சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்..  புலவர் விடுக்கும்திறந்த மடல்

0

சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்..  புலவர் விடுக்கும்திறந்த மடல்

புலவர் க.முருகேசன் சாதி, மதச் சிந்தனைகளை வேரறுக்க வேண்டும் என்று இளமைக்காலம் தொடங்கி இன்று வரை சிந்தித்து வருபவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இவர்களின் கருத்தியல் முறைமைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். எல்லாரும் ஒரு குலம், அது தமிழ்க் குலம் என்று வாழவேண்டும் என்பதற்காக அரசியல் அரங்கிலும் சமூக அரங்கிலும் 70 ஆண்டு காலத்திற்கு மேல் பேசியும் எழுதியும் பணியாற்றி வருகிறார்.

-ஆசிரியர்

அன்பிற்குரிய பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு, வணக்கம்.
1987ஆம் ஆண்டுகளில் வன்னியச் சமுதாயத்தினர் தமிழக அரசின் இடஒதுக்கீடு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தனர். இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தனர். அந்தக் காலகட்டத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மருத்துவர் இராமதாசு ஆகிய தாங்கள் ஊர், ஊராகச் சென்று வன்னியர் மக்களின் வாழ்வாதாரத்தை எடுத்துக்கூறி, வன்னியச் சமுதாய மக்களை ஒன்றிணைத்துப் போராட்டத்தை வழிநடத்திச் சென்றீர்கள். 7 நாள்கள் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 21 வன்னியர் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தனர்.

1989இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றக் கலைஞர் வன்னியர்களையும் பிற பின்தங்கிய சமூகங்களையும் இணைத்து ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (விஙிசி)’ என்பதை உருவாக்கினார். அரசியல் களத்தில் கிடைத்த வெற்றி 1990களில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்க வைத்தது.
ஏறத்தாழ 30 ஆண்டு காலத்திற்கும் மேலான அரசியலில் தமிழினத்தின் பெயரால் தாங்கள் சாதி அரசியல் செய்தீர்கள் என்ற அவப்பெயரே உள்ளது. தமிழகத்தின் மக்கள் தொகையில் தாங்கள்தான் பெரிய சாதி. அதனால் 2026ஆம் ஆண்டில் தமிழகத்தை ஆளுவோம் என்ற அறைகூவல்கள் உங்கள் கட்சியில் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை உங்கள் கட்சி ஆளுவதற்கேற்பத் தாங்கள் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தத் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.

- Advertisement -

- Advertisement -

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆரம்பம் அழகானதுதான். கட்சி மேடைகளில் தந்தை பெரியார், காரல்மார்க்ஸ் படங்கள் இருந்தன. ‘தினப்புரட்சி’ என்ற நாளிதழ் மூலம் தமிழகத்தின் சிறந்த சிந்தனைகளை எழுத வைத்துத் தமிழ் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மைதான். பின்னர்த் தனித்தமிழ் சிந்தனையோடு ‘தமிழ் ஓசை’ என்னும் நாளிதழ் வழியாகத் தமிழர்களிடம் மறைந்து போன தமிழ் உணர்வை மீட்டெடுத்தீர்கள். ‘மக்கள் தொலைக்காட்சியின் மூலம் சினிமா, பாடல், நகைச்சுவை என்று மலிவான சிந்தனைகளைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான கருத்துகளை வெளியிட்டமை பாராட்டுக்குரியது.

சமூகநீதியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான தாங்கள் திருமாவளவன் அவர்களுடன் இணைந்து இருவரும் சமூகத் தளத்தில் செயல்பட்டு வன்னியர், பறையர் சமூக மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள். ஒரு தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை ஊருக்குள் கொண்டுவர விதிக்கப் பட்ட தடையை மீறி இராமதாசு தன் தோளில் சுமந்து சென்றார் என்ற காரணத்தால் ‘தமிழ்க்குடி தாங்கி’ என்ற பட்டத்தைத் திருமாவளவன் உங்களுக்கு வழங்கினார். தமிழ் மக்களும் உங்களை அப்படித் தான் அழைத்தார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் சிந்தனை ஏன் காலப்போக்கில் மாறிப்போயிற்று என்பதில், உங்களிடம் சாதி பெருமை பெரும்பங்கு வகித்தது என்பதை மறக்க முடியவில்லை.

4 bismi svs

1991 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் யானை சின்னத்தில் பண்ருட்டி இராமச்சந்திரன் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுக் கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்தீர்கள். திமுக, அதிமுக இரு கட்சிகளையும் குறை சொல்லிப் பேசிவிட்டு, கூட்டணி அமைத்துக் கொள்வதை ஊடகங்கள் கேலி செய்ததைத் தாங்கள் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் அரசியல் பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தீர்கள். நாடாளுமன்ற மக்களவையில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தீர்கள். உங்களின் புகழ் அரசியல் களத்தின் உச்சத்தில் இருந்தபோது ‘வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை’ என்ற முழக்கத்தை முன்வைத்துத் தேர்தல் அரசியலில் தனித்து நின்று தோல்வியைப் பெற்றீர்கள். காரணம், வன்னியர் அல்லாத மக்கள் அனைவரும் ‘அந்நியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை’ என்று எடுத்த முடிவுதான்.

