மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில் அள்ளி சுருட்டிய பாஜக மகளிர் அணி தலைவி !

0

குஜராத்திலிருந்து தரமான டைல்ஸ் உற்பத்தி விலைக்கே வாங்கித்தருவதாகக்கூறி ஏமாற்றிவிட்டார் என்று திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட பாஜக மகளிரணியின் தலைவியும் ரிஷிஓம் டைல்ஸ் கடை உரிமையாளருமான ரேகா என்பவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

பிஜேபி மகளிர் அணி தலைவி ரேகா
பிஜேபி மகளிர் அணி தலைவி ரேகா
2 dhanalakshmi joseph

கண்ணன் மட்டுமல்ல; அவரைப்போலவே திருச்சி நகரில் தொழிலதிபர்கள் பலரிடம் இதே பாணியில் கைவரிசைய காட்டியிருக்கிறார் ரேகா. குறிப்பாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே, மோசடி தொடர்பாக ரேகாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தும் பாஜக பிரமுகர் என்ற கவசத்தை பயன்படுத்தி மேல் நடவடிக்கையிலிருந்து தப்பியும் வந்திருக்கிறார். தற்போது, பாதிக்கப்பட்ட கண்ணன் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரிடம் நேரடியாகவே சென்று முறையிட்டதையடுத்தே, இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எஸ்.பி. வருண் குமார்
எஸ்.பி. வருண் குமார்
- Advertisement -

- Advertisement -

”கடந்த 2022 அக்டோபர் மாதம் இரண்டு தவணைகளில் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் கொடுத்திருந்தேன். இவரது கணவர் கார்த்திக்கேயன் பிசினஸை கவனித்து வந்த காலத்தில் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அந்த பழக்கத்தின் அடிப்படையிலிருந்துதான் ஆர்டர் கொடுத்திருந்தோம். வியாபாரத்தில் நட்டமாகிவிட்டது, இல்லை உங்களிடம் அட்வான்சாக வாங்கிய பணம் வேறு வகையில் செலவாகிவிட்டது. பணத்தை எப்படியாவது திருப்பித் தந்துவிடுகிறேன் என்று நாணயமாக சொல்லியிருந்தால்கூட பிரச்சினை இல்லை. நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்.

பிஜேபி ரேகா - டைல்ஸ் கடை
பிஜேபி ரேகா – டைல்ஸ் கடை

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை சொல்வார். குஜராத்திலிருந்து கப்பலில் வந்து கொண்டிருக்கிறது என்பார். பின்னர், தூத்துக்குடி யார்டில் இருக்கிறது. சில பார்மாலிட்டிஸ்-க்காக வெயிட் பன்றோம் என்பார். அப்புறம் உங்களுக்கு லாரியிலேயே அனுப்பி வைக்க சொல்லிவிட்டேன். கண்டெயினரில் வந்து கொண்டிருக்கிறது என்பார். இன்று, நாளைனு இப்படியே மூன்று மாதத்திற்கும் மேலாக இழுத்தடித்துவிட்டார்.

இன்று வந்துவிடும் நாளை வந்துவிடும் என்று இவர் சொன்ன காரணங்களை நம்பி சிமெண்டையும் மணலையும் இறக்கி வைத்துவிட்டேன். 400 மூட்டை சிமெண்ட் வீணாகிப்போனதுதான் மிச்சம். 15 நாட்களுக்குள் கட்டிட பணியை முடித்து ஒரு நிறுவனத்திடம் வாடகைக்கு விட பேசி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இவரால் ஏற்பட்ட தாமதத்தால் அதுவும் போச்சு. வணிக வளாகம் மொத்தத்தையும் ஒரே நபரிடம் ஒப்படைப்பதற்காக போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ரத்தானதால், இப்போது ஒவ்வொரு கடைக்கும் வாடகைக்கு ஆட்களை தேடி வருகிறேன். இவரால் எனக்கு வர வேண்டிய வாடகை வருவாயும் போச்சு. வாங்கிய கடனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடனையும் கட்டுவதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கும் என்னை தள்ளிவிட்டார்.” என புலம்புகிறார், தொழிலதிபர் கண்ணன்.

மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன்
மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன்

மேலும், “ஒரு கட்டத்துல எனக்கு டைல்ஸே வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டேன். செக் எழுதி தருகிறேன் என்றார். அதுவும் அவர் சொல்லும் தேதியில்தான் கொடுத்தார். எப்படியாவது பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அதற்கும் சம்மதித்தேன். ஆனால், அந்த செக்குகளும் பவுன்ஸ் ஆகிவிட்டன. திரும்பக் கேட்டதற்கு மீண்டும் ஒரு செக் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோதுதான் தெரிந்தது, எனக்கு செக்கை கொடுத்த கையோடு, அந்த செக்கிற்கு ஸ்டாப் பேமெண்ட் கொடுத்திருக்கிறார் என்பது. ஒருகட்டத்தில் வெறுத்து போய்தான் போலீசில் கம்ப்ளையிண்ட் கொடுத்தேன். அங்கேயும் இதே கதைதான். இதோ, அதோ என கடந்த ஒரு வருடங்களை ஓட்டிவிட்டார்.

தொழில் அதிபர் சுப்ரமணியன் புகார்..
தொழில் அதிபர் சுப்ரமணியன் புகார்..

இதற்கிடையில், வீட்டை விற்று தருகிறேன் என்றவர், வீட்டை விற்றும்கூட கொடுக்கவில்லை. பாஜகவில் மகளிரணி தலைவியாக இருக்கிறார் என்பதால் போலீசாரும் என் புகார் மீது எஃப்.ஐ.ஆர். போடவில்லை. பேசி பணத்தை வாங்க முயற்சி செய்யுங்கள் என்றார்கள். ஒரு கட்டத்தில், அவருக்கு தெரிந்த போலீசு உயர் அதிகாரிகளின் தலையீட்டில் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதவாறு செய்துவிட்டார். இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் சாரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தேன். அவரிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கினேன். அவர் தலையிட்ட பிறகுதான் இந்த நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள்.” என நீண்ட போராட்டத்தை விவரிக்கிறார், கண்ணன்.

வருடக் கணக்கில் வாடகைப் பாக்கி காரணமாக நடத்துற கடையும் கோர்ட் கேசில்தான் இருக்கிறது என்றார்கள். கட்டிட உரிமையாளர் ரவியிடம் பேசினோம். “2019 இல இருந்து இந்த இடத்துலதான் வாடகைக்கு இருக்காங்க. கொரோனா காலத்துல இருந்து வாடகை பிரச்சினை ஆச்சு. கிட்டத்தட்ட இரண்டரை வருசமா அவங்க வாடகை தரலை. வாடகை பாக்கியே எப்படியும் எட்டு இலட்சத்திற்கு மேல் வரும். கேட்டு ஓய்ஞ்சிட்டோம். இப்போது, வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.” என்கிறார், கட்டிடத்தின் உரிமையாளர் ரவி. திருச்சி மாநகர் லிமிட்டில் உறையூர் ஸ்டேஷனிலும் இவருக்கு எதிராக ஒரு புகார் பதிவாகியிருக்கிறது என்பதாக கிடைத்த தகவலையடுத்து, அண்ணாமலைநகரை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணியனை அங்குசம் சார்பில் சந்தித்தோம்.

தொழிலதிபர் சுப்ரமணியன்
தொழிலதிபர் சுப்ரமணியன்

“திருச்சியில BNI -னு பிசினஸ்மேன்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போதுதான், பிசினஸ்மேன் என்ற வகையில் ரேகாவின் அறிமுகம் கிடைத்தது. அந்தக் கூட்டத்திலேயே, பிரதமர் மோடியுடன் ஹாட்லைனில் பேசும் அளவுக்கு பாஜகவில் செல்வாக்கானவர் ரேகா என்று பேசினார்கள்.

4 bismi svs

அந்த பழக்கத்திலிருந்து, கட்டுமான தேவைக்கு டைல்ஸ் சப்ளை செய்வதாக பிசினஸ் பேசினார். அவரை நம்பி, 2022-ஆம் ஆண்டு மே – மாதம் 29 ஆம் தேதி அன்று 1,65,000 கொடுத்தேன். சொன்னபடி சொன்ன நேரத்துக்கு டைல்ஸ் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தோடு போனால்கூட பரவாயில்லை. இவரை நம்பி உரிய காலத்திற்குள் கட்டுமானப் பணியை முடிக்க முடியாமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாகிவிட்டோம். உங்களுக்காகத்தான் ராஜஸ்தான் போகிறேன். நானே லாரியில் ஏற்றி வைத்துவிட்டுத்தான் வருவேன் என்றார்.

