இனி எந்த சான்சும் இல்லை.. எல்லோருக்கும் நல்லவராய்..  ரஜினிக்கு அரசியல் சொல்லும் ரசிகர்கள்

0

இனி எந்த சான்சும் இல்லை.. எல்லோருக்கும் நல்லவராய்..  ரஜினிக்கு அரசியல் சொல்லும் ரசிகர்கள்

 

12.12.22

 

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

ரஜினி… என்ற மூன்றெழுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர். அபூர்வ ராகங்களில் சினிமாவுக்கு வந்து ஜெயிலர் வரை தனது 169 படங்களில் நடித்த அவர், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் நபராக சினிமாவில் விளங்கி வருகிறார். அவரது 72 வது பிறந்தநாள் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ரஜினியின் பிறந்தநாள் என்றாலே ரஜினி ரசிகர்களுக்கு திருவிழாதான். ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, ரத்த தானம் செய்வது, அன்னதானம் செய்வது என்று ஊரே அல்லோகலப்படும்.

கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். மிகப்பெரிய வாழ்த்து போஸ்டர்கள் நகர் முழுவது ஒட்டப்படும். அதிலும் குறிப்பாக அரசியல் தொடர்பாக ரஜினி கருத்து கூறிய பிறகு ரஜினி ரசிகர்களிடையே புதிய உற்சாகம் பிறந்தது. கடந்த 1996 ம் ஆண்டு நடந்த சினிமா விழாவில் பேசிய ரஜினி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று பேசி, அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டார். அவரது பேச்சை நம்பிய மக்களும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர்.

- Advertisement -

"எல்லோருக்கும் நல்லவராய்..என்று ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்
“எல்லோருக்கும் நல்லவராய்..என்று ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்

ஒரு ஆட்சி மாற்றத்துக்கே ரஜினியின் பேச்சு காரணமாக அமைந்தது என்ற நிலையில் அவர் அரசியல்வாதி இல்லை என்றாலும் அவரது ஆதரவுக்காக அரசியல் கட்சிகள் தவம் கிடந்தன. சினிமாவில் பல வேடங்களை ஏற்று நடித்த ரஜினியால் அரசியல்வாதியாக நடிக்க இயலாமல் போனது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் போர்க் கொடி தூக்கினர். அதன் விளைவாக ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

தலைமையின் பேச்சை கேட்காமலேயே உள்ளாட்சி தேர்தல்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். அது போன்ற சூழ்நிலையில் வெளியான பாபா திரைப்படம் பாட்டாளி மக்கள் கட்சியினரின் கடும் எதிர்ப்பால் ஊத்திக் கொண்டது. நடிகனாக இருப்பதால்தான் நமக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று நினைத்த ரஜினி, 2017ல் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று அதிரடித்தார். ரசிகர்களும் மன்றங்களை டெவலப் செய்ய தொடங்கினர். மாவட்ட நிர்வாகிகள் நியமனம் என்று பெயரில்லாத கட்சிக்கு ஆள் சேர்க்கும் படலம் தொடங்கியது.

ரஜினியும் கட்சி தொடங்குவார் நாமும் ஏதாவது ஒரு பதவிக்கு போட்டியிடலாம் என்று ஆர்வத்தோடு காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்ற நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள்.

4 bismi svs
ரஜினி நடித்த பாபா திரைப்படம் 20ஆண்டுகளுக்கு திரும்பவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
ரஜினி நடித்த பாபா திரைப்படம் 20ஆண்டுகளுக்கு திரும்பவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தவிர கட்சி தொடங்கிய எந்த நடிகரும் முன்னேறவில்லை. கட்சியால் எந்த பலனும் கிடைக்காது. சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்த தொகையை அரசியலில் கோட்டை விட வேண்டும் என்று பண கணக்கை போட்ட ரஜினி, 2021 ல் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். அரசியலே வேண்டாம் சாமி  என்று ஒரே போடு போட்டு விட்டு எஸ்கேப் ஆனார். சினிமா மோகத்தில் அவர் மீது காதல் கொண்டிருந்த ரசிகர்கள், ரஜினியால் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கவில்லை. பாட்ஷா படம் வெளியாகிய நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையில் ரஜினி மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அப்போதே மன்றங்களை கட்சியாக்கி இருந்தால் இந்நேரம் பெரிய அளவில் வளர்ந்திருக்’கலாம். ஆனால் சினிமா காசை வெளியில் எடுக்க பயந்து கொண்டு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார் என்று ரஜினி மீது குறை கூறிய ரசிகர்கள், திராவிட, தேசிய கட்சிகளில் ஐக்கியம் ஆனார்கள்.

