சுடுகாட்டில் குப்பை கொட்டாதீர்கள் என்றோம் … சுடுகாட்டையே இடித்துத் தள்ளி குப்பை மேடாக்கி விட்டார்கள் !
சுடுகாட்டில் குப்பை கொட்டாதீர்கள் என்றோம் … சுடுகாட்டையே இடித்துத் தள்ளி குப்பைமேடாக்கி விட்டார்கள் !
“திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !” என்ற தலைப்பில், கடந்த மே-3 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், திருச்சி மாநகராட்சியைச் சேர்ந்த பீமநகர் – புதிய ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள முள்ளச்சி தோப்பு இடுகாட்டை திறந்தவெளி குப்பை மேடாக்கிய விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தோம். இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாட்டில், எச்சில் இலைகளையும் குப்பைக்கூளங்களையும் மாநகராட்சி நிர்வாகமே கொட்டலாமா? என கேள்வி எழுப்பியிருந்தோம்.
வருடக்கணக்கில் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தோம். மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இதனைத்தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட 53-வது வார்டு கவுன்சிலரான ஜெ.கலைச்செல்வி அவர்கள் தலையிட்டு, குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்திருந்தார். மேலும், சிதிலமடைந்த கல்லறைகளை மாநகராட்சி நிர்வாகமே சீர்செய்து தரவேண்டுமென்றும் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
சிதிலமடைந்த கல்லறைகளை சீர்செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த நிலையில், கல்லறை என்று ஒன்று இருந்தால்தானே சீர்செய்வதற்கு? கல்லறையே இல்லாத அளவுக்கு, இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் என்ன சொல்வீர்கள்? என்று நம்மை திருப்பிக் கேட்பது போன்றதொரு வேலையை செய்திருக்கிறார்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர்.
வார்டு கவுன்சிலர் ஜெ.கலைச்செல்வி அவர்களை தொடர்புகொண்டோம். ”அந்த இடத்தில் மீண்டும் குப்பை சேர்ந்துவிட்டது என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அதனடிப்படையில், மூன்று நாளுக்கு முன்பாகத்தான் குப்பைகளை அகற்றினோம். மற்றபடி கல்லறைகளை சேதப்படுத்தவில்லை. ஒருவேளை, தூய்மைப்பணியின்போது கல்லறை சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் அது தவறுதான். அதிகாரிகளிடம் பேசுகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார்.
”கல்லறை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது குப்பையைக் கொட்டி சேதப்படுத்தினார்கள். இப்போது, இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்குள் புகுந்து வெளி ஆட்கள் சேதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை, மாநகராட்சி ஆட்களைத் தவிர! சேதப்படுத்தப்பட்டிருக்கும் கல்லறையை மாநகராட்சி நிர்வாகம்தான் சீர்செய்து தரவேண்டும். முள்ளச்சி என்ற தனிநபருக்கு சொந்தமானதுதான் கல்லறை உள்ளிட்ட இந்த மொத்த இடமும். அவர் நினைவாகத்தான் முள்ளச்சிதோப்பு என்ற பெயரே வந்தது.
முள்ளச்சி, மாநகராட்சிக்கு தானமாக கொடுத்த இடம் இது. ஆனால், இன்றைக்கு முள்ளச்சி தோப்பை சேர்ந்தவர்கள் இறந்தால் புதைக்க நாலடி மண்கூட சொந்தமில்லை. இந்த அவலத்தை எங்கு போய் சொல்ல?” என கண்ணீர் வடிக்காத குறையாக பேசுகிறார், அப்பகுதியைச் சேர்ந்த வயதான பெரியவர் ஒருவர்.
”குறிப்பிட்ட பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் புதைப்பதற்கான இடமாக முள்ளச்சி தோப்பு இடுகாடு அமைந்திருக்கிறது என்பதால் என்னவோ, சாதிய ரீதியான அணுகுமுறையோடுதான், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது
நடு சுடுகாட்டில் லாரி லாரியாக குப்பையைக் கொட்டிவிட்டு, வழியில் சிந்திய குப்பைகள் என்று பச்சையாகப் புழுகி, மாநகராட்சியின் முத்திரையோடு பதிலும் கொடுப்பதை, அதிகாரத்திமிர் என்றழைக்காமல், வேறெப்படி விளிக்க முடியும்?” என்றும் முந்தைய பதிவில் கேள்வி எழுப்பியிருந்தோம்.
அப்போது, ”ஐயம் எழுகிறது” என்றோம். இப்போது, ”ஆமாம் அப்படித்தான்” என்று தங்களது நடவடிக்கைகளின் வாயிலாக சவால் விடுகிறதா, திருச்சி மாநகராட்சி நிர்வாகம்?
– இளங்கதிர்.
ஐயோ பரிதாபம் திராவிட மாடல் ஆட்சியில் சமூக அநீதியா யார் அந்த மாநகராட்சி அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய் அது போதும் பிரச்சினைக்கு தீர்வு சாரி நீ ஏதாவது செய்தால் சமூக நீதி கெட்டுவிடும்