“சனாதனம்” என்ற சொல்லாட்சி!
சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் . “சனாதனம்”!
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157) எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ ( தொல். எச்ச.1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார். வடசொற்களைத் தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
“வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.” ( தொல். எச்ச.5)
அண்மையில் “சனாதனம்” என்ற “சொல்”; அதன் பொருள் மற்றும் அச்சொற்பொருள் சார்ந்த கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் பற்றி பொதுவெளியில் பரவலாக, பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
எனவே இச்சொல் தமிழ் இலக்கியப் பரப்பில் எப்போது / எங்கு / யாரால் பயன்படுத்தப்பட்டது என்ற தேடல் தேவைப்படுகிறது. இதில் நம்முடைய நோக்கம் இச்சொற்பயன்பாடு தமிழில் இருக்கிறதா? இருந்தால் எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் பதிவு செய்வதே ஆகும்.
இதற்காகத் தமிழ் இலக்கியப் பரப்பைப் பழந்தமிழ் இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவு செய்யலாம்.
இந்தத் தேடலில் நமக்கு உற்ற துணையாகப் பயன்படுவது கணிதப் பேராசிரியர் பா.பரமசிவம் மிகமுயன்று தொகுத்து இணையத்தில் அனைவரது பயன்பாட்டிற்குமாக வெளியிட்டுள்ள தொடரடைவுகள் என்பதை நன்றியுடன் பதிவு செய்வது நமது கடமையாகும்.
“சகரக் கிளவியும் அதனோரற்றே அஐஔ எனும் மூன்றலங் கடையே” என்று இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில் “சனாதனம்” என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான். இருந்தாலும் ” இல்லை” என்று பதிவிடும் முன்பு முறைப்படி தேடிப்பார்த்தேன். “இல்லை”.
சங்க இலக்கியம் எந்தவொரு தனிச் சமயத்தையும் தனியொரு கடவுளையும் முன்னிறுத்தவில்லை.எனினும் திணை சார்ந்த கடவுள்கள்; ஆண் – பெண் தெய்வங்கள்; நம்பிக்கை மரபுகளுக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுவதால் சனாதனம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகிறதா என்று தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது . அவ்வாறு தேடிப்பார்த்ததில் கிடைத்த விடை “இல்லை” என்பதுதான். (பரிபாடல் திருமுருகாற்றுப்படை யிலும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) சங்க இலக்கியங்களில் சகடம், சதுக்கம், சரணத்தர், சலதாரி, சனம், சங்கம், சக்கரம், சங்கு, சபை, சந்தனம், சமயத்தார் போன்ற சொற்கள் உள்ளன. ஆனால் சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.
அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அடிப்படையில் நீதி நூல்கள். சனாதனம் என்பது ஒரு ” தர்மம்” என்பதைக் கருத்தில் கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்களின் தொடரடைவுகளைத் தேடினேன்.இதில் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி போன்ற நூல்கள் அடங்கும். சனாதனம் என்ற சொல்லாடல் இந்நூல்கள் எவற்றிலும் இடம்பெறவில்லை. திருக்குறள் என்ற உலகப்பொதுமறை “இதன் சாரம்; அதன் சாரம்” என்று வதந்திகளைப் பரப்புவோர்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
“இரட்டைக் காப்பியங்கள்” என்று போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் பல்வேறு சமயக்கோட்பாடுகள் உள்ளன. ஆனால் சனாதனம் என்ற சொல் இடம் பெறவே இல்லை.
மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்களின் சமயக்கோட்பாடுகள் பற்றி கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்தச் சமயம். மணிமேகலை சந்தித்த அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி,வைசேடிகவாதி, பூதவாதி என்ற இந்தச் சமயக்கணக்கர்களில் யார் சனாதனவாதி என்பது தெரியவில்லை. ஏனெனில் சனாதனம் என்ற சொல்லாடலே மணிமேகலையில் இல்லை. சைவம், வைணவம், வேதம் ஆகியவை தனித்தனிக் கோட்பாடுகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
ஐம்பெரும் காப்பியங்களில் அடங்கிய ஏனைய காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லை . இந்த நூல்கள் சமணப் பௌத்தக் கருத்தியல்கள் சார்ந்தன.சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி ஆகிய இலக்கியங்கள் ஒருவகையில் வடபுலத் தொடர்பு உள்ளவையே ஆகும்!
