உஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..
மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில்
திருச்சி பீமநகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் பணமோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆவணங்கள் தயார் செய்து சமர்பித்துள்ளார். இஸ்மாயில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டறிந்த நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையெடுத்து சம்மந்தப்பட்ட பாலக்கரை காவல்நிலையம் இஸ்மாயில் மீது 420 பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்மாயில் என்பவர் மோசடி குறித்து ஏற்கனவே அங்குசம் இதழில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்…
அங்குசம் இதழில் வெளியான கட்டுரை…
திருச்சி விமான நிலையம் அருகே கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்-2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற பெயரில் முகமது இஸ்மாயில் என்பவர், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக அலுவலகம் திறந்ததுடன், தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது என்று விளம்பரப்படுத்தினார்.
அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்க இளைஞர்கள், பட்டதாரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்தார். அவர்களுக்குச் சம்பளம் தராமல் மாதக்கணக்கில் இழுத்தடித்தார். மேலும், 12-ம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பதாகக் கூறி விண்ணப்பங்கள் வாங்கினார்.
மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு கமிஷன் பார்த்ததாகவும், ஜான்போஸ்கோ என்பவரின் மகனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துவிட உதவுகிறேன் என்று கூறி ஏமாற்றியதாகவும் இஸ்மாயில் மீது புகார் கூறப்பட்டது. தவிர, சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியுடன் தன்னுடைய அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகக் கூறியதுடன், அந்தக் கல்லூரியில் மெடிக்கல் சீட் கிடைத்துள்ளதற்கான ஆணைகளை ஜான்போஸ்கோவிடம் கொடுத்து, 11 லட்ச ரூபாய் பணத்தை இஸ்மாயில் வாங்கியுள்ளார்.
ஆனால், அந்த நபர் மோசடிப் பேர்வழி என்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியாகவே தெரியவந்தது. அதிகாரிகள் சிலரின் துணையுடன் பாதிக்கப்பட்டவர்களை முகமது இஸ்மாயில் மிரட்டியும் வந்துள்ளார்.
இதே போல ஜங்சன் பகுதியில் சேர் மார்கெட்டில் பணம் கட்டினால் இரண்டு மடங்காக மாறும் என்று” சொல்லி இலட்ச கணக்கில் மோசடி செய்தும். போலீசில் புகார் செய்தவுடன் இல்லை நான் கடனாக தான் வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தருகிறேன் என்று சொல்லி தலைமறைவானவர் தான் அதன் பிறகு தற்போது அப்துல்கலாம் வேடம் போட்டு சுற்ற ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் இஸ்மாயிலை தெரிந்தவர்கள்.
இப்போ மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முகமது இஸ்மாயில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆகியோரைச் சந்தித்துத் தன்னுடைய கல்வித் திட்டம் குறித்து விளக்கியுள்ளார். அப்போது அமைச்சர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் எடுத்து, அந்தப் படங்களை தன் நட்பு வட்டாரங்களுக்குள் பகிர்ந்துகொண்டதுடன், தனக்கு அமைச்சர்கள், போலீஸ் எல்லாம் சப்போர்ட் என்பது போன்று காட்டிக்கொண்டார். அதனால் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற தோரணையிலேயே வலம் வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முகமது இஸ்மாயில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரைச் சந்தித்து என்னுடைய திட்டங்கள் குறித்து விளக்கினேன். அப்போது ஜெயலலிதா, `ஐந்து வருடம் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். பிறகு தமிழக அரசு மூலம் உதவிகள் செய்கிறேன்’ என உறுதியளித்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களைக் கடந்தவாரம் சந்தித்து, `1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடங்கி ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் எங்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கியதுடன், இதற்கான செலவில் 75 சதவிகிதத் தொகையைத் தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் உதவி செய்கிறோம்’ என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதற்காகவே இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு” என்றார்.
அப்போது பத்திரிகையாளர்கள், “உங்கள் அமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா?, உங்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளனவே?” என்ற கேள்விகளை முன் வைத்தார்கள் “இந்த அமைப்பை முறையாகப் பதிவு செய்யவில்லை. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் அளித்ததன் பேரில் பணிகளைச் செய்கிறோம். விரைவில் தமிழக அரசின் அங்கீகாரம் கிடைக்கும். என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக டி.ஜி.பி-வரை கொண்டு சென்றுள்ளேன். அதனால் இதுகுறித்துப் பேச வேண்டாம் ப்ளீஸ்”என்றார்.
தொடர்ந்து விடாமல் பத்திரிகையாளர்கள் அவரிடம்“பதிவு செய்யப்படாத உங்கள் அமைப்புக்கு நிதி வசூல் செய்வது சட்டப்படி தவறு தானே ?” என்ற கேள்வியை முன் வைக்க, “அதெல்லாம் தவறில்லை; நாங்கள் சட்டப்படிதான் செயல்படுகிறோம்” என மழுப்பினார்.
தொடர்ச்சியாக புகார் வந்ததன் அடிப்படையில், ஏப்ரல் 17-ம் தேதி, மோசடி புகாருக்குள்ளான முகமது இஸ்மாயில் மீது திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து முகமது இஸ்மாயில் தலைமறைவானார். இதற்கிடையே, திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் நண்பருடன் இருந்த இஸ்மாயிலை தனிப்படை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய காவல்துறையினர், “ அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், துணை ஆணையர் மயில்வாகனன், பொன்மலை உதவி ஆணையர் அப்துல் அஜீஸ் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது முகமது இஸ்மாயில், மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறிப் பல லட்சம் ரூபாய் வாங்கியதை ஒப்புக்கொண்டார். அந்தப் பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்ய முயற்சி செய்தோம். ஆனால், அது முடியாமல் போனது. இனியும் தாமதிக்கக் கூடாது என்பதால் அவரைக் கைது செய்தோம்” என்றார்.
அங்குசம் இதழில்… வெளியான கட்டுரை
திருச்சியில் அரசு வழக்கறிஞர் பெயரில் உலா வந்த டுபாக்கூர் கைது..