ரஜினியும் இந்த வம்பெல்லாம் வேணாம் என்று ஜெயிலர் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் ரஜினி மீது உண்மையான அன்பு வைத்திருந்த அவரது ரசிகர்கள் என்றாவது ஒருநாள் அவர் அரசியலுக்கு வரமாட்டாரா என்ற ஏக்கத்தை பதிவு செய்து கொண்டேதான் வருகின்றனர். ஆனால் திருச்சி ரசிகர்களோ ஒரு படி மேலே போய், ரஜினியை எல்லோருக்கும் பொதுவானவராக மாற்றி, நாங்கள் யாருடைய சார்பும் இல்லை. எல்லோருக்கும் பொது. எங்கள் தலைவரும் பொது என்று பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ரஜினி பிறந்தநாள், புதுப்படம் ரிலீஸ் என்றால் ரஜினிக்கு வித்தியாசமான போஸ்டர்கள் அடிப்பதில் திருச்சி ரசிகர்களை மிஞ்சவே முடியாது. கடவுள் ரேஞ்சுக்கு போஸ்டர் அடித்து பெருமைபட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த பிறந்த நாளுக்கும் திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். வழக்கம் போல பிறப்பின் சிறப்பே, வள்ளலே, தமிழே, மன்னவா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டியுள்ள ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான போஸ்டர்களும் காணப்படுகின்றன.

ரஜினி நடித்த பாபா திரைப்படம் 20ஆண்டுகளுக்கு திரும்பவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
ரஜினி நடித்த பாபா திரைப்படம் 20ஆண்டுகளுக்கு திரும்பவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

மாநகரின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் புதிய போஸ்டர் ஒன்றில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தேசிய, மாநில கட்சிகள் என்று அனைத்து கட்சி கொடிகளையும் அந்த போஸ்டரில் பதிவு செய்து,அதில் எல்லோருக்கும் நல்லவராய்… என்று பதிவிட்டு, வாழ்த்துங்கள், வாழ்த்துவோம் என்று மட்டும் பதிவு செய்துள்ளனர்.அதில் ரஜினியின் சிம்பிள் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தற்போது இந்த போஸ்டர்கள் திருச்சியில் பேசு பொருளாக மாறியுள்ளன. அரசியலுக்கு வருகிறேன்..வருகிறேன் என்று அறிவித்து கடைசி வரை வரவேயில்லை. அரசியலில் இல்லாத போதே ஆளும் கட்சியினரோடு உரசல், பாமகவுடன் உரசல், பாஜகவுடன் ஊடல், மூப்பனாருடன் தோழமை, கருணாநிதியிடம் பாசம் என்று பண்முகத்தோடு ரஜினி இருந்தார். அதனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர், ஒவ்வொரு தலைவருக்கு வேண்டியவர் என்று கட்டம் கட்டப்பட்டார். ஆனால் இப்போதுதான் எதுவுமே இல்லை. அதனால் எங்கள் தலைவரும் எல்லோருக்கும் நல்லவரே..நாங்களும் எல்லோருக்கும் நல்லவராய்.. என்பதை ரஜினி ரசிகர்கள் மறைமுகமாக குறிப்பிடுகின்றனர் என்று பேசும் மக்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் ரஜினி வாய்ஸ் எதுவும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்..

 

ஏமாத்திட்டியே தலைவா..

 

-அரியலூர் சட்டநாதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.