை ஒத்துக்காம, என் பத்திரத்தில இருக்கிற மாதிரி 29 சென்ட் இடத்தை எனக்கு அளந்து கொடுன்னு பிரச்சினை பன்றாங்க. இதுதான் பஞ்சாயத்து. நாங்க ரெண்டு பேருமே தவசிங்கிறவருக்கு சொந்தமான இடத்தை வாங்கியிருக்கோம்ங்கிறதால, கூட்டுப்பட்டாவில் தான் இன்னமும் இடம் இருக்கு. கிணறும் ரெண்டு பேருக்கும் பொதுவாகத்தான் இருக்கு. இதனால அன்றாடம் பிரச்சினையா இருக்கு.

இடம்..
இடம்..

இந்த இடப்பிரச்சினை தொடர்பாக, மணப்பாறை சார்பு நீதிமன்றத்தில் OS NO.142/2023 வழக்கு போய்கிட்டு இருக்கு. இந்த பிரச்சினையை சட்ட ரீதியா தீர்த்துக்கலானு சொல்லிட்டேன். ஆனாலும், அவங்க திரும்ப திரும்ப பிரச்சினைக்கு வர்றாங்க. கோர்ட்ல கேஸ் போயிட்டிருக்குனு தெரிஞ்சும், தாலுகா ஆபீஸ்ல இடத்த அளக்குறதுக்கு பணம் கட்டி, சர்வேயர கூட்டிட்டு வந்தாங்க. ”எங்க எடத்த நாங்க அளக்கப்போறோம், உங்களுக்கு என்னனு?” வம்பு பன்னுனாங்க.  என்னோட 2 ஏக்கர் 20 சென்ட் இடத்தை அளந்து ஒதுக்கிட்டு மிச்ச இடத்த நீ அளந்து எடுத்துட்டு போங்கனு சொன்னா, அதெப்படி? எனக்கு 29 சென்ட் இடம் தான் வேனும்னு திருப்பிட்டு கேக்குறாங்க.இடத்தை அளக்க வந்த சர்வேயர் கிட்ட எடுத்து சொன்னோம். அவரு கோர்ட்ல பார்த்துக்கோங்கனு போயிட்டாரு.

அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சினைதான் சார். இத மனசுல வச்சிட்டு, 26.08.2023 அன்னைக்கு சாயங்காலம் 5.45 மணிக்கு எங்க கொல்லைக்கு பக்கத்துல இருக்க களத்துல இருந்த என்னோட அக்கா மகன் விக்னேஷ் கிட்ட தகராறு பன்னியிருக்காங்க. “உன் மாமன் என்ன ஆள் மயிரா? எங்க நிலத்தை அளக்க விடமாட்டீங்களா? உன்னையெல்லாம் உங்க ஆயி ஒரு அப்பனுக்கு…” னு அசிங்கமா பேசி வம்பு வளர்த்துருக்காங்க.விக்னேஷ் போன் பன்னி சொல்லவும், கிளம்பி போனேன். களத்துல மணிகண்டன், ராமசாமி, பாஸ்கர், லோகேஷ், கார்த்தி, வெங்கடேஷ், வசந்த்னு ஏழு பேரும் ஒன்னா நின்னாங்க. “ஏண்டா, உங்களுக்கு என் களத்துக்குள்ளே என்னடா வேலைனு?” சண்டை போட்டேன்.

சுற்றிவலைத்த 7 பேர்
சுற்றிவலைத்த 7 பேர்

 

அப்போ, மணிகண்டன் தன்னோட பைக்ல இருந்து அறுவாளை எடுத்து என் அக்கா மகன் விக்னேஷ் வெட்டப்போனான். நான் ஓடிப்போயி தடுத்திட்டதால பெரிய வெட்டா விழாம, சின்ன காயத்தோட உயிர் தப்பிச்சான். அப்பவும் கூட இருந்த பாஸ்கர், ராமசாமினு மாத்தி மாத்தி அறுவாளை என்கிட்டயிருந்து பிடுங்கி விக்னேஷ வெட்ட துடிச்சாங்க. இந்த இழுபறியில, விக்னேஷ்க்கு கழுத்துல, கையிலனு காயம் ஆச்சு. எனக்கும் காயம் ஆச்சு. அப்புறம் ஊர்க்காரங்களும்  நாட்டாமை ஆறுமுகமும் வந்து  சண்டைய விலக்கிவிட்டாரு.

108 ஆம்புலன்ஸ்ல மணப்பாறை ஆஸ்பத்திரியில விக்னேஷும் நானும் சேர்ந்தோம். மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வாக்குமூலம் வாங்கிட்டு போனாங்க.