உறையூர் போலீசில் பிஜேபி - ரேகா எழுதி கொடுத்த கடிதம்
உறையூர் போலீசில் பிஜேபி – ரேகா எழுதி கொடுத்த கடிதம்

ஒரு முறை, நாளை டெலிவரி. காலையில் உங்களது சைட்டில் டைல்ஸ் இருக்கும் என்றார். அவர் பேச்சை நம்பி அத்தனை ஆட்களையும் வரவழைத்துவிட்டோம். திடீரென்று போன் செய்து அச்சச்சோ நீங்கள் 2*2 சைசில் கேட்டீர்கள். அவர்கள் 1*1 சைசில் அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் கிரே கலர் டைல்ஸ்தான் லோடு வந்திருக்கிறது, என்றார். அடுத்தமுறை, டைல்ஸ் ஏற்றி வந்த லாரி வரும் வழியில் கவிழ்ந்துவிட்டது என்றார். இப்படியே, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியே எங்களை அலைக்கழித்துவிட்டார். டைல்ஸ் வேண்டாம், பணத்தை திருப்பிக்கொடுங்கள் என்றதற்கு அதெப்படி உங்களை நம்பி நான் ஆர்டர் செய்துவிட்டேன் என்றார். சரி, நான் அடுத்த பிராஜெக்டுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன் அந்த டைல்ஸை இறக்கிவிடுங்கள் என்றோம். எதுவும் நடக்கவில்லை.

இந்த பிரச்சினையை 2023- ஜூன் மாசம் கமிஷனரிடம் நேரடியாகவே புகார் செய்தேன். உறையூர் கிரைம் போலீசுக்கு என் புகாரை அனுப்பி வைத்தார்கள். 40,000 கொடுத்தவர். மீதப் பணத்தை ஒரு மாதத்திற்குள் தருவதாக எழுதி கொடுத்துவிட்டு போனார். ஒரு மாதம் கழித்து கேட்டதற்கு, போலீசு ஸ்டேஷனுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லிவிட்டார். மேல் நடவடிக்கை எடுக்க கோரி அதன்பிறகும் இரண்டு மூன்று முறை ஏ.சி., டி.சி., வரை பார்த்தோம். இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட போடவில்லை. ஜெயிலில் அடைப்பதால் எந்த பிரயோசனும் இல்லை. குறைந்தபட்சம், எஃப்.ஐ.ஆர் போட்டுவிடுவார்கள் விவகாரம் பெரிதாகிவிடும் என்ற பயத்தை ஏற்படுத்தியிருந்தாலே பணத்தை இந்நேரம் செட்டில் செய்திருப்பார். அவருக்கு நெருக்கடி கொடுத்து பணத்தை பெற்றுத் தருவதற்கு பதிலாக, உங்கள் தகுதிக்கு இந்த பணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. முடிந்தவரை வாங்கி விட்டு செல்லுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அது எப்படி விட்டு செல்ல முடியும், சொல்லுங்கள்?” என்கிறார், தொழிலதிபர் சுப்ரமணியன்.

கங்காதரன்
கங்காதரன்

”பிஜேபி கட்சியில இருக்காங்க. நடவடிக்கை எடுத்தா பிரச்சினை ஆகும்னு போலீசார் யோசிக்கிறாங்க. எங்ககிட்டயும் பிஜேபி சார்பாக பேசினாங்க. கம்ப்ளெயிண்ட்லாம் போகாதீங்க. பேசி பணத்தை வாங்கித்தாரோம் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. ரேகாவை பிடிக்கவே முடியாது. உள்ளூரில் இருந்துகொண்டே டெல்லியில் இருக்கிறேன் என்பார். இந்த ஓராண்டு காலத்தில் அவரது டைல்ஸ் கடைக்கும், போலீசு ஸ்டேசனுக்கும் அலைந்தே ஓய்ந்துவிட்டோம்.

ஒருமுறை பாஜக சார்பில் மறியல் போராட்டம் நடத்தி கைதான போது, கையைப் பிடித்து இழுத்துவிட்டார் என்று ஏ.சி. மேலேயே புகார் கொடுத்துவிட்டார். ரொம்ப பன்னினா, உங்க மேலேயும் அந்த மாதிரி கம்ப்ளையிண்ட் கொடுத்திருவேன்னு என்கிட்டயே ரேகா சொல்லியிருக்கிறார். இன்னைக்குகூட உறையூர் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டுதான் வந்தேன். திருவெறும்பூர் போலீசார் கொடுத்த புகாரில் கைது செய்திருக்கிறார்கள். நீங்கள் எஃப்.ஐ.ஆர்.ஆவது போடுங்கள் என்றும் கேட்டேன். திருவெறும்பூரிலேயே போய் கேளுங்கள் என்கிறார்கள் அலட்சியமாக…” என்கிறார், தொழிலதிபர் சுப்ரமணியனிடம் மேனேஜராக பணியாற்றும் கங்காதரன்.