“மூவா முதலா உலகம் ” என்ற கடவுள் வாழ்த்தோடு தொடங்கி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்; நன்றி மறவாமை போன்ற அறக்கருத்துகளையும் வலியுறுத்தும் சீவக சிந்தாமணியிலும் சனாதனம் இல்லை! வளையாபதி குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இல்லை!
கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் இருக்கக்கூடுமோ என்ற வினாவுடன் பாண்டியராஜாவின் தொடரடைவை துழாவினேன். வியப்பாகத்தான் இருக்கிறது இவை எவற்றிலுமே சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.
கம்பராமாயணத்தில் சலம், சனம், சழக்கு, சவரி, சழக்கியர் எல்லாம் இருக்கிறது. ஆனால் சனாதனமோ சனாதனியோ இல்லவே இல்லை. மூவர் தேவாரத்திலும் அதே கதை தான்.சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை. சைவக் குரவர்களாகிய நாயன்மார்கள் பற்றிய சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் சதுக்கம், சதுர், சதயம், சந்தனம், சந்திரன், சபை, சமயம், சரணம் என்று வடமொழி சார்ந்த சகர முதலான ஏராளமான சொற்கள் உள்ளன; ஆனால் சனாதனம் இல்லை.
இந்தியத் துணைக் கண்டத்தின் மிகமுக்கியமான வைணவ இலக்கியத். தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சமணம், சமயம், சரணம், சன்மம் என்பது போன்ற பல சொற்கள் இருந்தாலும் சனாதனம் இல்லை.
ஐஞ்சிறுங்காப்பியங்களிலும் சனாதனம் இல்லை.பெருங்கதையிலும் இல்லை. வில்லிபாரதத்தில் சன்பதம் இருக்கிறது ஆனால் சனாதனம் இல்லை.
சன்மார்க்கம், சற்குரு, சமரசம் போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறும் திருவருட்பாவிலும் சனாதனம் இல்லை. தாயுமானவர் பாடல்களிலும் இல்லை. கலிங்கத்துப்பரணியில் “சலுக்குமுலுக்கு” என்ற சொல்லாட்சி கூட இருக்கிறது; ஆனால் சனாதனம் இல்லை.
நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, அபிராமி அந்தாதி, மதுரைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எவற்றிலும் சனாதனம் இல்லை.
சதுர்வேதம், சந்திரமவுலி, சர்க்கார், சக்கரம், சக்தி, சங்கரன், சங்கராசார்யன் என்று எத்தனையோ அயற்சொல்லாட்சிகளை கையாளும் மகாகவி பாரதியாரும் தனது கவிதைகளில் சனாதனம் என்ற பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.
இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப்பரப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத சொல் சனாதனம்.
மேலும் கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி யில் தேடிப் பார்த்தேன். அதிலும் சனாதன/ சநாதன/ ஸனாதன போன்ற சொற்பயன்பாடு எதனையும் காண இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்காலத் தமிழ் உரைநடைகளில், புதினங்களில், ஏனைய புனைவு இலக்கியங்களில், திறனாய்வுகளில் சனாதனம் என்ற சொல் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது; சனாதனம் சார்ந்த கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்கள் எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனது “பாதையில் பதிந்த அடிகள்” பாகம் 1 (அத்தியாயம் 1-16) நூலின் முன்னுரையில் சனாதனம் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்தைப் பதிவிட்டு முடிக்கிறேன்.
“ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் கூட மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புக்களை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களே தாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை.”
“பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் சனாதனச் சமயக் கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை மீறுவதற்கே போராளியாக மாறவேண்டி இருக்கிறது.”
சனாதனம் என்ற கருத்தியலின் உள்ளடக்கம் அதன் சமூகப் பொருளாதார அரசியல் பரிமாணங்கள் பற்றியதாகும்.
சிந்து வெளி ஆய்வாளர்
R. பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்
(முகநூலில்)