மணப்பாறை காவல்நிலையம்
மணப்பாறை காவல்நிலையம்

அப்போ, அழகர்னு ஒரு போலீஸ்காரர், 7 பேரும் சேர்ந்து வெட்டுனாங்கனு சொன்னா கேஸ் நிக்காது. 3 பேர் மேல மட்டும் கேஸ் போட்டா, கேஸ் ஸ்ட்ராங்கா நிற்கும்னு இன்ஸ்பெக்டர் கோபி  சொல்றாருனு சொல்லி முதல்ல கொடுத்த வாக்குமூலத்தை மாத்தி வாங்கிட்டு போனாங்க. 7 பேரை 3 பேரா மாத்துனது மட்டுமில்ல, களத்து மேட்டுல நடந்த சம்பவத்தை மாரியம்மன் கோயில் பின்புறம் நடந்ததுனு மாத்தி எஃப்.ஐ.ஆர். போட்டிருக்காங்க. அதாவது, எங்க இடத்துக்கே வந்து பிரச்சினை பன்னியிருக்காங்க. அத சொன்னா, அவங்களுக்கு பாதகமா போயிடும்னு, ஊருக்குள்ள பொதுவான இடத்துல நடந்த சண்டை மாதிரி மாத்திட்டாங்க.” என மூச்சிறைக்க சொல்லி முடித்தார் முருகதாஸ்.

மணப்பாறை டி.எஸ்.பி. இன்பெக்டர்
மணப்பாறை டி.எஸ்.பி. இன்பெக்டர்
விக்னேஷ்
விக்னேஷ்
கூட்டமா சேர்ந்து....
கூட்டமாக சேர்ந்து

”இதுல கொடுமை என்னன்னா, மூனு நாளு ஆஸ்பத்திரியில இருந்துட்டு நாங்க கொடுத்த புகார் மேல என்ன நடவடிக்கை எடுத்துருக்கீங்கனு விசாரிக்க மணப்பாறை ஸ்டேஷன்க்கு போனோம். அங்க இருந்த போலீசுகாரங்க, “இங்க ஏன்யா வந்தீங்க. இங்க நிக்காத கிளம்பு. இல்லாட்டி உன்ன புடுச்சி உள்ள போட்ருவோம். உங்க மேலயும் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்குனு” சொன்னாரு. அப்படியே, தூக்கிவாரிப் போட்டிருச்சு. என்மேலயும், விக்னேஷ் மேலயும் சம்பந்தமேயில்லாத என் பொண்டாட்டி மேலேயும் கேஸ் போட்டு வச்சிருக்காங்க. வேற வழியில்லாம, மதுரை கோர்ட்ல முன்ஜாமின் போட்டு வாங்கினோம். மூனுபேருமே ஒரு மாசம் டெய்லி கையெழுத்துப் போட்டோம்.” என்கிறார்.

 

”எங்க களத்துமேட்டுல வம்படியா வந்து பிரச்சினை பன்னுனது அவங்க. ஏழு பேரு சேர்ந்து விக்னேஷையும், என் வீட்டுக்காரரையும் சுத்தி வளைச்சி மல்லுக்கட்டிட்டு இருந்தாங்க. நான்தான் அத என்னோட செல்போன்ல ஆதாரமா இருக்கட்டும்னு வீடியோ எடுத்தேன். ஆனா, நானும் அறுவால எடுத்து வீசுனேனு என்மேலயும் கேசு போட்ருக்காங்க.

முருகதாஸ் மனைவி கவிதா
முருகதாஸ் மனைவி கவிதா

இந்த சம்பவம் நடக்கிறதுக்கு முதல் நாள்கூட, இவுக போலீஸ் ஸ்டேசன் போயிட்டாக. நான் என் புள்ளங்களோட வீட்ல இருக்கேன். ஊர் பொம்பளைங்க எல்லாம் ஒன்னுகூடி கையில கொம்போட என் வீட்டுக்கு முன்னாடி நின்னுகிட்டு வெளிய வாடினு அசிங்கமா பேசுனாங்க. புள்ளைங்களா பயத்துல அலறுதுங்க. என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி அழுவுறேன். வீட்டை பூட்டிட்டு வெளிய வராம இருனு சொன்னாரு. அவரு வர்ற வரைக்கும் உசர புடிச்சிட்டு இருந்தோம்.” என்கிறார், முருகதாஸின் மனைவி கவிதா.