பிஜேபி - மகளிர் அணி தலைவி ரேகா
பிஜேபி – மகளிர் அணி தலைவி ரேகா

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொடுத்த கம்ப்ளையிண்டுக்கு இதுநாள் வரையில் எஃப்.ஐ.ஆர். கூட போடவில்லை என்பதான குற்றச்சாட்டு குறித்து கருத்தறிய உறையூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மோகனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “அவர்கள் புகார் கொடுத்தார்கள். ரேகாவை அழைத்து விசாரித்தோம். 40,000 பணம் கொடுத்துவிட்டு, அவகாசம் வாங்கிவிட்டு சென்றார். புகார்தாரர் ஒத்துக்கொண்டதால்தான் அனுமதித்தோம். புகார் தாரரின் விருப்பம் மற்றும் மேலதிகாரிகளின் உரிய அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அடுத்து, நான் தற்போது பணி மாறுதலில் வேறு மாவட்டத்திற்கு வந்துவிட்டேன்.” என்கிறார், அவர்.

திருச்சி பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகர்
திருச்சி பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகர்

”புகார் கொடுத்த‌‌ கண்ணனும் பிஜேபிய‌ சேர்ந்தவர் தான். அவரது சகோதரர் பிஜேபில முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ரேகா பிஜேபி கட்சியில சேர்ந்து இரண்டு வருஷம்தான் ஆகுது. ரோட்டரி கிளப்ல பெரிய ஆள் மாதிரி காட்டிப்பாங்க. கட்சி பேரு கெட்டுப் போயிரும்னு கட்சி காரங்களும் குறிப்பிட்ட அளவுக்கு தலையிட்டு பிரச்சனை முடிக்க முயற்சி பண்ணினாங்க.. விசயம் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வரைக்கும் தெரியும். ஆனா, அவங்க சொன்ன மாதிரியும் நடந்துக்கல. அவங்களும் இப்போ கைவிட்டுட்டாங்க.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர்.

இதுகுறித்து கருத்தறிய, பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரனை தொடர்புகொண்டபோது, “எதுவாக இருந்தாலும் நேரில் வாருங்கள் பேசிக் கொள்ளலாம்.” என்பதாக பதிலளிக்கிறார், அவர். திருவெறும்பூர் கண்ணன், அண்ணாமலைநகர் சுப்ரமணியன் ஆகியோர் போலீசில் புகார் கொடுத்து ஓராண்டு ஆகியும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் பணம் வராத நிலையில்தான் இந்த கைது நடவடிக்கையின் வழியே இந்த விவகாரம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

பிஜேபி - மகளிர் அணி தலைவி ரேகா (2)
பிஜேபி – மகளிர் அணி தலைவி ரேகா (2)

“ரேகாவோட அப்பா வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சேலத்தை சேர்ந்த கார்த்திக்கேயனுக்கு கட்டி கொடுத்தார்கள். இப்போது, அவருடனும் வாழாமல் கட்சியில் சேர்ந்து கொண்டு இதுபோல செய்துவிட்டார். அவரது அப்பா நொடிச்சி போயிட்டார். நுனி நாக்கில இங்கிலீஸ் பேசுவாங்க. நல்ல திறமையான பெண்மணி தான். ரோட்டரி கிளப் மூலம் திருச்சியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது போல கட்சி அறிமுகத்தை வச்சி நிறைய பேருகிட்ட தனக்கு  கட்சியில் மேலிடம் வரை பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறது என்று  கடன் வாங்கிட்டாங்க. தொழில் நட்டம்னு சொல்ல முடியாது. சொகுசா, ஆடம்பரமா வாழ்ந்து கெட்டுட்டாங்கனுதான் சொல்ல முடியும்.” என வருத்தப்படுகிறார், ரேகாவைப் பற்றி தெரிந்த நண்பர் ஒருவர்.

”எனக்குத் தெரிஞ்சி திருச்சி தொழிலதிபர் ஒருவரிடம் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்காங்க.” அதுவும் இன்னும் பைசல் ஆகவில்லை. அது எப்போது வெடிக்கும் என்று தெரியவில்லை என்பதாக கொளுத்திப் போடுகிறார், இன்னொருவர்.
ஓராண்டுக்கு முன்பாகவே, இந்த விவகாரங்கள் அனைத்தும் தெரிந்தும் ரேகாவை பாஜக கட்சியினர் அரவணைத்து சென்றது ஏன்? என்பதும்; எஃப்.ஐ.ஆர்.கூட போடாமல் ஒன்றரை ஆண்டுகள் போலீசார் ஏன் அலட்சியம் காட்டினார்கள்? என்பதும் விடை காண முடியாத கேள்வியாக தொக்கி நிற்கிறது.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.