ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு ‘ சீல்’ வைத்த அதிகாரிகள்!
ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட
5 கடைகளுக்கு ‘ சீல்’ வைத்த அதிகாரிகள்!
ஊரடங்கு விதிகளை மீறி தஞ்சாவூரில் செயல்பட்ட எலக்ட்ரிக்கல்ஸ், பேக்கரி மற்றும் தேநீர்க் கடை என மொத்தம் 5 கடைகளுக்கு தலா ரூ5,000 அபராதம் விதித்ததோடு, அக்கடைகளை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர் அதிகாரிகள்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ் ஊரடங்கின்போது, மருந்து கடைகள், பால் பூத் ஆகியவை மட்டுமே முழுவதுமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள் மதியம் 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படலாம் என அரசு அனுமதித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் சர்வீஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதர வணிக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, ஊரடங்கு விதிகளை மீறி செயல்படும் கடைகளை கண்காணித்து, அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே ஊரடங்கு விதிகளை மீறி இன்று செயல்பட்ட ‘லக்கி எலக்ட்ரிக்கல்ஸ்’ என்ற 2 எலக்ட்ரிக்கல்ஸ் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதோடு, அக் கடைகளின் உரிமையாளருக்கு தலா ரூ5,000 அபராதம் விதித்தனர்.
அதேபோல, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மெகனன் என்ற பேக்கரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்திலும் விதிமுறைகளை மீறி விற்பனை நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அக் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அக் கடை உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்தனர். அதேபோல, ஜுபிடர் தியேட்டர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஐங்கரன் பேக்கரியை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், அக் கடை உரிமையாளருக்கு ரூ5,000 அபராதம் விதித்தனர்.
அதேபோல, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கீழவாசல் நான்கு ரோடு பகுதியில் செயல்பட்ட ஐங்கரன் தேநீர் கடைக்கு அதிகாரிகள் ரூ5,000 அபராதம் விதித்தனர்.