”அறுவா வெட்டு சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே, நாலு முறை, சம்பவம் நடந்த அன்னைக்கு ரெண்டு முறைனு மொத்தம் ஆறு முறை 100க்கு போன் பன்னிட்டோம். அப்பவே போலீசு நடவடிக்கை எடுத்திருந்தா, இவ்ளோ பெரிய சம்பவம் நடந்துருக்காது.” என்கிறார், முருகதாஸ்.

மணப்பாறை டி.எஸ்.பி. இன்பெக்டர்
மணப்பாறை டி.எஸ்.பி. இன்பெக்டர்

இதே விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர்கிட்ட நேர்லயே முறையிட்டிருக்கோம். கோர்ட்ல கேசு இருக்கு, இவங்க தேவ இல்லாம பிரச்சினை பன்றாங்கனு நாங்க சொல்றத காதுலயே வாங்கிக்கல. அவங்க கொடுத்த மூலப்பத்திரத்தை யெல்லாம் மொத்தமா வாங்கி வச்சிகிட்டு வரிக்கு வரி வாசிச்சு காட்றாரு இன்ஸ்பெக்டர். ஒழுங்கா, அவங்க எடத்த அளந்து கொடுத்துட்டு ஒதுங்கி போனு என்னையே மிரட்டுறாரு. முழுக்க முழுக்க அவங்களுக்கு சாதகமாவே நடந்துகிட்டாங்க. இன்ஸ்பெக்டர் மேல நம்பிக்கையில்லாமதான், நடந்ததையெல்லாம், எஸ்.பி.கிட்ட புகாரா கொடுக்க கொண்டு போனோம். ஒரு மீட்டிங்காக அவசரமாக கிளம்பிப் போனவரு, உங்க டி.எஸ்.பி. இங்க தான் இருக்காரு. அவர விசாரிக்க சொல்றேன்னு  சொல்லிட்டு போனாரு, எஸ்.பி.”

டி.எஸ்.பி.சார்கிட்ட வீடியோ ஆதாரம், வெட்டுப்பட்ட காயத்தோட போட்டோ எல்லாத்தையும் காட்டி நடந்தத சொல்றோம். ஸ்பாட்ல 7 பேர் இருக்காங்க. 3 பேர் மேலதான் சார் கேஸ் போட்ருங்காங்க. அதுவும் அறுவாள எடுத்து வெட்டியிருக்காங்க அப்படியிருந்தும் 307 ல கேஸ் போடல சார்னு எடுத்து சொல்றோம்.

நாங்க காட்ன வீடியோவ சரியா பார்க்காமலேயே,  ”மூனு பேருதானே இருக்கான். ரொம்ப பேசினா மண்டை சூடாயிரும்னு” சொல்லி எங்கள பேசவே விடல அவரு. வெட்டுப்பட்ட காயத்தை காட்றோம். அப்போகூட, ”இதெல்லாம் சும்மா கீறல்யா. இதுக்கெல்லாம் எவனாச்சும் 307-ல கேசு போடுவானா? ஒன்னு, கண்ணை நோண்டி எடுத்திருக்கனும். இல்லை, கையோ, காலோ தனியா துண்டா வெட்டி எடுத்துடனும். அப்படினாதான் 307-ல கேசு போட முடியும் ” என்கிறார் டி.எஸ்.பி. மேற்கொண்டு பேசுனா, “உன் மேல என்ன தப்பு இருக்குனு நான் விசாரிக்கட்டுமா? உன் மேலயும் கேசு போடுவேன் உனக்கு சம்மதமா”னு பேச விடாம மிரட்டுனாரு.” இதுக்கு மேல நாங்க யாருகிட்ட முறையிடுறதுனு தெரியல என புலம்புகிறார், முருகதாஸ்.

வெட்டுபட்ட காயம்
விக்னேஷ் மீது வெட்டுபட்ட காயம்
விக்னேஷ்
விக்னேஷ்

”அஞ்சு புள்ளைங்கள வச்சிகிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியல. எந்த நேரம் என்ன ஆகுமோனு பதட்டமா இருக்கு. இவரு அக்கா மகன் விக்னேஷ் ஊருக்குள்ள வந்தா பிரச்சினை ஆகிடுமோனு வெளியிலதான் தங்க வச்சிருக்காரு. இப்படி இன்னும் எத்தன காலத்துக்கு உயிருக்கு பயந்து வாழ்றது சொல்லுங்க? இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாதான் நிம்மதியா இருக்கும்.” என பதைபதைக்கிறார், கவிதா.

