திருச்சி மாநகர கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டு…
திருச்சி மாநகர கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டு…
திருச்சி மாநகர வெவ்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் அதி தீவிரம் காட்டி தண்டனை பெற்றுக்கொடுத்த தனிப்படை காவலர்களை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார்.
திருச்சி மாநகரில் கடந்த 8/5/2021 அன்று உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரணவ் ஜுவல்லரி எனும் கடையின் ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை சென்றவர் மீண்டும் திருச்சி திரும்பவில்லை என்று கடை உரிமையாளர் மதன் அளித்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் புகாரை ஏற்று விசாரணை தொடங்கப்பட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட மார்ட்டின் ஜெயராஜ் சென்ற காரின் டிரைவர் தனது கூட்டாளிகளுடன் மார்ட்டினை ஆதாய கொலை செய்ததாக கண்டு பிடிக்கப்பட்டு பின்னர் ஏழு பேர் கொண்ட கும்பலை பிடித்து அக்கும்பலிடமிருந்து இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதில் புகாரினை ஏற்று 6 மணி நேரத்தில் ஏழு குற்றவாளிகளை பிடித்து உடமைகளையும் மீட்ட குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாதவன் செபஸ்டின் தலைமை காவலர் விஜயராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்யவும் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவும் உதவியாக இருந்துள்ளார்கள்.
மேலும் கடந்த 9/5/2021 அன்று இரவு 7 மணி அளவில் திருச்சி ஹீபர் ரோடு ஏ கே பி மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக ஏழு நபர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திருச்சி வழக்கறிஞர் கோபி கண்ணன் என்பவரை நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நான்கு கோணங்களில் வலைவிரித்து தேடி கைது செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளை பிடிப்பதில் துரிதமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி செல்வம் தலைமை காவலர்கள் சரவணன், ஜானி ,இனுஸ்டின் , செல்லர் ஜேக்கப் தனசேகரன் சவுக்கத்அலி ஆகியோர் கொண்ட குழுவினை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் வரவழைத்து அவ்விரு தனி படையினருக்கும் வெகுமதி வழங்கி சான்றுகள் அளித்து கௌரவித்தார்.
-ஜித்தன்