6 கோடி கேட்டு கடத்தப்பட்ட திருச்சி விஐபி மகன் ! அதிர்ச்சிக்குள்ளாக்கிய விசாரணை ரிப்போர்ட்…
6 கோடி கேட்டு கடத்தப்பட்ட திருச்சி விஐபி மகன் ! அதிர்ச்சிக்குள்ளாக்கிய விசாரணை ரிப்போர்ட்…
திருச்சியில் கடந்த 28/10/2020 அன்று கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் ரோட்டில் சைக்கிள் மிதித்து விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இதுதொடர்பாகக் கடத்திய கும்பல் சிறுவனின் குடும்பத்தாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து 6 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 28 10 2020 அன்று புகார் அளித்தனர்.
அதன்பேரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார் ஒரு கட்டத்தில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கண்காணித்து வாகனங்களைக் கண்டுபிடித்தனர். பின்னர் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாநகரக் காவல் நிலைய போலீசாருக்கு அலார்ட்மெண்ட் கொடுத்துச் செக்போஸ்ட் அனைத்திலும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் வயலூர் சாலையில் உள்ள செக் போஸ்ட் ஒன்றில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது சிறுவனைக் கடத்திய கார் போலீசார் சோதனையைப் பார்த்தவுடன் வாகனத்தைத் திருப்பிக்கொண்டு வந்த வழியே நோக்கி சென்றுள்ளது.
தூரத்தில் வாகனம் ஒன்று திரும்புவதைக் கண்ட போலீசார் வாகனத்தைப் பின் தொடர ஆரம்பித்தனர். இதில் போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்ம கும்பல் வயலூர் ராமலிங்க நகர் அருகே வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடியது அதன்பின் சிறுவனைப் பத்திரமாக மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாகப் போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க வலை விரித்த போது அவர்களுக்குக் கிடைத்த முதல் துப்பு…. குற்றவாளிகள் விட்டுச் சென்ற வாகனமே, அந்த வாகனத்தை வைத்து விசாரணையைத் துவங்கிய தனிப்படை போலீசார் சிறுவன் கடத்தப்பட்ட வாகனம் TN-30-L-1380 என்ற பொய்யான வாகன எண்ணினை கொண்டிருந்ததால் அதன் ஒரிஜினல் வாகன எண்ணினை வைத்து உரிமையாளர் பற்றி விசாரிக்க ஆரம்பித்த போது முத்தி என்பவரை வைத்து விசாரணை நடத்தியது.
அவரிடமிருந்து மாணிக்கப் பாண்டியன் வாகனத்தை நட்பு ரீதியாக வாங்கியது தெரிய வந்தது. பின்னர்க் கடத்தல் கும்பலில் தொடர்புடைய மாணிக்கப் பாண்டியன், சரவணன், செல்வகுமார், சதீஷ்குமார் ஆகியோரை 29/10/2020 அன்று போலீஸ் பிடித்து முதற்கட்டமாக வழக்குப் பதிந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் இது தொடர்பாகப் போலீசார் விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் – மாணிக்கப் பாண்டியன் கடந்த சில வருடங்களுக்கு முன் சிறுவனின் தந்தை பிரபல தொழிலதிபருமான கண்ணப்பன், பெயிண்டர் கடை வைத்திருக்கும் மாணிக்கப் பாண்டியனிடம் நிலம் விற்பது வாங்குவது குறித்த டீலிங் ஒன்று வைத்துள்ளார். அதில் மாணிக்கப் பாண்டியனுக்குச் சரியான கமிஷன் வழங்காததால் கமிஷன் பணத்தைத் திரும்பக் கண்ணப்பன் இடமிருந்து பெற இந்தக் கடத்தல் சம்பவம் நடந்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும் கடத்தலில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் கீழ கல்கண்டார் கோட்டை சேர்ந்த பிரகாஷ் தலைமறைவாக இருந்த நிலையில் 02/11/2020 அன்று கலெக்டர் ஆபீஸ் ரோடு T.B மருத்துவமனை அருகே சாலையில் நடந்து கொண்டிருந்த நபர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர்.
பின்னர்க் கருமண்டபம் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகித்து விதமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு ஓடியதால் போலீசார் பின்தொடர்ந்து வளைத்து பிடித்தனர்.
பின்னர் விசாரணை செய்ததில் சமீபகாலமாக மாநகரப் பகுதியில் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் தொடர்புடைய கிஷோர் பிரகாஷ் திருப்பதி ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் பிரகாஷ் திருப்பதி ஆகியோருக்கு சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும், பிரகாஷ் முக்கியத் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது அதன்பேரில் போலீசார் பிரகாஷ் மற்றும் திருப்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்..
மாநகரப் பகுதியில் முக்கியத் தொழிலதிபரின் மகன் கமிஷனுக்காகக் கடத்தப்பட்டான் என்ற தகவல் போலிசாருக்கே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
– ஜித்தன்