பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறையின் குழப்பமான முடிவால் சிக்கல் !
17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?
பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறையின் குழப்பமான முடிவால் சிக்கல் !
4 முதல் 9 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வுகள் குறித்து வெளியான அறிவிப்பில், வழக்கமான விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள உருதுபள்ளி மாணவர்களுக்கான தேர்வை மறுநாள் ஏப்ரல்-06 அன்றும்; ஏப்ரல் 12 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் நிலையில் அதற்கு முதல்நாள் ஏப்ரல் 11 அன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள தேர்வை அதற்கும் ஓர் நாள் முன்னதாக ஏப்ரல் 10 அன்று நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு.வா.அண்ணாமலை.
இந்நிலையில், ”4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் தேர்வை 22-ஆம் தேதிக்கும், 12-ஆம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வினை 23-ந்தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது.” என்பதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிடும் நிலையில், ஏறத்தாழ 17 நாட்கள் இடைவெளியில் தேர்வை தள்ளி வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
மிக முக்கியமாக, 17 நாட்கள் இடைவெளியில் அதுவரை படித்தவற்றை பள்ளி மாணவர்கள் மறந்துவிடுவார்கள்; கோடைவிடுமுறையை திட்டமிடுதலிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். தேர்தல் பணி காரணமான நெருக்கடியினால்தான் இந்த இக்கட்டான நிலை நேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு.வா.அண்ணாமலை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,
”அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு.வா.அண்ணாமலை அவர்களின் அலைபேசித் தொடர்பில் – மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் மாற்றத்திற்கான காரணங்களை எடுத்துக் கூறினார்.
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆண்டுத்தேர்வு அட்டவணையில் உருது பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, 11-ந்தேதி ரம்ஜான் பண்டிகை முடித்து 12ஆம் தேதி தேர்வு எழுத மாணவர்கள் வருகையில் பாதிப்பு இருக்கும் – மாற்றி அமைத்திட கேட்டுக்கொண்டோம். தேர்வு இல்லா தேதி ஏப்ரல் 4, 6 உள்ளன.
5-ஆம் தேதி தேர்வினை 4ஆம் தேதியும், 11ஆம் தேதி தேர்வினை 6ஆம் தேதியும் நடத்துவதற்கு குறிப்புகள் தந்திருந்தீர்கள் பெருத்த வரவேற்பினை பெற்றிருந்தது.
திடீர் மாற்றம் ஏன்?
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்:
உருதுப் பள்ளியில்தான் முஸ்லீம் மாணவர்கள் படிக்கிறார்களா ? 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் உள்ள பல பள்ளிகளில் முஸ்லீம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன என சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் முஸ்லிம் மாணவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் தேர்வை 22ஆம் தேதிக்கும், 12ஆம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வினை 23-ந்தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது.
1 முதல் 3-ஆம் வகுப்பு வரை – 5-ந்தேதியுடன் தேர்வு முடிந்து விடுகிறது. அவர்களுக்கு பள்ளி விடுமுறை.
4-ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் 8-ந்தேதிக்குப் பிறகு 22, 23-ந்தேதி தேர்வு எழுத வந்தால் போதும். 24ஆம் தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறையாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் பணி, பள்ளிக் கட்டிடம் பார்வை – அழுத்தம் இருக்கும் என்பதால் 15, 16 தேர்வு மாற்றி அமைத்திட வாய்ப்பில்லை என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அவர்களிடம் நிலைமைதனை எடுத்துரைத்தார்கள்.
அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்:
29-ந்தேதி எங்களை பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அரியலூர் எங்கள் இயக்க அலுவலகத்திற்கு சந்திக்க வந்த தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சரும் தேர்வுகால அட்டவணை மாற்றத்தினை தெரிவித்து இந்த ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் நிலையான உத்தரவினை போட முடியவில்லையே? என்ன காரணம் என நம்மிடம் கேட்டார்.
அவர் உணரும்படியான நிலைமைதனை எடுத்துக் கூறினோம். 5-ந்தேதி தேர்வு முடித்தபின் 22-ந்தேதி பள்ளிக்கு வருகிறார்கள்.
17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?
இயக்குநர்கள் அளவில் என்ன செய்யமுடியும் ? கல்வித்துறையில் குழப்பமான முடிவுகள் தொடர்கதையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அண்ணன் ஐபெட்டோ அவர்கள்.
இனியும் மாற்றம் இருக்குமா?
நடந்தால் வியப்படையத் தேவையில்லை. கல்வித்துறை பன்முகத் தன்மையாளர்களின் கரங்களில் சிக்கியுள்ளதை அறியமுடிகிறது. வழி பிறந்திட வழி காண்போம்.
வரவேற்க வேண்டியதை என்றும் வரவேற்று பாராட்டும், வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்.” என்பதாக அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அங்குசம் செய்திப்பிரிவு.