மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல… புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள் 

0

மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல… புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள் 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் காலனி மற்றும் எம்ஜிஆர் காலனி இவற்றில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 5 வீதிகளாக உள்ள இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சென்று வர சரியான சாலை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலையானது கற்கள் பெயர்ந்து , கரடு முரடாகவும், எவ்வித போக்குவரத்துக்கும் , நடந்து செல்வதற்கு கூட ஏற்ற வகையில் இல்லாமல் உள்ளது. மழை மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் இப்பகுதி மக்கள் பழுதடைந்துள்ள சாலையினால் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் , சைக்கிளில் செல்லும் குழந்தைகள் அனைவரும் குண்டும், குழியுமான சாலையில் பயணிப்பதால் விபத்தில் சிக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது எனக் வருத்தத்துடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கலைஞர் காலனியில் ஒரு பகுதியிலும் , எம்ஜிஆர் காலனியில் ஒரு பகுதியிலும் ஒன்றியக் குழு உறுப்பினர் நிதி மூலமும், மற்ற பகுதிகளில் ஊராட்சி மூலமாகவும் சாலை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் உள்ள நிலையில் , ஒன்றியக் குழு உறுப்பினர் நிதி மூலம் சாலை அமைப்பதற்கு அப்பகுதியை அளந்தும் ,3 முறை கலைஞர் காலனியில் பூஜை போடப்பட்டு இதுநாள் வரை ரோடு போடப்படாமலேயே உள்ளது எனவும், இது பற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் மனு அளித்துள்ளதாகவும் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடத்தில் நேரில் சென்று மனு அளித்தும் பலனில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் .

ஒன்றியக் குழு உறுப்பினர், அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் கலைஞர் காலனியில் , பொதுமக்கள் முன்னிலையில் 3 முறை சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பூஜை போட்டும் , இதுநாள் வரை சாலை அமைத்து தரப்படவில்லை என்ன காரணம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் கடந்த 25 வருடங்களாக தங்கள் பகுதிக்கு பொது சுகாதார வளாகம் (கழிவறை) இல்லை எனவும், சமுதாயக் கூடம் , நெல் மற்றும் தானியங்கள் காய வைக்க சிமெண்ட் களம் அமைத்து தந்திட உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.