அரசியல் களத்தில் சாதியை வைத்து வெற்றி பெறலாம் என்பதற்கும் வெற்றிபெற முடியாது என்ற இரண்டுக்கும் சான்றாக நீங்கள் விளங்கியது அரசியல் விநோதம் என்றுதான் சொல்லவேண்டும். 1951ல் வன்னியக் குலச்சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி, வன்னியருக்காக ஒரு மாநிலம் தழுவிய கட்சியினை உருவாக்க முயன் றது. தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கினர். 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) ஆதரவுடன் போட்டியிட்டது. திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந் தத்தில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவளித்தது. ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளர் கள் மக்கள வைக்கான தேர்தலில் 4 இடங்களில் வென்றனர்.

1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி படையாச்சி அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954இல் அவர் தன் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி படையாச்சி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி படையாச்சி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்துவிட்டார் என்ற வரலாற்றை தாங்கள் அறிந்திருந்தால். சாதி என்பது உணவோடு தொட்டுக் கொள்ளக்கூடிய ஊறுகாய்தானே தவிர, உணவே ஊறுகாய் அல்ல என்பதைப் புரிந்து அரசியல் செய்திருப்பார் என்பது என் எண்ணம். மறைந்து போன உழைப்பாளர் கட்சியைத்தான் தாங்கள் பட்டாளி என்ற பெயரில் புதுப்பித்துள்ளீர்கள் என்பதையும் மக்கள் அறிவர். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என உருவாக்கும் வகையிலான சாதிவெறிக்கு இடைச் சாதியினரை இணைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியபோது தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டனர்.

தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்+டி சர்ட்+கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்துகொண்டு வன்னியப் பெண்களோடு நாடகக் காதல் கொள்கிறார்கள் என்று ஏளனம் செய்து இளைஞர்களுக்குச் சாதி வெறியைப் போதையாக உங்களால் ஊட்டப்பட்டது. சாதி மறுத்து திருமணம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இதற்குப் பாமக வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தது என்பதில் சமூக நலன் எங்கே இருக்கின்றது?
பாமகவின் கூட்டம், ஊர்வலம் என்றால் அங்கே கலவரம் வெடிக்கின்றது. துப்பாக்கிச் சூடு நடைபெறுகின்றது. உயிர்கள் பலிகொள்ளப் படுகின்றன. பல இளைஞர்கள் சிறை தண்டனை பெற்று வாழ்வைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். இந்த வழிகளைத்தான் அரசியல் களத்தில் பாமக முன்னெடுக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதும் மாநில அரசைக் குறைகூறிக் கொண்டு, மாநில உரிமைகளை நசுக்கும் மதவாதப் பாஜகவோடு பாமக தொடர்ந்து உறவில் இருந்துவருவதன் மூலம் அரசியலில் சந்தர்ப்பவாதத்தைத் தாங்கள் கடைப்பிடிப்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

இறுதியாக, 2026இல் பெரும்பான்மை சாதியாக உள்ள வன்னியர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முழக்கம் பாமகவால் முன்வைக்கப்படுகின்றது. உங்கள் மகன் அன்புமணி தற்போது பாமகவின் தலைவர் பொறுப்பு ஏற்றுள்ளார். சாதியப் பெரும்பான்மை வாதத்தால் உங்கள் கட்சி தோற்றுப் போகும் நிலைதான் ஏற்படும் என்பதை உணரவேண்டும். பெருந்தலைவர் காமராசர் ஆட்சி நாடார்களின் ஆட்சியாக அமையவில்லை. அண்ணாவின் ஆட்சி முதலியார்களின் ஆட்சியாக மலரவில்லை. கலைஞரின் ஆட்சி இசை வேளாளர்களின் ஆட்சியாக மாறவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளும்கூட ஓட்டு மொத்தத் தமிழர்களுக்கு நலம் பயக்கும் ஆட்சியாகத்தான் நடைபெற்றன.

தனித்தமிழ்நாட்டை முன்வைத்துப் போராளியாக வாழ்ந்த தமிழரசனை மரணத்தின் போதுதான் வன்னியர் என்றும் உழைக்கும் மக்களுக்காக நக்சல்பாரி வாழ்வின் பெரும்பகுதி சிறையிலே கழித்த பெண்ணாடம் கலியபெருமாள் உடல் அடக்கம் செய்யப்படும் போது தான் வன்னியர் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்பது வரலாறு. வன்னியர்கள் தமிழர்களாகவே அனைத்து உரிமைகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி சாதியை முன்னி றுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்தி ஆட்சிக்கு வரலாம். அப்படிப்பட்ட ஒரு கட்ட மைப்பைத் தாங்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

(அடுத்த மடலில் சந்திப்போம்)

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.