நாட்டாமை ஆறுமுகம்
நாட்டாமை ஆறுமுகம்

ஊர் நாட்டாண்மை ஆறுமுகத்திடம் பேசினோம். “தேவையில்லாம பிரச்சினை பன்னிகிட்டு இருக்காங்க. எங்களுக்கு ரெண்டு பேருமே வேனும். விக்னேஷ் ஊருக்குள்ள வர சொல்லுங்க. எதும் ஒன்னும் ஆகாம பார்த்துக்கிறோம்.” என்கிறார் அவர். எதிர்த்தரப்பில் மணிகண்டனிடம் பேசினோம். “போனில் பேச முடியாது. நேரில் வாருங்கள், இடத்தை காட்டி விளக்கமாக சொல்கிறேன்.” என்கிறார், அவர். ஏழு பேர்களுள் ஒருவரான பாஸ்கர் என்பவரிடம் பேச முயற்சித்தோம். இரு முறையும் நமது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி அவர்களை தொடர்பு கொண்டோம். “இராமநாதபுரம் பந்தோபஸ்து பணியில் இருப்பதால் பிறகு பேசுவதாக” சொன்னவர், அதன்பிறகு பேசவேயில்லை.

நீதிபதியாக அவதாரம் எடுத்த இன்ஸ்பெக்டர் 

”அறுவாளை எடுத்து வெட்டியவர்கள் மேல் மட்டுமின்றி அவர்களால் வெட்டுப்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஒரே விவகாரத்தில் ஒரே சட்டப்பிரிவுகளின் கீழ் 449/2023, 450/2023 என அடுத்தடுத்து எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டிருப்பது; ஏழு பேரை காட்டினா கேஸ் நிற்காது, 3 பேர மட்டும் காட்டினாதான் கேஸ் நிக்கும்னு பேரம் பேசியது; வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டு போதுமான ஆதாரங்கள் இருந்தும் 307 கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், கண்ணை நோண்டி எடுத்திருக்க வேண்டும், கையை வெட்டி எடுத்திருக்க வேண்டும் என டி.எஸ்.பி. வகுப்பு எடுத்திருப்பது; கோர்ட்ல கேசு போட்டு பத்துவருசம் இழுத்தடிக்கலானு பார்க்கிறியா? ஒழுங்க இடத்த அளக்கவிடுனு சொன்னதோட, மூலப்பத்திரங்களை வரிக்கு வரி படித்துக்காட்டி உரிமையியல் நீதிபதியாக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அவதாரம் எடுத்தது என எல்லாமே வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது” என்கிறார், உடன் வந்திருந்த முருகதாஸின் உறவினர் ஒருவர்.

முருகதாஸ்....
முருகதாஸ்….

”பொன்முச்சந்தியில் மூன்று சாலைகளும் ஒன்று சேரும் இடத்தில் கார்னர் இடமாக எங்களுக்கு 10 சென்ட் இடம் இருக்கிறது. எங்களது இடத்திற்கு அப்படியே பின்பக்கம் உள்ள 5 ஏக்கர் அளவில் காலி மணை இருக்கிறது. அந்த இடத்திற்கு இடைஞ்சலாக எங்களுடைய 10 சென்ட் இடம் அமைந்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இந்த 10 சென்ட் இடத்தையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டால், அவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்க முடியும்.  இதற்காக, அந்த இடத்திலிருந்து எங்களை வெளியேற்ற பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

இரண்டரை வருடங்களாக குடிநீர் இணைப்புக்கூட வழங்காமல் சாமர்த்தியம் செய்தார்கள். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் குடிநீர் இணைப்பும், வீட்டுவரி ரசீதும் வாங்கியிருக்கிறோம். தற்போது, சீகம்பட்டியில் ஆரம்பித்துவிட்டார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸை மையமாக வைத்துதான் இந்த இரண்டு இடங்களிலுமே எங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.” என்கிறார் முருகதாஸ்.

முருகதாஸ் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் தொடர் நெருக்கடி கொடுப்பதற்கு பின்னால், முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நெருக்கமான குவாரி அதிபரின் பெயரை சொல்லிக்கொண்டு வழக்கறிஞர் ஒருவரின் தலையீடு இருந்து வருவதாகவும் அவரது தூண்டுதல் காரணமாகத்தான், உள்ளூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையும் அதிகாரிகளையும் வைத்து விளையாடுகிறார்கள் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.

– ஆதிரன்.

2 Comments
  1. teilzeitbeschäftigungen says

    Ⅿy relatives always say that I am ѡasting my
    time here at net, but I know I am gettіng familiarity all the time by reading
    thes good articles.

    Тake a look at my ԝeb site; teilzeitbeschäftigungen

  2. Raj says

    Fake news

Leave A Reply

Your email address will not be published.